ஆனந்த் ஸ்ரீனிவாசன்

From Tamil Wiki

ஆனந்த் ஸ்ரீனிவாசன் (பிப்ரவரி 1, 1965) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆனந்த் ஸ்ரீனிவாசன் ராகவன், ருக்மணி இணையருக்கு மகனாக சென்னை மாம்பழத்தில் பிப்ரவரி 1, 1965இல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தங்கை. சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். சென்னை கிறுஸ்தவக்கல்லூரியில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் அக்டோபர் 21, 1992இல் சுதாவைத்திருமணம் செய்து கொண்டார். மகன் அம்ருத் வர்ஷன். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஸ்டெனோவாக 2005வரை பணிபுரிந்தார். 2005 முதல் ஆளுநரின் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலராக இருந்து 2018இல் விருப்ப ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் அ. முத்துலிங்கம், டால்ஸ்டாய், ஜெயமோகன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். 2012 முதல் ”குரு நித்யா” என்ற வலைதளத்தை ஆரம்பித்து குரு நித்யசைதன்ய யதியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் முதல் மொழிபெயர்ப்பு “கூண்டுக்குள் பெண்கள்” நற்றிணை வெளியீடாக 2019இல் வெளியானது. இது விலாஸ் சாரங்கின் ”women in cages” என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஹெச்.எஸ் சிவப்ரகாஷின் "Guru: Ten doors to ancient wisdom" என்ற ஆங்கில நூலை “குரு பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் 2014இல் தொடங்கி 2020வரை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் எழுதிய வெண்முரசு நாவல் வரிசையை, ஒவ்வொரு நாளும் பிழைதிருத்தி, தகவல்களைச் சரிபார்த்து உதவிய சுதா, ஆனந்த் ஸ்ரீனிவாசன் தம்பதிகளை வெண்முரசின் இணையாசிரியர்களாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • கூண்டுக்குள் பெண்கள் (2019, நற்றிணை)
  • குரு பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் (2019, நற்றிணை)
படைப்பு இடம்பெற்ற தொகுப்புகள்
  • வேங்கைச் சவாரி தொகுப்பு
  • யதி தத்துவத்தில் கனிதல்

இணைப்புகள்