அகிலத்திரட்டு

From Tamil Wiki
Revision as of 15:09, 24 January 2022 by Madhusaml (talk | contribs)

அய்யா வைகுண்டரை வழிபடும் அய்யாவழி என்னும் மெய்யியல் மரபினரின் முதன்மை நூல். இதில் அய்யா வைகுண்டரின் உரைகள் அடங்கியிருக்கின்றன. இதை அய்யா வைகுண்டர் சொல்ல அவருடைய முதன்மை மாணவர் அரிகோபால் எழுதினார்

ஆசிரியர்

அய்யா வைகுண்டர் கூறியவற்றைக் கேட்டு அரிகோபால் இதை எழுதினார். தென்தாமரைக்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் அரிகோபால். இவர் தந்தை பெயர் இராமகிருஷ்ண நாடார். வைகுண்டரின் மாணவர்கள் ஐந்துபேர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் எனப்படுகிறார்கள். ஐவரில் அரிகோபால் சகாதேவன் என்பது அய்யாவழியினரின் நம்பிக்கை.

ஆக்கம்

அகிலத்திரட்டு 1841 டிசம்பர் 12 [மலையாள ஆண்டு 1016 கார்த்திகை 27 வெள்ளிக்கிழமை] அன்று அகிலத்திரட்டு எழுதி முடிக்கப்பட்டது. ’முறையோன் எம்பிரானுக்கு உறக்கத்தில் இருந்தவரை எழுப்பி அருள் புரிய ‘ இதை எழுதியதாக அரிகோபால் கூறுகிறார்.“அய்யாவே ஏரணியும்’ எனத் தொடங்கும் காப்புப்பாடலை அய்யா வைகுண்டரே எடுத்து அளித்ததாகவும் தொடர்ந்து தான் கேட்டு எழுதியதாகவும் அரிகோபால் சொல்கிறார்

“அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி

மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே

அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை’

என்பது அகிலத்திரட்டிலுள்ள வரி

நூல் வடிவம்

இந்நூல் அம்மானை என்னும் வடிவில் அமைந்துள்ளது. அம்மானை என்னும் செய்யுள் சிறுமியர் அம்மானை ஆடி விளையாடும்போது பாடும் வடிவத்தில் அமைந்தது. இலக்கியமரபில் இது தரவு கொச்சகம், வெண் செந்துறை ஆகிய செய்யுள் வடிவில் அமையும். நாட்டுப்புற இலக்கியத்தில் அம்மானை வடிவம் முக்கியமானது. ஆனால் இந்நூல் அந்த வடிவில் இல்லை. இது பொதுவாகவே அம்மானை என அழைக்கப்படுகிறது. அம்மானை என இது ஏன் சொல்லப்படுகிறது என்றால் இங்கே சொல்பவரும் கேட்பவரும் இரு எல்லைகளில் அமைந்துள்ளனர். கேட்பாய் என்று கூறி அழைத்துச் சொல்லும் வடிவம் இதற்கு உள்ளது.

அகிலத்திரட்டு 15000 வரிகள் கொண்டது. இதன் பதிப்புகளில் வரிகளும் பாடங்களும் வேறுபடுகின்றன. இதன் பல்வேறு ஏடுகள் உள்ளன என்றாலும் பெம்பாலும் வாய்மொழி மரபாகவே அறியப்படுகிறது. இந்நூலில் காப்பு அவையடக்கம் நூல்சுருக்கம் ஆகியவற்றுடன் மரபான நூல்வடிவில் உள்ளது. காப்புச்செய்யுளில் நாராயணன் சிவன் இரு தெய்வங்களும் இணையான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகின்றனர்.இந்நூலில் நூற்பயனும் சொல்லப்படுகிறது. ‘வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா’ என்று இந்நூல் சொல்கிறது

இந்நூலில் வாய்மொழி மரபும் செவ்வியல் செய்யுள் மரபும் கலந்து வருகின்றன.உரைநடைப்பகுதியும் உள்ளது. வடமொழிச் சொற்களின் கலப்பு குறைவு என ஆய்வாளர் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

