under review

கே.பி. சுந்தராம்பாள்

From Tamil Wiki
Revision as of 04:12, 17 March 2023 by Jayashree (talk | contribs)
கே.பி. சுந்தராம்பாள்
கே.பி. சுந்தராம்பாள்
கே.பி. சுந்தராம்பாள்

கே.பி. சுந்தராம்பாள் (கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள், கொடுமுடி கோகிலம், கே.பி.எஸ்) (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980) நாடக நடிகர், இசைவாணர், திரைப்பட நடிகர், சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டவர். திரைப்படங்களில் பாடல்கள் பாடி நடித்தார். ‘ஸ்ரீ கானசபா’ நாடகக்குழுவை எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் இணைந்து ஏற்படுத்தி பல நாடகங்களை அரங்காற்றுகை செய்தார். ஒளவையார் வேடத்தின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கே.பி. சுந்தராம்பாள் தற்போதைய ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் கிருஷ்ணசாமி, பாலாம்பாள் இணையருக்கு அக்டோபர் 11, 1908-ல் மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் கனகசபாபதி, சுப்பம்மாள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றார். குடும்பத்தின் வறுமை காரணமாக கோவைக்கும் கொடுமுடிக்கும் இடையில் ஓடும் ரயிலில் சென்று தினமும் பாடி சம்பாதித்தார்.

எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள்

தனிவாழ்க்கை

கே.பி. சுந்தராம்பாள் 1927-ல் எஸ்.ஜி. கிட்டப்பா-வைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது கிட்டப்பாவின் முதல் மனைவி கிட்டம்மா பருவம் அடைந்திருக்கவில்லை. திருமணத்திற்குப்பின் சில ஆண்டுகளில் சுந்தராம்பாளுடன் கருத்து வேறுபாடு காரணமாக கிட்டப்பா கிட்டம்மாளுடன் சென்று வசித்தார். இந்தக்காலங்களில் சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை. மதுப்பழக்கத்தால் வயிற்றுவலியில் அவதிப்பட்டு வந்த கிட்டப்பா டிசம்பர் 2, 1933−ல் காலமானார். இருபத்தியைந்து வயதான சுந்தராம்பாள் அன்றிலிருந்து வெள்ளைப்புடவை கட்டிக் கொண்டு துறவுக்கோலம் கொண்டார். எந்தவொரு ஆண் நடிகருடனும் அதன்பின் இணைந்து நடிப்பதில்லை என உறுதி கொண்டு அதைக் கடைபிடித்தார். காந்தியடிகள் கேட்டுக் கொண்டதால் தேசபக்திப் பாடல்கள் பாடினார்.

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் ஈடுபட்டார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டார். தேசபக்தி பாடல்களைப் பாடினார். காமராசர் ஆட்சியின் போது 1958-ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆனார்.

நாடக வாழ்க்கை

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளின் பாடும் திறமையைக் கண்ட வேலு நாயர் அவரைக் கும்பகோணம் அழைத்துச் சென்றார். கரூரில் நடந்த வேலுநாயர்-ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினரின் நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். ”பசிக்குதே! வயிறு பசிக்குதே” பாட்டைப் பாடி ரசிகர்களிடன் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.

சுந்தராம்பாள் 1917−ல் இலங்கைக்குச் சென்று கொழும்பில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவரது நாடகங்கள் நடைபெற்றன. எஸ்.ஜி. கிட்டப்பா 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1926-ல் சுந்தராம்பாள், கிட்டப்பா நடித்த 'வள்ளிதிருமணம்' நாடகம் அரங்கேறியது. இசைத்தட்டுகளில் அவரது பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. 1929-ல் நாடு திரும்பினார். ஜனவரி 4, 1944-ல் நிகழ்ந்த தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் கலந்து கொண்டார்.

ஸ்ரீ கானசபா

சுந்தராம்பாள் திருமணத்திற்குப்பின் 'ஶ்ரீகானசபா' என்ற நாடகக் குழுவை எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் இணைந்து ஏற்படுத்தினார். தமிழகம் முழுவதும் நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். இருவரும்‌ சேர்ந்து இலங்கை, தமிழ்நாடு, மைசூர்‌, திருவாங்கூர்‌, ஹைதராபாத்‌, பர்மாவிலும்‌ நடித்து பொருள்‌ ஈட்டினர். கிட்டப்பாவின் இறப்பிற்குப்பின் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கிய கே.பி. சுந்தராம்பாள் 1934−ல் 'நந்தனார்' நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தினார். நாடக அரங்கில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தினார்.

நடித்த நாடகங்கள்
  • வள்ளி திருமணம்
  • நல்லதங்காள்
  • கோவலன்
  • ஞானசெளந்தரி
  • பவளக்கொடி
  • பக்த நந்தனார்
கே.பி. சுந்தராம்பாள்

திரைப்பட வாழ்க்கை

சுந்தராம்பாள் 'பக்த நந்தனார்' என்னும் படத்தில் நந்தனார் வேடத்தில் நடித்தார். பக்த நந்தனார் திரைப்படத்தில் இருந்த 41 பாடல்களில் 19 பாடல்கள் சுந்தராம்பாள் பாடினார். 1935-ல் இப்படம் வெளியானது. 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் வெளியான 'மணிமேகலை'யில் நடித்தார். இப்படத்தில் பதினொரு பாடல்களை இவர் பாடினார். 1953−ல் வெளியான 'ஔவையார்' என்ற திரைப்படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். ஒளவையார் படத்தில் அமைந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் பாடியவை முப்பது. இத்திரைப்படத்திற்காக ரூபாய் ஒரு லட்சம் ஊதியம் பெற்றார். 1964-ல் வெளிவந்த 'பூம்புகார்' படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்தார்.

கே.பி. சுந்தராம்பாள் எம்.ஜி.ஆர்
கே.பி. சுந்தராம்பாள்
பாடி நடித்த திரைப்படங்கள்

12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்

  • மகாகவி காளிதாஸ் (1966)
  • திருவிளையாடல் (1965)
  • கந்தன் கருணை (1967)
  • உயிர் மேல் ஆசை (1967)
  • துணைவன் (1969)
  • சக்தி லீலை (1972)
  • காரைக்கால் அம்மையார் (1973)
  • திருமலை தெய்வம் (1973)
  • மணிமேகலை (பாலசன்யாசி)
  • ஞாயிறு திங்கள்
  • ஒளவையார்
  • பக்த நந்தனார் (1935)

விருதுகள்

  • 1966-ல் தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் விருது வழங்கியது
  • 1970-ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது
  • சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது 'துணைவன்' திரைப்படத்திற்காக 1969-ல் வழங்கப்பட்டது

மறைவு

கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 19, 1980-ல் காலமானார்.

கே.பி. சுந்தராம்பாள்

புகழ்பெற்ற பாடல்கள்

இவரைப்பற்றிய நூல்கள்

  • கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு - ப.சோழநாடன்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.