அகிலத்திரட்டு

From Tamil Wiki
Revision as of 12:24, 11 January 2022 by Santhosh (talk | contribs) (Created page with "அய்யா வைகுண்டரை வழிபடும் அய்யாவழி என்னும் மெய்யியல் மரபினரின் முதன்மை நூல். இதில் அய்யா வைகுண்டரின் உரைகள் அடங்கியிருக்கின்றன. இதை அய்யா வைகுண்டர் சொல்ல அவருடைய முதன்மை மாணவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அய்யா வைகுண்டரை வழிபடும் அய்யாவழி என்னும் மெய்யியல் மரபினரின் முதன்மை நூல். இதில் அய்யா வைகுண்டரின் உரைகள் அடங்கியிருக்கின்றன. இதை அய்யா வைகுண்டர் சொல்ல அவருடைய முதன்மை மாணவர் அரிகோபால் எழுதினார்

ஆசிரியர்

அய்யா வைகுண்டர் கூறியவற்றைக் கேட்டு அரிகோபால் இதை எழுதினார். தென் தாமரைக்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் அரிகோபால். இவர் தந்தை பெயர் இராமகிருஷ்ண நாடார். வைகுண்டரின் மாணவர்கள் ஐந்துபேர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் எனப்படுகிறார்கள். ஐவரில் அரிகோபால் சகாதேவன் என்பது அய்யாவழியினரின் நம்பிக்கை.

ஆக்கம்

அகிலத்திரட்டு 1841 டிசம்பர் 12 [மலையாள ஆண்டு 1016 கார்த்திகை 27 வெள்ளிக்கிழமை] அன்று அகிலத்திரட்டு எழுதி முடிக்கப்பட்டது. ’முறையோன் எம்பிரானுக்கு உறக்கத்தில் இருந்தவரை எழுப்பி அருள் புரிய ‘ இதை எழுதியதாக அரிகோபால் கூறுகிறார். “அய்யாவே ஏரணியும்’ எனத் தொடங்கும் காப்புப்பாடலை அய்யா வைகுண்டரே எடுத்து அளித்ததாகவும் தொடர்ந்து தான் கேட்டு எழுதியதாகவும் அரிகோபால் சொல்கிறார்

“அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி

மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே

அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை’

என்பது அகிலத்திரட்டிலுள்ள வரி

நூல் வடிவம்

இந்நூல் அம்மானை என்னும் வடிவில் அமைந்துள்ளது. அம்மானை என்னும் செய்யுள் சிறுமியர் அம்மானை ஆடி விளையாடும்போது பாடும் வடிவத்தில் அமைந்தது. இலக்கியமரபில் இது தரவு கொச்சகம், வெண் செந்துறை ஆகிய செய்யுள் வடிவில் அமையும். நாட்டுப்புற இலக்கியத்தில் அம்மானை வடிவம் முக்கியமானது. ஆனால் இந்நூல் அந்த வடிவில் இல்லை. இது பொதுவாகவே அம்மானை என அழைக்கப்படுகிறது. அம்மானை என இது ஏன் சொல்லப்படுகிறது என்றால் இங்கே சொல்பவரும் கேட்பவரும் இரு எல்லைகளில் அமைந்துள்ளனர். கேட்பாய் என்று கூறி அழைத்துச் சொல்லும் வடிவம் இதற்கு உள்ளது.

அகிலத்திரட்டு 15000 வரிகள் கொண்டது. இதன் பதிப்புகளில் வரிகளும் பாடங்களும் வேறுபடுகின்றன. இதன் பல்வேறு ஏடுகள் உள்ளன என்றாலும் பெம்பாலும் வாய்மொழி மரபாகவே அறியப்படுகிறது. இந்நூலில் காப்பு அவையடக்கம் நூல்சுருக்கம் ஆகியவற்றுடன் மரபான நூல்வடிவில் உள்ளது. காப்புச்செய்யுளில் நாராயணன் சிவன் இரு தெய்வங்களும் இணையான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகின்றனர். இந்நூலில் நூற்பயனும் சொல்லப்படுகிறது. ‘வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா’ என்று இந்நூல் சொல்கிறது

இந்நூலில் வாய்மொழி மரபும் செவ்வியல் செய்யுள் மரபும் கலந்து வருகின்றன. உரைநடைப்பகுதியும் உள்ளது. வடமொழிச் சொற்களின் கலப்பு குறைவு என ஆய்வாளர் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

இந்நூல் இரண்டு பெரும்பகுதிகளாக உள்ளது. முதல்பகுதியில் அய்யாவின் காலம் வரையில் உலகில் இருந்த அதர்மத்திற்கு எதிராக தர்மம் நிகழ்த்தியபோராட்டமும் அவர் வெவ்வேறு அவதாரங்களில் அதர்மத்தை எதிர்த்ததும் சொல்லப்படுகிறது. முதற்பகுதி மகாபாரதம், ராமாயணம், பாகவதபுராணம், சிவபுராணம் ஆகியவற்றையும் பல்வேறு நாட்டார் வாய்மொழிப் பாடல்களையும் அணுக்கமாக அடியொற்றியது. பெருமாளின் அவதாரங்களின் தொடர்ச்சியாக அய்யா வைகுண்டர் சொல்லப்படுகிறார். ஆனால் மரபுவழிப் புராணங்களில் இல்லாத நீடிய யுகம் சதுர யுகம் நெடிய யுகம் ஆகியவற்றில் நிகழும் செய்திகள் இப்பகுதியில் உள்ளன.

இரண்டாம் பகுதியின் அய்யாவின் சமகாலத்தில் கலிநீசனின் செயல்பாடுகளும் அவர் அவனை எதிர்த்துச் செய்த போரும் சொல்லப்படுகிறது.

பதிப்புகள்

1939ல் அகிலத்திரட்டு அச்சுவடிவில் வந்துள்ளது. அதற்குமுன் ஏட்டில் இருந்தது. இன்றும் மார்கழி மாதம் அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்கும் நிகழ்ச்சி திருஏடு வாசிப்பு என்றே அழைக்கப்படுகிறது.

அய்யா வைகுண்டர் மரபில் வந்த ஆசிரியர் பாலபிரஜாபதி அடிகளாரால் பரிசோதிக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு அகிலத்திரட்டு அம்மானை அ.கா.பெருமாள் அவர்களின் ஆய்வுரையுடன் காலச்சுவடு பதிப்பாக 2009ல் வெளிவந்துள்ளது.


குறிப்பு

  • அய்யா வைகுண்ட சாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை. காலச்சுவடு. 2009