உத்தமசோழன்

From Tamil Wiki
Revision as of 20:52, 20 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அ. செல்வராஜ் (உத்தமசோழன்; வைரவசுந்தரம்) (நவம்பர் 19, 1944) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய பல புதினங்களை, சிறுகதைகளை எழுதினார். 'கிழக்கு வாசல் உதயம்’ என்னும் இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர். ஓய்வு பெற்ற தமிழக அரசு அதிகாரி.

பிறப்பு, கல்வி

செல்வராஜ் என்னும் இயற்பெயர் கொண்ட உத்தமசோழன், வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டில், நவம்பர் 19, 1944 அன்று, அருணாச்சலம் – சௌந்தரவல்லி இணையருக்குப் பிறந்தார். தந்தையின் பணி நிமித்தம் வெள்ளங்கால் என்ற கிராமத்தில் வசித்தார். அருகில் உள்ள சிற்றூரான இடையூரில் தொடக்கக் கல்வி பயின்றார். திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூலில் உயர்கல்விப் படிப்பை முடித்தார். மதுரை காமராசர் பல்கலையில் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

உத்தமசோழன் படிப்பை முடித்ததும் அரசுப் பணியில் சேர்ந்தார்.  திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். பல்வேறு படிநிலைகளில் பணியாற்றிய இவர், வட்டாட்சியராக உயர்ந்து பணி ஓய்வு பெற்றார். மனைவி: செ. சரோஜா. மகன்கள்: அ. செ. மணிமார்பன், அ. செ. மாமன்னன்.

உத்தமசோழன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

உத்தமசோழன், சிறுவயதில் தாத்தாவிடம் கேட்ட கதைகளும், வாசித்த நூல்களும்  எழுத்தார்வத்தைத் தூண்டின. தந்தையின் பணி நிமித்தம் காரணமாகப் பல ஊர்களில் வசித்ததும், தனது பணி காரணமாகச் சந்தித்த பல மனிதர்களின் அனுபவங்களும்  எழுதத் தூண்டின. முதல் சிறுகதை ‘இரண்டு ரூபாய்', 1983-ல், குங்குமம் வார இதழில் வெளியானது. ‘உத்தமசோழன்’ என்ற புனை பெயரில்  குமுதம், ஆனந்த விகடன், அமுதசுரபி, தினமணி கதிர் எனப் பல இதழ்களில் எழுதினார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘துணை என்றொரு தொடர்கதை’ சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் இந்த நூல் பாட நூலாக இருந்தது. இவரது ‘முதல் கல்’ என்னும் சிறுகதை, பனிரெண்டாம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்தில் இடம் பெற்றது. ‘தேகமே கண்களாய்’ நாவல் பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. ‘ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவது ‘பத்தினி ஆடு’. இவரது ‘கசக்கும் இனிமை' சிறுகதை, கே.பாலசந்தரின் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடராக வெளியானது.   உத்தம சோழன் பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள் எம்.பில், பிஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளனர். இவரது சில கதைகள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கிழக்கு வாசல் உதயம் இதழ்

இதழியல்

’கிழக்கு வாசல் உதயம்’ என்ற இலக்கியச் சிற்றிதழை 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

பதிப்பகம்

’கிழக்கு வாசல் பதிப்பகம்’ மூலம் நூல்களை வெளியிட்டு வருகிறார்.