ஆட்சிப்பாக்கம் குன்று

From Tamil Wiki
Revision as of 12:42, 16 February 2022 by Ramya (talk | contribs)

ஆட்சிப்பாக்கம் குன்று (பொ.யு. 9ஆம் நூற்றாண்டு) திண்டிவனத்தில் அமைந்த பாறை சிற்பக் கோவில். குன்றின் நடுப்பகுதியில் பார்சுவநாதர் சிற்பம் உள்ளது

இடம்

திண்டிவனத்திலிருந்து பத்தொன்பது கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள சிற்றூர் ஆட்சிப்பாக்கமாகும். இவ்வூரில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சற்று தொலைவில் அதிக உயர மற்ற குன்று ஒன்று காணப்படுகிறது.

அமைப்பு

இக்குன்றின் மேற்பகுதியில் துறவியர் வசித்து வந்திருக்க வேண்டும், மையமாகத் திகழும் பாறையின் சமமான பகுதியில் துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், இங்குள்ள பாறைச்சிற்பத்தை ஒட்டிப்பந்தல் போன்ற அமைப்பு பாதுகாப்பு அளிக்கிறது.

பார்சுவநாதர் சிற்பம்

குன்றின் நடுப்பகுதியிலுள்ள பாறையில் மேற்குத்திசையை நோக்கியவாறு ஐந்தடி உயரத்தில் பார்சுவநாதரின் சிற்பம் உள்ளது. பார்சுவதநாதர் இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர் ஆவார். ஊருக்கு சற்று வெளியேயுள்ள பள்ளிக்கு பின் புறம் குன்றின் மேல் அமைந்துள்ள அச்சிற்பத் தொகுப்பில் பத்மத்தின் மேல் நிற்கும் ஸ்ரீபார்ஸ்வநாதர், தலை முதல் கால்வரை ஐந்து தலை நாகத்துடன் இருக்கிறார். சராசரி மனிதன் உயரமுள்ள அச்சிற்பத்திற்கு வலது புறத்தில் ஸ்ரீதரணேந்திரன் வணங்கிய நிலையிலும் இடப்புறம் ஸ்ரீபத்மாவதி தேவியர் கையில் குடையுடன் காணப்படுகின்றார். அவருக்கு வலது மேலே கம்டன் சினத்தை வெளிப்படுத்து முகமாக, எண்கரங்களுடன், நான்கு கரங்களில் பாறை ஒன்றினை சுமந்து வருவது போலவும், மற்ற இரண்டில் ஆயுதத்துடனும், மேலும் இரண்டில் பயமுறுத்தும் கோலத்துடனும் வடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இரண்டு, நான்கு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இடது மேல்புறம் தேவ அரசன் புஷ்பக விமானத்தில் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது . ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் எல்லைக்கடந்த பொறுமையும் , சகிக்கிப்புத்தன்மையும் வெளிப்படுத்தும் முகமாக அமைத்து அவரின் அஹிம்சை யுணர்வை வெளிக்காட்டியுள்ளனர். இருப்பினும் பாறையின் உஷ்ண மாறுபாட்டால் அவர் உருவத்தில் இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

வழிபாடு

சுற்றிலும் சமண மதத்தைச் சேர்ந்த மக்கள் இல்லையெனினும் அருகிலுள்ள பேராவூரைச் சேர்ந்த மக்கள் குன்றின்மேல் அமைந்த அப்பாறைச் சிற்பத்திற்கு கருவறையை அமைத்து கதவிட்டு ஆலயம் போல் பாதுகாத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் தினத்தன்று மக்கள் வழிபடுகின்றானர்.

உசாத்துணை