first review completed

அம்மன்கிளி

From Tamil Wiki
அம்மன்கிளி
அம்மன்கிளி

அம்மன்கிளி (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1956) ஈழத்து எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர். கா. சிவத்தம்பியின் 'Drama in Ancient Tamil Society' என்ற நூலின் தமிழ் மொழியாக்கத்துக்காக அறியப்படுகிறார். கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

அம்மன்கிளி இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் கைலாயநாதன், கைலாயநாதம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 26, 1956-ல் பிறந்தார். யாழ் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, யாழ் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை ஆகியவற்றில் பள்ளிக்கல்வி பயின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப் பயின்று இளங்கலை, முதுகலை கலாநிதி பட்டங்கள் பெற்றார். அம்மன்கிளி முருகதாஸ் என்பவரை மணந்தார்.

ஆசிரியப்பணி

அம்மன்கிளி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகவும், முதுகலைப்பட்ட இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஆய்வு வாழ்க்கை

அம்மன்கிளி ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை ஆய்வு செய்தார். பெண்களும் வர்க்கமும் தொடர்பாக சங்க இலக்கியங்களை மையமாகக்கொண்ட ஆய்வுகளை செய்தார். ஜீவநதியில் '1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை' என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதினார்.

இதழியல்

அம்மன்கிளி மட்டக்களப்பில் இயங்கும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் பெண்கள் இதழின் ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அம்மன்கிளி சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம் ஆகியவை சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 'Drama in Ancient Tamil Society' என்ற ஆங்கில நூலை 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் நிவேதினி பால்நிலை கற்கை நெறி உட்பட பல இதழ்களுக்கு பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார்.

விருதுகள்

  • கா.சிவத்தம்பியின் 'Drama in Ancient Tamil Society' என்ற ஆங்கில நூலின் 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' என்ற தமிழாக்கத்துகாக தமிழ்நாடு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2005-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகையில் விருது வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்

  • சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்
  • ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
  • சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும்
மொழிபெயர்ப்பு
  • பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (கா.சிவத்தம்பி)

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.