first review completed

எழுத்து வருத்தனம்

From Tamil Wiki
Revision as of 05:22, 6 January 2023 by Madhusaml (talk | contribs)

எழுத்து வருத்தனம் சித்திரகவியின் ஒரு வகை. பொருள் தரும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பது எழுத்து வருத்தனம் என அழைக்கப்படுகிறது. முத்துவீரியம் இதன் இலக்கணத்தை

பதங்களின்‌ அக்கரங்‌ களைப்பகுத்து ஒன்றற்கு
உரியஅக்‌ கரங்களை மற்றொரு பதத்தொடு
புணர்த்திநூ தனப்பொருள்‌ புதுக்குவது எழுத்து
வருத்தனம்‌ ஆகும்‌என வழுத்தப்‌ படுமே (முத்துவீரியம்‌, 1144

என வகுக்கிறது. சில சொற்கள் முதலிலோ, கடைசியிலோ ஒரு எழுத்தை சேர்க்க சேர்க்க ஒவ்வொரு முறையும் வேறொரு பொருளுள்ள சொல் வருமாறு அமைகின்றன. அத்தகைய சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குப் பொருத்தமாகப் பொருள் கொள்ளுமாறு அமைவது எழுத்து வருத்தனம்.

உதாரணங்கள்

  • கை,வகை,உவகை
  • நகம், கநகம், கோகநகம்

எழுத்து வருத்தனம் அக்கரசுதகத்திற்கு மாறானது. அக்கரசுதகத்தில் எழுத்துகள் குறைந்து கொண்டே வரும். எழுத்து வருக்கத்தில் எழுத்துகள் கூடிக் கொண்டே வரும்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு-1

ஏந்திய வெண்படையும் முன்னா ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும் – வாய்ந்த
வுலைவி லெழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் றாமரையென் றாம். (தண்டியலங்காரம் மேற்கோள் பாடல் 227)

பாடலின் கடைசி அடியில் தலை, மலை, பொன், தாமரை என்ற சொற்கள் அமைவதற்குரிய வழி மேலே உள்ள மூன்று அடிகளில் இருப்பதைப் பாடல் கூறுகிறது.

பொருந்திய உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றா சேர்க்க – குற்றமற்ற எழுத்துக்களை முறையே ஒன்றன் மேல் ஒன்றாகச் சேர்க்க (அது முறையே) தலை, மலை, பொன், தாமரை என்று ஆம் – தலை, மலை, பொன், தாமரை என்ற சொற்களாக ஆகும்.

திருமால் ஏந்திய வெண்படை (சங்கு)-மற்றொரு பெயர் கம்பு-இதில் எடுத்துக்கொண்டது கம் - கம் என்றால் தலை

முன்னா ளெடுத்ததுவும் மலை- முன்பு மழையிலிருந்து காக்க எடுத்தது (கோவர்த்தன) மலை -நகம்

உடுத்தும் பூந்துகில் திருமால் உடுத்தும் பீதம்பரத்தின் நிறம் பொன்னிறம் கநகம் மாலின் உந்தியில் (நாபியில்) பூத்தது - தாமரை -கோகநகம்

எடுத்துக்காட்டு-2

சோலையை ஓர்‌எழுத்தால்‌ என்சொல்லும்‌? தொக்கதன்மேல்‌
நீலப்பேர்‌ எவ்வெழுத்தி னால்நேரும்‌? - மாலைக்‌
குடைவேந்தன்‌ சென்னிக்‌ குலநதியின்‌ பேரைக்‌
கடைசேர்ந்த ஓர்‌எழுத்தால்‌ காண்‌ (தனிப்பாடல்‌)

சோழனின் குல நதியின் பெயருக்கான குறிப்பு முதலிரண்டு அடிகளில் உள்ளது. ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து நதியின் பெயர் வருகிறது.

சோலையை ஓரெழுத்தால் என்சொல்லும்? - சோலைக்கு ஓர் எழுத்துப் பெயர் கா

நீலப்பேர்‌ எவ்வெழுத்தி னால்நேரும்‌ - எந்த எழுத்தைச் சேர்த்தால் நீலநிறம் அமையும் வி -காவி(கருங்குவளை)

சென்னிக் குலநதியின் (சோழனின் குலநதி) பெயர் ஓர் எழுத்தைச் சேர்த்தால் கிடைக்கும் ரி - காவிரி

உசாத்துணை

சித்திரகவிக் களஞ்சியம் (2007) , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்‌ பேரகராதித்‌ திருத்தப்பணித்‌ திட்ட வெளியீடு: 4 7, தமிழ் இணைய கல்விக் கழகம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.