அணில்

From Tamil Wiki
Revision as of 12:38, 16 February 2022 by Jeyamohan (talk | contribs)

அணில் (1968- ) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1968ம் ஆண்டு முதல் மாதம் இருமுறையாக வெளியானது. தமிழகம்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விநியேகிக்கப்பட்டு வந்தது. முதன்மையாக மாயாஜாலக் கதைகளை அதிகமும் வெளியிட்டது (பார்க்க சிறுவர் இதழ்கள் ) இதன் துணை இதழாக அணில் மாமா என்னும் இதழும் வெளிவந்தது.

வெளியீடு

புதுச்சேரியைச் சேர்ந்த புவிவேந்தன் என்பவரால் தொடங்கப்பட்ட அணில் மாதமிருமுறை இதழ் சென்னையில் அச்சடிக்கப்பட்டு வெளியானது. மாயாஜாலத்தையும், படக்கதைகளையும் வெளியிட்டதால் சிறுவர்களிடையே அணிலுக்கு வரவேற்பு கூடியது. வண்ண அட்டைகளில் கதைகளின் தலைப்புக்கு ஏற்றபடி ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பு. மேல் அட்டையுடன் சேர்த்து 16 பக்க அளவில் அணில் வெளிவந்தது.இதழின் விலை தொடக்கத்தில் 15 பைசாவாகவும், பின்னர் 25 பைசாவாகவும் இருந்துள்ளது. அணில் இதழ் சார்பில் தீபாவளி மலர் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீபாவளி மலரின் விலை 50 காசு.

அணில் இதழின் முதல்பக்கத்தில் வேல் போன்ற அமைப்புடைய வடிவத்தின் உள்ளே அணில் ஒன்று கனியை கையில் வைத்திருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த சித்திரமே அணில் பத்திரிகையின்அடையாளம்

'நீ படி, நீ உழை, நீ பிழை நன்றாய்

நீ பிறர்க்குதவி செய் நற்குணக்குன்றாய்!'

- என்ற பாரதிதாசனின் வரிகள் ஒவ்வொரு அணில் இதழின் முதல் பக்கத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

உள்ளடக்கம்

அணில் இதழில் கதைகள், செய்தித்துணுக்குகளுடன் படக்கதைகளும் வெளியாயின. நீண்ட காலமாக தவளைத்தீவு என்ற படக்கதை அனைவரையும் கவர்ந்தகதையாக வெளிவந்துள்ளது. இந்தக்கதையை எழுதியவர் அணில் அண்ணா புவிவேந்தன். இதில் கார்ட்டூன் படங்களை வரைந்த உபால்டு பிற்காலத்தில் சினிமா ஓவியராக ஆனார். படக்கதைகளை ஓவியர் ரமணி, உபால்டு மற்றும் கிட்டு ஆகியோர் வரைந்துள்ளனர். ’மந்திர சாவி', 'பூங்காட்டுப்புதையல்' ஆகிய தொடர்கதைகள் வெளியிடப்பட்டன. வாசகர்கள் எழுதிய 'அணில் முத்திரைக் கதைகள்' தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒரு பக்க அளவில் 'உங்கள் கடிதம்' பகுதி வெளியாகி உள்ளது. இதில் ஆசிரியருக்கு சிறுவர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒரு பக்க அளவில் 'அணில் அண்ணா பதில்கள்' வெளியாகி உள்ளது. அணிலில் ஒரே ஒரு வர்த்தக விளம்பரம் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது அட்டை அல்லது பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. 'வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ட் கோ' என்ற பெயரில் வெளியான மின்சாதன பொருள் விற்பனையாளரின் விளம்பரம் இதழுக்கு பொருளாதார அளவில் உதவி செய்திருக்கிறது. மற்ற காமிக்ஸ் விளம்பரங்களும் அணிலில் பிரசுரமாகி உள்ளன. 'வாண்டு மாமா', 'வேங்கை' போன்ற சிறுவர் இதழ்களின் விளம்பரங்ளும் அணிலில் இடம் பிடித்துள்ளன. ஞானி பதிப்பகம், கலை பிரசுரம் ஆகிய பதிப்பகங்களின் விளம்பரங்களும் அணிலில் வந்துள்ளன.

