சிவரமணி
சிவரமணி (1968-1991) ஈழத்து தமிழ்க் கவிஞர். இருபத்தியிரண்டு கவிதைகள் மட்டுமே வெளியான சிவரமணி அக்காலகட்டத்தின் முக்கியமான கவிஞராக நினைவுகூரப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடதுசாரி அரசியல், முற்போக்கு இலக்கியங்கள் மேல் ஈடுபாடு கொண்ட சிவானந்தனுக்கு மூத்த மகளாக 1968இல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும், வேம்படி மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1987இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவுக்கு அனுமதி பெற்று அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். பொதுக்கலைமாணி இறுதிப் பரிட்சைக்குத் தேர்வாகும் முன்னர் இறந்தார்.
ஓவியம், இசை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். சில கோட்டுச் சித்திரங்களும், நீர் வர்ண ஓவியங்களும் வரைந்தார். சிறு சிறு கலை, கைப்பணிப் பொருட்கள் சேகரிப்பதில் ஆர்வம் இருந்தது.
அமைப்புச் செயல்பாடுகள்
1985 ஆண்டு முதல் ’பெண்கள் ஆய்வு வட்டத்தின்’ அங்கத்தவராக இருந்தார். கலந்துரையாட, கருத்தரங்குகளில் பங்கு பெற்றார். 1988இல் யாழ் பலகலைக்கழகத்தில் செயல்படத்தொடங்கிய பலகலைக் கழகப் பெண்கள் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். யாழ்ப்பாணம் உடுவில்லில் இயங்கும் பூரணி பெண்கள் நிலையத்தின் ஆதரவாளர்களுள் ஒருவர். வாழ்க்கை ஆதாரங்களை இழந்த வறிய கிராமத்து இளம் பெண்களைக் கொண்டு இயங்கிய அந்த நிலையத்தில் பெண்களிடையே கல்வியறிவை வளர்க்க ஒருருங்கு செய்யப்பட்ட வகுப்புகளை நடத்தினார். யாழ்ப்பாணத்தில் “சாந்திகம்” உளவளாத்தூனை நிலையத்தில் அவர் பயிற்சி பெற்றார். போர்நிலையால் உளரீதியாக பாதிப்படைந்த சிறுவர்கள், பெண்கள் மத்தியில் பணியாற்ற தன்னை தயார்படுத்திக் கொண்டார். சிவரமணிக்கு தென் இலங்கையில் இயங்கிய சில பெண் அமைப்புகளுடன் தொடர்பிருந்தது. பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் கருத்தரங்களில் கலந்து கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
சிவரமணி மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகக் குறைந்த கவிதைகளே எழுதியிருக்கிறார். 1985-1990 வரை அவர் எழுதியவற்றுள் கிடைத்த 22 கவிதைகளை சித்திரலேகா மெளனகுரு தொகுத்து வெளியிட்டார். சிவரமணியின் கவிதைகளும் அவரது தோழியான கவிஞர் செல்வியின் கவிதைகளும் சேர்த்து ‘செல்வி சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் சென்னை தாமரைச்செல்விப் பதிப்பக வெளியீடாக வந்தது.
இலக்கிய இடம்
"இலங்கைத் தமிழ்ப் புதுக்கவிதை, இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுப்பட்டவை. ஆனால், தமிழ் மரபுக் கவிதையுடன் தொடர்புடையவை. உணர்ச்சியை அணுகும் விதத்திலும் விவரிப்பு மொழியின் ஓசை வெளிப்பாட்டிலும் மரபின் தன்மையை இலங்கைப் புதுக் கவிதைகள் இப்போதும் கைக்கொண்டுள்ளன. ஆனால், சிவரமணியின் கவிதைகள் அழகுணர்வுக்கு அப்பாற்பட்டுப் பாடுபொருளில் வேரூன்றியவை." என மண்குதிரை மதிப்பிடுகிறார்.
சிவரமணி தனது ஒரு கவிதையில் ‘கவிதை வெறிமுட்டி / நான் கவிஞன் ஆகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் வசந்த தென்றல் அல்ல நான்’ என்கிறார்.
மறைவு
மே 19, 1991இல் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ”எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்” என்ற இறுதிக் குறிப்புடன் தன் இருபத்தி மூன்றாவது வயதில் சிவரமணி தற்கொலை செய்து கொண்டார்.
நூல்கள் பட்டியல்
- சிவரமணி கவிதைகள்
உசாத்துணை
இணைப்புகள்
- சிவரமணி கவிதைகள்: noolaham
- செல்வி-சிவரமணி கவிதைகள் தொகுப்பு:noolaham
- "சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி! - சூரியகுமாரி பஞ்சநாதன்
- சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை: தாயகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.