அதிபத்த நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
(அதிபத்த நாயனார் - முதல் வரைவு)
 
(புகைப்படங்கள் இணைக்கப்பட்டன)
Line 1: Line 1:
[[File:Adhipatthar.jpg|alt=அதிபத்த நாயனார் - வரைபட உதவி நன்றி - shaivam.org|thumb|அதிபத்த நாயனார் -  வரைபட உதவி நன்றி - shaivam.org]]
அதிபத்த நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
அதிபத்த நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.



Revision as of 09:36, 22 April 2022

அதிபத்த நாயனார் - வரைபட உதவி நன்றி - shaivam.org
அதிபத்த நாயனார் - வரைபட உதவி நன்றி - shaivam.org

அதிபத்த நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அதிபத்த நாயனார் சோழநாட்டு நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற ஊரில் பரதவர் குலத்தில் பிறந்தவர். பரதர் குலத்தலைவர். சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். தனக்குக் கிடைக்கும் மீன்களில் சிறந்ததை சிவபெருமானுக்கு படைப்பதை தன் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த நெறியில் இருந்து தவறாது இருந்தார்.

சிவனின் ஆடல்

சிவனின் ஆடலால் அதிபத்தருக்கு நாளொன்றுக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதும் அந்த ஒரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபத்தர் பசியோடு இருந்தார். அவரைப் போலவே அவரது குடும்பமும் உறவுகளும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதிபத்தர் தன்னுடைய நெறியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு மீன் அர்ப்பணிக்கும் சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் தங்க மீன் ஒன்றை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்னாலான மீனாக இருந்தது. பரதவர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள். அன்றைய தினம் அந்த மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தருக்கு சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்து முக்தியளித்தார்.

பாடல்கள்

  • திருத்தொண்டர் திருவந்தாதியில் இக்கதையை விளக்கும் பாடல்:

திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்

றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக

நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்

புறமமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே

  • திருத்தொண்டர் புராணத்தில் இக்கதையை விளக்கும் பாடல்:

அலையாருங் கடல்நாகை நகருள் வாழும்

அதிபத்தர் பரதவர்கள் அதிபர் வேலை

வலைவாரி வருமீனில் தலைமீன் ஈசன்

வார்கழற்கே என்றுவிடும் மரபார் பன்னாள்

தலையான தொருமீனே சார நாளும்

தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொன்

நிலையாரும் மணிநயந்த மீன்ஒன்று எய்த

நீத்தருளால் இறைவனடி நேர்ந்து ளாரே.

திருவிழா

ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி ஆலயத்தில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் உற்சவ மூர்த்தியாக கடற்கரையில் எழுந்தருளுவார். தங்க மீனை அவருக்குப் படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்வும் நிகழ்கிறது.

குருபூஜை

அதிபத்த நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016

சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016

63 நாயன்மார்கள்- அதிபத்த நாயனார். தினமலர் நாளிதழ்.