அ.அ.மணவாளன்

From Tamil Wiki
அ.அ.மணவாளன்

ஏ. ஏ. மணவாளன் (1937–2018) தமிழறிஞர். இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பயிற்சி கொண்டவர். மரபிலக்கியங்களை பதிப்பிப்பது, உரை எழுதுவது அகியவற்றில் ஈடுபட்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

1935ஆம் ஆண்டில் அப்பாவு என்ற தெலுங்குக் கவிஞருக்கும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும், விழுப்புரம் மாவட்டம் அரும்பராபட்டு என்ற ஊரில் பேரா.அ.அ.மணவாளன் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பேரூர் சாந்தலிங்க சாமி கலைக்கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார்

மில்டன் மற்றும் கம்பனில் இதிகாசக் கதாநாயகத்துவம் என்ற தலைப்பில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அ.அ.மணவாளன் பாராட்டு

தனிவாழ்க்கை

அ.அ.மணவாளானுக்கு சரசுவதி என்ற மனைவியும், சீனிவாசன் (46) ஜகன்மோகன் (45) என்ற மகன்களும், பிருந்தா (52) என்ற மகளும் உள்ளனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியிலும் அடுத்து உலகத்தமிழாராய்சி நிறுவனத்திலும் பணி யாற்றிய பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் தமிழ் ஆங்கில அகராதித் திட்டத்தில் பணியாற்றுவதற்காகச் சேர்ந்தார். சென்னை பல்கலையில் பேராசிரியர், துறைத்தலைவர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

அ.அ.மணவாளன் தமிழிலக்கிய ஆய்வில் ஒப்பிலக்கியத்துறையில் முக்கியமானவர். ஒப்பிலக்கிய கௌரவ ஆய்வு உதவித்தொகை (Fulbright Honarary fellowship for comparative literature) பெற்று ஒப்பியல் ஆய்வுக்குப் புகழ்பெற்ற இந்தியானா (Indiana) பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.பின்னர் சிகாகோ பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், தெற்குக் கரோலினா பல்கலைக்கழகம் (University of South Corolina, Columbia) ஆகியவற்றில் ஒப்பிலக்கியம் கற்றார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஒப்பியல் ஆய்வில் முக்கிய அறிஞரான உல்ரிச் வெய்ஸ்ட்டின் (Ulrich Weistein) மற்றும் ஹென்றி ரீமாக் (Henry Remak) ஆகியோரிடம் ஒப்பியல் ஆய்வு நெறிமுறை பற்றியும், ஒப்பியல் துறைகடந்ததோர் ஆய்வாக இருப்பது குறித்தும் பயிற்சி பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உலக காப்பிய இலக்கியம் குறித்தும், இலக்கிய வகைமைகள், அவற்றின் கால ஆய்வுகள் குறித்தும் கற்றார். அன்னா பாலக்கியன் (Anna Balakian) இடம் இலக்கிய வகைமைகள் குறித்த ஆய்வுகள் பண்பாட்டு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டிய தேவை உள்ளதைப் பற்றி அறிந்தார்.

உலகத்தமிழ் இலக்கிய வரலாறு- கி.பி 901 முதல் கி.பி.1300 வரை (2006), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் (1994) என்ற இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். சாகித்திய அகாடெமிக்காகத் தமிழ்ப் பக்தி இலக்கியம்(2004) என்னும் பெருந்தொகை நூல் ஒன்றைத் தொகுத்து அவற்றை வாசிப்பதற்கான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார்

கே.கே.பிர்லா அமைப்பு வழங்கும் சரஸ்வதி சம்மான் விருது 2005ல் இவர் எழுதிய 'ராமகாதையும் ராமாயணங்களும்" என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூலுக்காக வழங்கப்பட்டது. அந்த நூல் உலகம் முழுதும் வழங்கும் 48 ராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பு. பாலி, சம்ஸ்கிருதம், பிராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய ஜாவா மொழி, ஜப்பானிய மொழி, தெலுங்கு, அஸாமி, தாய் மற்றும் காஷ்மீரி ஆகியவற்றில் வழங்கப்படும் ராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது .

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். {பார்க்க தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர்கள்)

மறைவு

அ.அ.மணவாளன் 1 டிசம்பர் 2018 அன்று மறைந்தார்.

இலக்கிய இடம்

மரபான கல்வித்துறை அணுகுமுறை கொண்ட ஆய்வுகளைச் செய்தவர். சர்வதேசத்தன்மை கொண்ட முறைமையும் மிக விரிவான தரவுச்சேகரிப்புகளும் கொண்ட ஆய்வுகள் அ.அ.மணவாளனால் முன்வைக்கப்படுபவை. பண்பாடு சார்ந்த தனிப்பார்வையோ மேலதிக சிந்தனைக்கான தூண்டுதல்களோ அவற்றில் இருப்பதில்லை. ராமாயண ஆய்வு மட்டுமே தரவுகளின் ஒப்பீடு என்னும் இடத்திற்கு மேல் எழுந்து அவருடைய தனிப்பார்வையை காட்டுவதாக உள்ளது. அது காலந்தோறும் இடந்தோறும் ராமாயணம் மறு ஆக்கம் செய்யப்படுவதிலுள்ள சில பொதுப்போக்குகளை விளக்குகிறது.

விருதுகள்

  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருது
  • சரஸ்வதி சம்மான் விருது 2012
  • தமிழக அரசு கபிலர் விருது 2012

நூல்கள்

உசாத்துணை