கன்னிக்கோவில் இராஜா

From Tamil Wiki
Revision as of 22:51, 24 February 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added; Interlink Created; External Link Created:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கன்னிக்கோவில் இராஜா

செ. இராஜா (கன்னிக்கோவில் இராஜா; டிசம்பர் 11, 1975) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர். புத்தகம் மற்றும் இதழ்கள் வடிவமைப்பாளர். தனது பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா

பிறப்பு, கல்வி

இராஜா என்னும் கன்னிக்கோவில் இராஜா, சென்னை அபிராமபுரத்தில் உள்ள கன்னிக்கோவில் பள்ளத்தில், செந்தாமரை-கஸ்தூரி தம்பதிக்கு, டிசம்பர் 11, 1975 அன்று பிறந்தார். இராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். தட்டச்சு பயின்று தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

கன்னிக்கோவில் இராஜா இதழாளராகவும், புத்தகம் மற்றும் இதழ்கள் வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். 'டாக்டர் அம்பேத்கார் இரவுப் பாடசாலை'யைத் தொடங்கி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்: விஸ்வஇராஜா. மகள்: பவயாழினி.

சிறார் பாடல்கள்

இலக்கிய வாழ்க்கை

கன்னிக்கோவில் இராஜா, பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுதினார். ஏர்வாடி ராதாகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்ட 'கவிதை உறவு' அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். தனது கவிதைகளுக்காக சுரதா, மு.மேத்தா ஆகியோரால் பாராட்டப்பட்டார். பல்வேறு இதழ்களில் தான் எழுதி வந்த ஹைக்கூக் கவிதைகளைத் தொகுத்து 2005-ல், 'தொப்புள்கொடி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தொடர்ந்து பல கவிதை நூல்களை எழுதினார். 58 பெண் கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து 'தென்றலின் சுவடுகள்' என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டார். அந்நூல் கோவை அரசு பெண்கள் கல்லூரியிலும், சிவகாசி பெண்கள் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டது. இவருடைய கவிதைகள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது கவிதைகளைத் தங்கள் ஆய்வேட்டில் மாணவர்கள் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

ப. சிதம்பரம் தொடங்கிய 'எழுத்து' இலக்கிய அமைப்பின் நூலாக்கப் போட்டியில் கன்னிக்கோவில் இராஜாவின் 'பூமிக்கு இறங்கி வந்த குட்டிமேகம்' நூல், சிறந்த சிறார் நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சாகித்ய அகாடமி தொகுத்த 'சிறுவர் கதைகள்' நூலிலும் கன்னிக்கோவில் இராஜாவின் சிறுகதை இடம் பெற்றது. சாகித்ய அகாடமி வெளியிட்ட 'தமிழ் ஹைக்கூ ஆயிரம்' நூலிலும் கன்னிக்கோவில் இராஜாவின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றன. இந்திய ஆய்வியல் துறை மலாய்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய கலைஞன் பதிப்பக வைரவிழாவை ஒட்டி நடந்த நூலாக்கப் போட்டியில், கன்னிக்கோவில் இராஜாவின் 'தங்க மீன்கள் சொன்ன கதைகள்' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியாவில் வெளியிடப்பட்டது.

கன்னிக்கோவில் இராஜா 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்தார்.

சிறார்களுடன் கன்னிக்கோவில் ராஜா
சிறார் இலக்கியம்

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, அழ. வள்ளியப்பா, பெரியசாமி தூரன் ஆகியோரின் பாடல்களால் கன்னிக்கோவில் இராஜா ஈர்க்கப்பட்டார். அவர்களை முன்னோடியாகக் கொண்டு சிறார்களுக்காகப் பல பாடல்களையும் கதைகளையும் எழுதினார். தான் எழுதிய சிறார் பாடல்களைத் தொகுத்து 'மழலைச்சிரிப்பு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

தினமணி சிறுவர்மணி, இந்து தமிழ் திசை போன்ற இதழ்களில் சிறுவர்களுக்காகப் பல கதை, கட்டுரைகளை எழுதினார். குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் வாழ்க்கையைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

