அணில்

From Tamil Wiki
Revision as of 12:31, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அணில் (1968- ) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1968ம் ஆண்டு முதல் மாதம் இருமுறையாக வெளியானது. தமிழகம்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விநியேகிக்கப்பட்டு வந்தது. முதன்மையாக மாயாஜ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அணில் (1968- ) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1968ம் ஆண்டு முதல் மாதம் இருமுறையாக வெளியானது. தமிழகம்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விநியேகிக்கப்பட்டு வந்தது. முதன்மையாக மாயாஜாலக் கதைகளை அதிகமும் வெளியிட்டது (பார்க்க சிறுவர் இதழ்கள் ) இதன் துணை இதழாக அணில் மாமா என்னும் இதழும் வெளிவந்தது.

வெளியீடு

புதுச்சேரியைச் சேர்ந்த புவிவேந்தன் என்பவரால் தொடங்கப்பட்ட அணில் மாதமிருமுறை இதழ் சென்னையில் அச்சடிக்கப்பட்டு வெளியானது. மாயாஜாலத்தையும், படக்கதைகளையும் வெளியிட்டதால் சிறுவர்களிடையே அணிலுக்கு வரவேற்பு கூடியது. வண்ண அட்டைகளில் கதைகளின் தலைப்புக்கு ஏற்றபடி ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பு. மேல் அட்டையுடன் சேர்த்து 16 பக்க அளவில் அணில் வெளிவந்தது.இதழின் விலை தொடக்கத்தில் 15 பைசாவாகவும், பின்னர் 25 பைசாவாகவும் இருந்துள்ளது. அணில் இதழ் சார்பில் தீபாவளி மலர் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீபாவளி மலரின் விலை 50 காசு.

அணில் இதழின் முதல்பக்கத்தில் வேல் போன்ற அமைப்புடைய வடிவத்தின் உள்ளே அணில் ஒன்று கனியை கையில் வைத்திருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த சித்திரமே அணில் பத்திரிகையின்அடையாளம்

'நீ படி, நீ உழை, நீ பிழை நன்றாய்

நீ பிறர்க்குதவி செய் நற்குணக்குன்றாய்!'

- என்ற பாரதிதாசனின் வரிகள் ஒவ்வொரு அணில் இதழின் முதல் பக்கத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

உள்ளடக்கம்

அணில் இதழில் கதைகள், செய்தித்துணுக்குகளுடன் படக்கதைகளும் வெளியாயின. நீண்ட காலமாக தவளைத்தீவு என்ற படக்கதை அனைவரையும் கவர்ந்தகதையாக வெளிவந்துள்ளது. இந்தக்கதையை எழுதியவர் அணில் அண்ணா புவிவேந்தன். இதில் கார்ட்டூன் படங்களை வரைந்த உபால்டு பிற்காலத்தில் சினிமா ஓவியராக ஆனார். படக்கதைகளை ஓவியர் ரமணி, உபால்டு மற்றும் கிட்டு ஆகியோர் வரைந்துள்ளனர். ’மந்திர சாவி', 'பூங்காட்டுப்புதையல்' ஆகிய தொடர்கதைகள் வெளியிடப்பட்டன. வாசகர்கள் எழுதிய 'அணில் முத்திரைக் கதைகள்' தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒரு பக்க அளவில் 'உங்கள் கடிதம்' பகுதி வெளியாகி உள்ளது. இதில் ஆசிரியருக்கு சிறுவர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒரு பக்க அளவில் 'அணில் அண்ணா பதில்கள்' வெளியாகி உள்ளது. அணிலில் ஒரே ஒரு வர்த்தக விளம்பரம் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது அட்டை அல்லது பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. 'வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ட் கோ' என்ற பெயரில் வெளியான மின்சாதன பொருள் விற்பனையாளரின் விளம்பரம் இதழுக்கு பொருளாதார அளவில் உதவி செய்திருக்கிறது. மற்ற காமிக்ஸ் விளம்பரங்களும் அணிலில் பிரசுரமாகி உள்ளன. 'வாண்டு மாமா', 'வேங்கை' போன்ற சிறுவர் இதழ்களின் விளம்பரங்ளும் அணிலில் இடம் பிடித்துள்ளன. ஞானி பதிப்பகம், கலை பிரசுரம் ஆகிய பதிப்பகங்களின் விளம்பரங்களும் அணிலில் வந்துள்ளன.

