அக்கினி சுகுமார்

From Tamil Wiki
அக்கினி சுகுமார்

அக்கினி சுகுமார் மலேசியப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். 1977இல் மலேசியாவில் புதுக்கவிதையை ஓர் இயக்கமாக முன்னெடுத்த 'வானம்பாடி' நாளிதழை நண்பர்களோடு இணைந்து தோற்றுவித்தார். அவ்விதழ் வழி இளம் புதுக்கவிஞர்களை மலேசியாவில் உருவாக்கினார்.

தனி வாழ்க்கை

அக்கினி சுகுமார் இயற்பெயர் சுகுமார். அக்டோபர் 8, 1955இல் பிறந்த இவரது பெற்றோர் வெள்ளத்துரை, பசுபதியம்மாள் ஆவர். ஓர் அண்ணனும் ஓர் அக்காவும் உள்ள குடும்பத்தில் கடைசி பிள்ளையாகப் பிறந்தார். அம்மாவைப் பின்பற்றி தமிழகம் சென்றவர் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை தமிழகத்திலேயே தொடர்ந்தார். கரூர் அரசாங்க கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தவர், கடப்பிதழைப் புதுப்பிக்க மலேசியா வர வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மலேசியா திரும்பினார். மீண்டும் தமிழகம் செல்லமுடியாத சூழலால் கல்வி பாதியில் தடைப்பட்டது. அக்டோபர் 10, 1984இல் பத்மினி அவர்களை மணந்தார். அவரது மனைவியும் ஓர் எழுத்தாளர். இவருக்கு மூன்று பிள்ளைகள். அக்டோபர் 3, 2019இல் அவர் புற்றுநோயால் மரணமடைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தன் மாமாவின் அருகாமையால் சிறிய வயதிலேயே ரஷ்ய இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினார் அக்கினி சுகுமார். ஜெயகாந்தனின் எழுத்துகளில் கம்யூனிஸ எண்ணங்கள் வெளிபட்டதால் அவரது தீவிர வாசகராக மாறினார். பாரதியார் மற்றும் காசி ஆனந்தன் கவிதைகளை வாசிக்கத் தொடங்கியப்பின்னர் 70களில் கவிஞராக உருவெடுத்தார். 1974இல் தமிழ் மலர் நாளிதழில் எழுதிய மரபுக்கவிதைதான் இவர் முதலில் எழுதிய படைப்பு. பின்னர் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். அப்போது 'தமிழ் மலர்' நாளிதழில் புதுக்கவிதைகளைப் பிரசுரிப்பதில் கெடுபிடிகள் இருந்தன. மரபுக்கவிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. 1977ஆம் ஆண்டில் ஆதி. குமணன், இராஜகுமாரன், அக்கினி சுகுமார் ஆகியோர் இணைந்து  வார இதழ் ஒன்றைத் தொடங்கினர். இதழுக்கு 'வானம்பாடி'  என அக்கினி சுகுமார் பெயரிட்டார். அவருக்கு அப்போது தமிழக வானம்பாடி கவிஞர்களின் தாக்கம் இருந்தது. வானம்பாடி இதழே மலேசியப் புதுக்கவிதைக்கான களத்தை உருவாக்கியது. 1984இல் 'கனா மகுடங்கள்' என்ற தன் புதுக்கவிதை நூலை வெளியிட்டார் அக்கினி சுகுமார்.

கவிஞராக மட்டுமல்லாமல் கட்டுரையாளராகவும் அக்கினி சுகுமார் அறியப்பட்டார். அறிவியல், விளையாட்டு, அரசியல், இலக்கியம், சமயம் என இடைவிடாது கட்டுரைகள் எழுதினார். மேலும் வானம்பாடி முன்னெடுத்த மாதம் ஒரு குறுநாவல் திட்டம் வழியாக 1980இல் 'பட்டுப்புழுக்கள்' என்ற குறுநாவலை எழுதினார்.

பத்திரிகையாளர் வாழ்க்கை

அக்கினி சுகுமார் தன் வாழ்நாளில் பத்திரிகை துறை அன்றி வேறு தொழில் செய்ததில்லை. 1973 முதல் 1978 வரை தமிழ்மலர் நாளிதழ், 1978 முதல் 1980 வரை வானம்பாடி வார இதழ், 1981 முதல் 1989 வரை தமிழ் ஓசை நாளிதழ், 1990 முதல் 2003 வரை மலேசிய நண்பன், 2003 முதல் 2005 வரை மக்கள் ஓசை நாளிதழ்,  2006 முதல் 2007 வரை தமிழ்க்குரல், 2007 முதல் 2013 வரை தமிழ் நேசன், 2014 முதல் 2019 வரை வணக்க மலேசியா. காம் என அவரது பணிகள் நாளிதழ், வார இதழ், இணைய இதழ் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தன. தான் இணைந்த அனைத்து நாளிதழ்களிலும் புதுக்கவிதைக்கு முன்னுரிமை கொடுப்பதோடு அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தார்.

பாலஸ்தீன போராட்டமும் ஈழ போராட்டமும் அவர் தொடர்ச்சியாக கவனம் செலுத்திய களங்கள். ஏப்ரல் 10, 2002இல் விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் நடத்திய அனைத்துலக செய்தியாளர்களுக்கான சந்திப்பில் அக்கினி சுகுமார் கலந்துகொண்டார். கூடுதலான நாட்கள் இலங்கையில் தங்கி சவாலான சூழலில் புலிகளின் தலைவரிடம் நேர்காணல் செய்த அனுபவம் வரை தான் கடந்து வந்த பாதையை 'மண்ணே உயிரே' எனும் தலைப்பில் நூலாக்கினார். இன்று அது சிறந்த ஆவணமாகக் கருதப்படுகிறது.

இலக்கியப் பங்களிப்பு

வானம்பாடி நாளிதழ் வழியாக ஒரு தலைமுறை புதுக்கவிஞர்கள் உருவானார்கள். அவர்கள் தமிழகத்து வானம்பாடி ரக கவிஞர்கள். தேர்ந்த ஆங்கில அறிவு கொண்டிருந்த அக்கினி சுகுமார் எழுதிய அறிவியல் கட்டுரைகள் மலேசியாவில் பிரபலமானவை. செய்தித்தன்மையுடன் வரட்சியாக இருந்த கட்டுரை மொழியை இலகு படுத்தியதில் அக்கினி சுகுமார் அவர்களின் பங்கு முக்கியமானது.

பரிசுகள், விருதுகள்

  • விளையாட்டுத்துறையின் சிறந்த கட்டுரையாளருக்கான அரசாங்க விருது - 1986
  • விளையாட்டுத்துறையின் சிறந்த கட்டுரையாளருக்கான அரசாங்க விருது - 1988
  • சுகாதார அமைச்சின் சிறந்த கட்டுரையாளர் விருது - 2013
  • டான் ஶ்ரீ ஆதி நாகப்பன் விருது - 2015
  • தமிழருவி விருது - 2017

நூல்கள்

  • பட்டுப்புழுக்கள் - குறுநாவல் (1980)
  • கனா மகுடம் - புதுக்கவிதை (1984)
  • மண்ணே உயிரே - பயணக்கட்டுரை (2007)
  • இறையாய் இரு கனா - புதுக்கவிதை (2019)

உசாத்துணை

  • மீண்டு நிலைத்த நிழல்கள் - ம.நவீன்

இணைய இணைப்பு