இதழியல் வாழ்க்கை

கன்னிக்கோவில் இராஜா, ‘புதிய செம்பருத்தி’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். ‘பொதிகை மின்னல்’ இதழின் இணையாசிரியராகப் பணிபுரிந்தார். எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி மூலம் ‘ஹைக்கூ’ இதழை நடத்தினார். கவிதைகளுக்காக ‘துளிப்பா’ மின்னிதழ், சிறார்களுக்காக ‘அரும்பின் புன்னகை’ போன்ற இதழ்களை நடத்தினார். ‘குட்டி’ சிறார் இதழில் பங்களித்தார். ‘மின்மினி ஹைக்கூ’ இதழின் ஆசிரியராக உள்ளார்.

கன்னிக்கோவில் ராஜா புத்தகங்கள்

பதிப்பு

கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களுக்கு, புத்தகங்களுக்கு பக்க வடிவமைப்பாளராக, முகப்பு அட்டை தயாரித்தளிப்பவராகப் பணியாற்றினார். சிறார் நூல்களுக்காகவே, ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனுடன்

அமைப்புச் செயல்பாடுகள்

குழந்தைகளுக்கான கதைசொல்லியாகத் திகழும் கன்னிக்கோவில் இராஜா பல பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கதை சொல்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும், யு ட்யூப் மூலமும் கதை சொல்லியாக, விமர்சகராகச் செயல்பட்டு வருகிறார்.

இலக்கிய இடம்

கன்னிக்கோவில் இராஜா ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு, லிமர்புன், துளிப்பா, புதுக்கவிதை என்று பல களங்களில் செயல்பட்டு வருகிறார். சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடல்கள், சிறுகதைகள் என்று பல நூல்களைத் தந்ததுடன், ‘சிறார் கதைச்சொல்லி’யாகவும் இயங்கி வருகிறார்.

நல்லி குப்புசாமிச் செட்டியாருடன் கன்னிக்கோவில் இராஜா
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது

விருதுகள்

  • உரத்தசிந்தனை இதழ் நடத்திய 'குழந்தை இலக்கியத் திருவிழா'வில் பரிசு.
  • அழ. வள்ளியப்பா நினைவுப் பரிசு -'அப்துல்கலாம் பொன்மொழிக் கதைகள்' நூலுக்கு.
  • வானொலி சிறுவர் சங்கப் பேரவை வழங்கிய 'குழந்தை இலக்கிய ரத்னா' விருது.
  • கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது
  • உரத்த சிந்தனை நூல் விருது
  • ஈரோடு தமிழன்பன் விருது
  • துளிப்பா சுடர் விருது
  • துளிப்பா பரிதி
  • சக்தி கிருஷ்ணசாமி விருது
  • இதழியல் சாரதி
  • இலக்கியச் சுடர்மணி
  • எண்ணச் சுடர்
  • துளிப்பா பரிதி
  • சிந்தனைச் செம்மல்
கன்னிக்கோவில் இராஜா வாழ்க்கைப் பயண நூல்

ஆவணம்

கன்னிக்கோவில் இராஜா, 1000 நாட்களாக கைப்பேசியில் அனுப்பிய கவிதைகளைத் தொகுத்து ‘எஸ்.எம்.எஸ். ஹைக்கூ கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்துள்ளார், கவிஞர் வசீகரன்.

'இலக்கியத் தோப்பு கன்னிக்கோவில் இராஜா' என்ற தலைப்பில் கன்னிக்கோவில் இராஜாவின் படைப்புகளைத் திறனாய்வு செய்துள்ளார் முனைவர் மு. குமரகுரு. இந்நூலை, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் இணைந்து கலைஞன் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளது.

கன்னிக்கோவில் இராஜா நூல்கள்
பல்சுவைத் தமிழ் நெஞ்சம் மற்றும் முகம் இதழில் நேர்காணல்கள்

நூல்கள்

சிறார் பாடல்கள்

மழலைச் சிரிப்பு

கொக்கு பற.. பற...