போட்டிகளும்-பரிசுகளும்

அணில் தனது வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு வித்தியாசமான போட்டிகளை நடத்தியுள்ளது.

  • 'செக் பரிசுத்திட்டம்'. அதாவது ஒரு காசோலையில் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ஒரு தொகையை வாசகர்கள் குறிப்பிட்டு எழுத வேண்டும். அணில் எழுதி வைத்துள்ள தொகையும் வாசகர் எழுதியுள்ள தொகையும் ஒன்றாக இருந்தால் அந்த வாசகருக்கு ஒரு ரூபாய் பரிசு கிடைக்கும். இந்த போட்டி அதிர்ஷ்டத்தை மையப்படுத்தி இல்லாமல், வாசகர்களை கவர வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
  • கணக்கு புதிர். எப்படிக்கூட்டினாலும், கூட்டுத்தொகை 15 வரவேண்டும் என்ற 'கணிதப்புதிர் போட்டி' நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கு பெற்று வெற்றிபெறும் சிறுவர்களுக்கு பத்து ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • சிந்தனை போட்டி. 14 வாக்கியங்கள் வரிசையாக தரப்படும். ஒவ்வொரு வாக்கியத்தின் முக்கிய வார்த்தைகளில் சில எழுத்துக்கள் விடுபட்டு இருக்கும். ( உதாரணம்: இந்தப்பிராணி நன்றாகக் கடிக்கும்: -- லி )விடுபட்ட 14 வார்த்தைகளையும் நிரப்பினால் அந்த வார்த்தைகள் இணைந்து ஒரு வாக்கியமாக தெரியும். அந்த வாக்கியத்தை ஒரு போஸ்ட்கார்டில் எழுதி அனுப்பினால் 25 ரூபாய் பரிசு வழங்கப்படும். பலர் சரியான விடையை எழுதி அனுப்பினால் அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். இந்த போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
  • இலவசப் பேனா பரிசு அணில் இதழில் வெளியாகும் கூப்பனில் பெயர்-முகவரி எழுதி, அணில் அலுவலகத்திற்கு அனுப்பினால், குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இலவசமாக பேனா' ஒன்று அன்பளிப்பாக வழங்கப்படும் திட்டமும் இருந்துள்ளது. ஒவ்வொரு அணிலிலும் 5 பேருக்கு 'இலவசப்பேனா பரிசு' என்பது அந்த திட்டத்தின் பெயராக இருந்துள்ளது. 'கலர் பென்சில் பாக்ஸ்' பரிசுத்திட்டமும் அணிலில் இருந்துள்ளது.
  • கடிதம் பரிசு வாசகர் கடிதம் பகுதியில் பிரசுரமாகும் சிறந்த கடிதத்திற்கு ரூ.2 பரிசாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு ரூபாய் பரிசுத்திட்டம் என்ற திட்டமும் அணிலில் பிரபலமாக இருந்துள்ளது. அதாவது அணிலில் வெளியாகும் 'ஒரு ரூபாய் பரிசு' என்ற கூப்பனில் வாசகர்கள் பெயர், முகவரி எழுதி அனுப்பினாலே போதும். குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் 25 பேர் தேர்ந்தெடுப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
  • சித்திரம் இங்கே.. சிரிப்பு எங்கே?. அதாவது, அணிலில் வெளியாகும் இரண்டு கார்ட்டூன்களுக்கு ஏற்றவாறு வாசகர்கள் சிரிப்புத்துணுக்கை எழுதி அனுப்ப வேண்டும். ரசிக்கத்தக்க துணுக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்கண்ட கார்ட்டூன்களுடன் பொருத்தி அடுத்த இதழ்களில் பிரசுரமாகும். வெற்றி பெற்ற வாசகருக்கு ரூ.2 பரிசு கிடைக்கும்.

உசாத்துணை