under review

அவ்வெனும் எழுத்தினால்

From Tamil Wiki
Revision as of 18:29, 21 April 2024 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அவ்வெனும் எழுத்தினால் : சிவவாக்கியரின் புகழ்பெற்ற பாடல். சித்தர் மரபுக்குள் உள்ள அத்வைதக் கொள்கைக்குச் சான்றாகச் சுட்டிக் காட்டப்படுவது

ஆசிரியர்

தமிழ் சித்தர் மரபு என இருபதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதில் குறிப்பிடப்படும் முதன்மையான பதினெட்டு தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் எழுதிய பாடல். சிவவாக்கியரின் பாடல்கள் வாய்மொழியாக இருந்து பின்னர் அச்சில் வந்தன. எஸ். வையாபுரிப் பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் முறையான சுவடிச்சான்றுகள் இல்லை என்பதனால் சித்தர்பாடல்களை நம்பகமான பழைய நூல்கள் என கருதுவதில்லை. தமிழ்ச் சைவ மரபுக்குள் இருந்த வெவ்வேறு சிந்தனைமுறைகளைச் சார்ந்தவர்கள் சித்தர்கள்.

பாடல்

அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை
உவ்வெனும் எழுதினால் உருத்திரிந்து வந்தனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அகர உகர மகாரமாய் நின்றதே சிவாயமே

உரை

'அ' எனும் எழுத்து நீ பிளவற்ற ஒருமையாக நின்றதை குறிக்கிறது. 'உ' என்னும் எழுத்து நீ உருத்திரிந்து வந்ததை குறிக்கிறது. 'ம்' என்னும் எழுத்து உன்னை இந்த உலகமாக உயிர்கள் கருதி மாயைகொண்டு மயங்கியதை குறிக்கிறது. அ, உ, ம் (ஓம்) என நின்ற நீயே சிவம்

இடம்

சிவவாக்கியரின் இப்பாடலில் அத்வைத வேதாந்த மரபு முன்வைக்கும் அடிப்படைக் கொள்கை சிவதத்துவமாக விரித்துரைக்கப்பட்டுள்ளது. பிரம்மம் எந்த இருமையும் இல்லாமல் முழுமையாக இருந்து பருவெளியாக மாறி உலகமாக உயிர்களால் மாயை கொள்ளப்படுகிறது என சொல்கிறது. பிரம்மம் உருத்திரிவதாகச் சொல்வதனால் இது விவர்த்த வாதம் முன்வைக்கும் அத்வைதப் பார்வையை கூறுகிறது என்று சொல்லப்படுகிறது. சைவமரபுக்குள் உள்ள அத்வைத தரிசனத்தின் சான்றாகக் காட்டப்படும் பாடல்.

உசாத்துணை

  • பன்னிரு சித்தர் பாடல்கள்
  • பெரியஞானக்கோவை


✅Finalised Page