மியாவ்... மியாவ்... பூனைக்குட்டி

மே... மே... ஆட்டுக்குட்டி

கிலுகிலுப்பை

சிறார் கதைப் பாடல்கள்

கீக்கீ கிளியக்கா...

குக்கூ குயிலக்கா

கலகல கரடியார்

மொச.. மொச.. முயல்குட்டி

புள்ளி புள்ளி மான்குட்டி

சிக்கு புக்கு ரயில்பூச்சி

சிறார் சிறுகதை நூல்கள்

ஒரு ஊர்ல... ஒரு ராஜா ராணி

அணில் கடித்த கொய்யா

பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்

அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள்

கொம்பு முளைத்த குதிரை

தங்கமீன்கள் சொன்ன கதைகள்

ஒற்றுமையே வலிமையாம்   

நிலவை எச்சரித்த கரடிக்குட்டி

மூக்கு நீண்ட குருவி   

அப்பா பேச்சு கா...   

சப்போட்டா   

சா... பூ.... திரி   

பட்டாம்பூச்சி தேவதை   

ஏழு வண்ண யானை

குள்ளநரி திருடக்கூடாது  

காந்தி தாத்தா பொன்மொழிக் கதைகள்   

வனதேவதையின் பச்சைத் தவளை

பாராசூட் பூனை

பிடிங்க... பிடிங்க... மயில் முட்டையைப் பிடிங்க...   

லாலிபாப் விரும்பிய கடல்கன்னி   

டைனோசர் முட்டையைக் காணோம்   

கண்ணாமூச்சி விளையாடிய ரோபோ   

விழுதில் ஆடிய குரங்குகள்  

விளையாட்டை நிறுத்திய தும்பிகள்

சிறகு முளைத்த கதை  விலங்கு

நெல் மரப் பறவை

கரடி டாக்டர்  

காட்டுக்கு ராஜா யாரு?   

ஏழு கடல் தாண்டி.. ஏழு மலை தாண்டி...   

மியாவ் ராஜா

வித்தை செய்யும் நத்தை

ஒற்றுமையே வலிமையாம்

கவிதை நூல்கள்

தொப்புள்கொடி (ஹைக்கூ)

ஆழாக்கு (ஹைக்கூ)

வனதேவதை (ஹைக்கூ)

பெரிதினும் பெரிது (ஹைக்கூ)

கன்னிக்கோவில் முதல் தெரு (ஹைக்கூ+லிமரைக்கூ)

சென்னைவாசி (லிமரைக்கூ)

சொற்களில் சுழலும் கவிதை (புதுக்கவிதை)

நிறமற்ற கடவுள் (நவீனக் கவிதை)

தொகுப்பு நூல்கள்

தென்றலின் சுவடுகள் (தமிழின் முதல் பெண்கள் ஹைக்கூ தொகுப்பு)

கன்னிக்கோவில் ராஜாவின் எஸ்.எம்.எஸ். ஹைக்கூ (எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்ட ஹைக்கூத் தொகுப்பு)

காக்கை கூடு (லிமரைக்கூ தொகுப்பு)

தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ

மற்றும் பல

ஆங்கில மொழிபெயர்ப்பு

Pippi (A Bililngual book) by Nesha, Arakonam

Naughty Cat (A Bililngual book)by Srinidhi Prabakar, Abu Dhabi

Kalam’s Proverbial Stories for Children by Dr. R. Ahalya, Chennai


உசாத்துணை

கன்னிக்கோவில் இராஜா வலைத்தளம் http://kannikoilraja.blogspot.com/

கன்னிக்கோவில் இராஜா நேர்காணல்: பல்சுவை தமிழ்நெஞ்சம் இணைய இதழ் http://tamilnenjam.com/?p=5834

கன்னிக்கோவில் இராஜா: தென்றல் இதழ் கட்டுரை http://tamilonline.com/thendral/article.aspx?aid=12436

கன்னிக்கோவில் ராஜா படைப்புகள்: இந்து தமிழ் திசை https://www.hindutamil.in/author/779-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

கன்னிக்கோவில் இராஜா கதைகள் https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g

கன்னிக்கோவில் இராஜா நூல்கள்: https://www.commonfolks.in/books/kannikkovil-raja