போட்டிகளும்-பரிசுகளும்

அணில் தனது வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு வித்தியாசமான போட்டிகளை நடத்தியுள்ளது. அதில் ஒன்று 'செக் பரிசுத்திட்டம்'. அதாவது ஒரு காசோலையில் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ஒரு தொகையை வாசகர்கள் குறிப்பிட்டு எழுத வேண்டும். அணில் எழுதி வைத்துள்ள தொகையும் வாசகர் எழுதியுள்ள தொகையும் ஒன்றாக இருந்தால் அந்த வாசகருக்கு ஒரு ரூபாய் பரிசு கிடைக்கும். இந்த போட்டி அதிர்ஷ்டத்தை மையப்படுத்தி இல்லாமல், வாசகர்களை கவர வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

இதைப் போன்று கணக்கு புதிருக்கான போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. எப்படிக்கூட்டினாலும், கூட்டுத்தொகை 15 வரவேண்டும் என்ற 'கணிதப்புதிர் போட்டி' நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கு பெற்று வெற்றிபெறும் சிறுவர்களுக்கு பத்து ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

'சிந்தனை போட்டி' ஒன்றையும் அணில் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. அதாவது 14 வாக்கியங்கள் வரிசையாக தரப்படும். ஒவ்வொரு வாக்கியத்தின் முக்கிய வார்த்தைகளில் சில எழுத்துக்கள் விடுபட்டு இருக்கும். ( உதாரணம்: இந்தப்பிராணி நன்றாகக் கடிக்கும்: -- லி )

விடுபட்ட 14 வார்த்தைகளையும் நிரப்பினால் அந்த வார்த்தைகள் இணைந்து ஒரு வாக்கியமாக தெரியும். அந்த வாக்கியத்தை ஒரு போஸ்ட்கார்டில் எழுதி அனுப்பினால் 25 ரூபாய் பரிசு வழங்கப்படும். பலர் சரியான விடையை எழுதி அனுப்பினால் அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். இந்த போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த சிந்தனைப்போட்டி முடிவு குறித்து 15.7.1974ல் வெளியான அணில் இதழில் ஆசிரியர் எழுதியிருப்பது:

“சென்ற இதழில் அறிவித்திருந்த சிந்தனைப் போட்டியில் 5486 தம்பி-தங்கைகள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் முற்றிலும் சரியான விடையை எழுதியிருந்தவர்கள் 4447 பேர். பரிசுத்தொகையை எப்படி பங்கிட்டுக் கொடுப்பது என்று எனக்கு பெரும் பிரச்னையாகிவிட்டது. எனவே சரியான விடைகளை எழுதிய தம்பி-தங்கைகளில் 25 பேர்களை குலுக்கித் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் பரிசளிப்பதென முடிவு செய்து அவ்வாறே பரிசளிக்கிறேன்...”

இதைப்போன்று அணில் இதழில் வெளியாகும் கூப்பனில் பெயர்-முகவரி எழுதி, அணில் அலுவலகத்திற்கு அனுப்பினால், குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இலவசமாக பேனா' ஒன்று அன்பளிப்பாக வழங்கப்படும் திட்டமும் இருந்துள்ளது. ஒவ்வொரு அணிலிலும் 5 பேருக்கு 'இலவசப்பேனா பரிசு' என்பது அந்த திட்டத்தின் பெயராக இருந்துள்ளது. 'கலர் பென்சில் பாக்ஸ்' பரிசுத்திட்டமும் அணிலில் இருந்துள்ளது.