இந்நூல் இரண்டு பெரும்பகுதிகளாக உள்ளது. முதல்பகுதியில் அய்யாவின் காலம் வரையில் உலகில் இருந்த அதர்மத்திற்கு எதிராக தர்மம் நிகழ்த்தியபோராட்டமும் அவர் வெவ்வேறு அவதாரங்களில் அதர்மத்தை எதிர்த்ததும் சொல்லப்படுகிறது. முதற்பகுதி மகாபாரதம்,ராமாயணம், பாகவதபுராணம், சிவபுராணம் ஆகியவற்றையும் பல்வேறு நாட்டார் வாய்மொழிப் பாடல்களையும் அணுக்கமாக அடியொற்றியது. பெருமாளின் அவதாரங்களின் தொடர்ச்சியாக அய்யா வைகுண்டர் சொல்லப்படுகிறார். ஆனால் மரபுவழிப் புராணங்களில் இல்லாத நீடிய யுகம், சதுர யுகம், நெடிய யுகம் ஆகியவற்றில் நிகழும் செய்திகள் இப்பகுதியில் உள்ளன.

இரண்டாம் பகுதியின் அய்யாவின் சமகாலத்தில் கலிநீசனின் செயல்பாடுகளும் அவர் அவனை எதிர்த்துச் செய்த போரும் சொல்லப்படுகிறது.

சான்று வரிகள்

ஆருக்கும் தலைவனென்று அன்னை பிதா வளர்த்தார்

ஞாயமிருப்பதனால் நாடாள்வான் என்று சொல்லி

தாய்தமர்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்

சொல்லுக்கும் வல்லவவனாம் சூராதி சூரனிவன்

மல்லுக்கு வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்

மங்கையருக்கு ஏற்றனவனாம் மாகேக காமீகன்

எங்கும் பேர்கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நல்வளமை

பல்லாக்கு ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான்

[வைகுண்டர் சிறப்பு]


சுடரே சுடரே துலங்குமதிச் சுடரே

கடலே கடலே கடலுள் கனலாரே

அக்கினிக்கே அபயம் அனலே உனக்கபயம்

முக்கியமாய் காந்தல் முனையே உனக்கபயம்

தீயே உனக்கபயம் திருபுரமே உனக்கபயம்

நீ சுட்ட ஸ்தலங்கள் எனக்குரைக்கக் கூடாது..

[திருமால் வாழ்த்து]


கொல் என்ற பேச்சு கூறாதே என்மகனே

ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்

செவ்வென்ற பேச்சு செப்பியிரு என் மகனே

[வைகுண்டருக்கு நாரணர் பதில்]


உன்னிலும் பெரியோனாக ஒருவனுள் உயர்த்திக் கண்டால்

தன்னிலும் பெரியோனாக தழைத்து இனிது இதிருந்து வாழ்வீர்

என்னிலும் பெரியோர் நீங்கள் யானுங்கள் தனிலும் மேலோன்

பொன்னில ஊற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே

[அய்யாவின் அருள் வாக்கும்]

பதிப்புகள்

1939ல் அகிலத்திரட்டு அச்சுவடிவில் வந்துள்ளது. அதற்குமுன் ஏட்டில் இருந்தது. இன்றும் மார்கழி மாதம் அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்கும் நிகழ்ச்சி திருஏடு வாசிப்பு என்றே அழைக்கப்படுகிறது.

அகிலதிரட்டு அம்மானை

அய்யா வைகுண்டர் மரபில் வந்த ஆசிரியர் பாலபிரஜாபதி அடிகளாரால் பரிசோதிக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு அகிலத்திரட்டு அம்மானை அ.கா.பெருமாள் அவர்களின் ஆய்வுரையுடன் காலச்சுவடு பதிப்பாக 2009ல் வெளிவந்துள்ளது.

உசாத்துணை

  • அய்யா வைகுண்ட சாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை. பதிப்பாசிரியர் அ.கா.பெருமாள். காலச்சுவடு. 2009