வாசகர் கடிதம் பகுதியில் பிரசுரமாகும் சிறந்த கடிதத்திற்கு ரூ.2 பரிசாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு ரூபாய் பரிசுத்திட்டம் என்ற திட்டமும் அணிலில் பிரபலமாக இருந்துள்ளது. அதாவது அணிலில் வெளியாகும் 'ஒரு ரூபாய் பரிசு' என்ற கூப்பனில் வாசகர்கள் பெயர், முகவரி எழுதி அனுப்பினாலே போதும். குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் 25 பேர் தேர்ந்தெடுப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

'சித்திரம் இங்கே.. சிரிப்பு எங்கே?' என்றத் தலைப்பில் ஒரு போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அணிலில் வெளியாகும் இரண்டு கார்ட்டூன்களுக்கு ஏற்றவாறு வாசகர்கள் சிரிப்புத்துணுக்கை எழுதி அனுப்ப வேண்டும். ரசிக்கத்தக்க துணுக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்கண்ட கார்ட்டூன்களுடன் பொருத்தி அடுத்த இதழ்களில் பிரசுரமாகும். வெற்றி பெற்ற வாசகருக்கு ரூ.2 பரிசு கிடைக்கும்.


அனைவரையும் கவர்ந்த அணில்

அணில்- அணில் மாமா சிறுவர் இதழ்களில் கதைகளை வெளியிட்டு சிறுவர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கை உருவாக்கியவர் அணில் அண்ணா. இவர் தனது கதைகளில் கையாளும் மொழி சிறுவர்களை கவரக்கூடியது. இதில் இலக்கியம் இல்லாவிட்டாலும், இலக்கணபிழை எங்கேயும் இல்லை. அணில் அண்ணா உருவாக்கிய வீரப்பிரதாபன் வீரத்திற்கும், விவேகத்திற்குமான அம்சம். நீதி போதனைகளை மட்டுமே அணில் அண்ணா போதித்துள்ளார். இவர் கதைகளில் டும்..டும்... டுஷ்யூம்.. டுஷ்யூம் என்ற வன்முறை எங்கும் இல்லை. எதிரிகளை வேட்டையாடும் போது கூட, அவர்களின் சாபவிமோசனத்தை நீங்கும் பரோபகாரியாகவே தனது கதாநாயகன் பாத்திரங்களை படைத்துள்ளார் அணில் அண்ணா.

'டிராகுலாக்கள்' பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வந்த நேரத்தில், டிராகுலாக்கள் பற்றிய திரைப்படங்கள் வெளிநாடுகளில் வந்த காலத்தில் அணில் அண்ணா 'வெளவால்கோட்டை அரக்கன்' என்ற பெயரில் டிராகுலாவை தமிழில் சிறுவர்களிடம் அறிமுகப்படுத்தியவர் அணில் அண்ணா. இதில் ரத்தக்காட்டேரிகளை வீரப்பிரதாபன் ஒழிப்பதாக கதை இருக்கும். அணில் அண்ணாவின் மொழி நடை சிறுவர், சிறுமியரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அன்பான 'தம்பி-தங்கைகளே!' என்று எழுதத் தொடங்கும் அணில் அண்ணாவுடன் சகோதர பாசத்துடன் வாசகர்கள் பழகியுள்ளதை வாசகர் கடிதங்களில் காணமுடிகிறது.

1968 முதல் 1992 வரை, ஏறத்தாழ 25 ஆண்டுகள் வெளிவந்துள்ள அணில் பத்திரிகையை சிறுவர்கள் மட்டுமல்லாமல் வயதான 'தாத்தா-பாட்டிகள்' கூட தொடர்ச்சியாக வாசித்து வந்துள்ளனர். தனக்கென தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்ட அணில் இதழை, மிகை கதைகளின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. சிறுவர்களின் மனதை ஊடுருவி அவர்களின் அறிவுக்கு கற்பனை தீனி போட்ட அணில், சிறுவர் பத்திரிகை உலகில் கொடி கட்டிப்பறந்த சாகச இளவரசன் தான்.

//////////////////////////////////////////////////////////////////////////

கற்பனை ஊற்றெடுக்கும் - சாகசங்கள் பிறக்கும்: அணில் அண்ணா

சிறுவர்களுக்கான புதிய வாசிப்பு முறையை அறிமுகப்படுத்திய அணில் அண்ணா புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் விநாயகம். கடந்த 2009ம் ஜனவரி 14ந் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 60. புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்தது. சிறுவயதில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மளிகைக்கடை நடத்திக் கொண்டிருந்த இவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கிருந்து பல பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளை எழுதிக் கொண்டிந்தார். அப்போது உதயமான எண்ணம் தான் அணில். அணில் பத்திரிகையை 1985 வரை சென்னையிலேயே பிரிண்ட் செய்து, அதற்குபின்னர் புதுச்சேரிக்கு வந்து அணில் அச்சகம் என்ற ஒரு அச்சுக்கூடத்தை துவக்கி அதில் அணிலை பிரிண்ட் செய்து 1992 வரை நடத்தியுள்ளார்.

பின்னாளில் புதுச்சேரி உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும், புதுச்சேரி கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநராகவும், புதுவை தமிழ்ச்சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்த அணில் அண்ணா புவிவேந்தன், அ.தி.மு.க., வின் புதுச்சேரி மாநில இணைச்செயலாளராகவும் இருந்துள்ளார். மாலைபூமி என்ற நாளிதழையும், ஓம் விநாயகவிஜயம் என்ற ஆன்மீக மாத இதழையும் நடத்தியவர். அணில் பதிப்பத்தின் சார்பில் பல்வேறு ஜோதிட நு£ல்களை பிரசுரித்துள்ளார்.

அவருடைய மரணம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அணில் பத்திரிகை பற்றி அவர் என்னிடம் சொன்னது:

சென்னையில் நான் தங்கியிருந்த போது, பல பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்புவேன். சிறுவர் கதைகளையும் எழுதுவேன். அப்போது தோன்றிய யோசனை தான் மாயாஜால கதைகள். திருவல்லிக்கேணி பக்கம் செல்வேன். அங்கு தெரு ஓரங்களில் விற்கும் ஆங்கில புத்தகங்களை பார்ப்பேன். ஓவியங்கள் அதிகமுள்ள புத்தகங்களை 10 பைசா, 20 பைசா கொடுத்து வாங்குவேன். உதாரணமாக ஒரு அட்டையில் ஒரு இளவரசி குதிரையில் வருவது போன்று ஒரு படம் இருக்கும். அந்த படத்தை பார்க்கும் போதே என் மனதில் கற்பனை ஊற்றெடுக்கும். அந்த குதிரைக்கு பதில் ஒரு ஆட்டின் மீது இளவரசி அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். சாகசங்கள் பிறக்கும். கதைக்கு தலைப்பை வைத்து விடுவேன். ஆட்டுக்கிடா இளவரசி. ஓவியர் ரமணியிடம் எடுத்துச் சென்று ஆட்டுக்கிடா இளவரசியை வரையச் சொல்வேன். அற்புதமாக ஓவியம் போட்டுத் தருவார். பின்னர் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டே கதையை எழுதத் தொடங்குவேன். அதில் ஒரு சித்திர குள்ளன் இருப்பான். எறும்பு சாகசம் செய்யும். கோழி பறந்து, பறந்து சண்டை போடும். கற்பனை சிறகடித்து பறக்கும்.

ஓவியர் உபால்டு வரைந்த படக்கதைகளை சிறுவர்கள் விரும்பி வாசித்துள்ளனர். என்னைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு நாளும் மழலைப்பட்டாளம் என் ஆபிஸ் தேடி வரும். பல பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்து என்னை சந்தித்து உரையாடி விட்டு போவார்கள். நான் அவர்களுக்கு பரிசளிப்பேன். அவர்களும் எனக்கு பழம், புத்தகம் வாங்கி வந்து தருவார்கள். முதலில் அச்சுக்கோர்த்து அச்சடித்தும், பின்னர் சிலிண்டர் பிரிண்டில் அச்சடித்தும், ஒரு கட்டத்தில் ஆப்செட் பிரிண்டில் 50 ஆயிரம் பிரதிகளை அச்சடித்து அணில் சாதனை புரிந்து இருக்கிறது.

இப்போது வெளிநாட்டு காமிக்ஸ்களை காப்பியடித்து விற்கிறார்கள். அதில் நம் நாட்டு கலாச்சாரம் இல்லை. மது குடிப்பது போன்ற படங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. துப்பாக்கியால் சுடும் கதைகள் வன்முறையை சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். என்னுடைய கதைகளில் சாகசங்களும், நீதி போதனைகளும் மட்டுமே உண்டு.

கட்டுரையாளர் குறிப்பு:-

கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. அணில் பத்திரிகையின் தீவிர வாசகர். தற்போது, புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.