under review

ஹரிஸமய திவாகரம்

From Tamil Wiki
Revision as of 20:41, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
ஹரிஸமய திவாகரம் இதழ்

ஹரிஸமய திவாகரம்,1923-ல் தொடங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக இந்த இதழ் தோன்றியது.

பதிப்பு, வெளியீடு

ஸ்ரீராமாநுஜரின் தத்துவம், கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக, பண்டிதர் ஆ.அரங்கராமாநுஜன் ஆசிரியர் பொறுப்பில், 1923-ல், தொடங்கப்பட்ட இதழ் 'ஹரிஸமய திவாகரம்'. மதுரை ஹரிஸமய திவாகர அச்சுக்கூடத்தில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. இது ஓர் இரு மாத இதழ்.

உள்ளடக்கம்

ஹரிஸமய திவாகரம் இதழ்

ஹரிஸமய திவாகரம் இதழின் தனிப்பிரதி விலை அணா 4. வருட சந்தா ரூபாய்: இரண்டு. வெளிநாடுகளுக்குச் சந்தா இரண்டு ரூபாய், நான்கணா.

தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது"

- என்ற திருக்குறள் இதழின் முகப்பு அட்டையில் இடம் பெற்றுள்ளது. 32 பக்கங்கள் கொண்டதாக இவ்விதழ் வெளியாகியுள்ளது. இதழின் இறுதிப்பக்கங்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

வைணவ சமயம் தொடர்பான, வைஷ்ணவர்களின் பெருமை, ஸ்ரீபாஷ்யகாரர் சரித்திரம், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், கம்பநாட்டாழ்வார், தத்வத்ரய விசாரம், யக்ஷ ப்ரச்நம், வைஷ்ணவ தர்மம், நசிகேதோபாக்யானம், யாதவாப்யுதயம், ஸ்ரீராமாநுஜ சித்தாந்தப் ப்ரகாசிகை, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த சாரம், திவ்விய சூரி சரிதம், ருக்மாங்கத சரிதம் போன்ற தலைப்புகளில் இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இவை தவிர்த்து, திருக்குறள் சமயம், திருக்குறள் கடவுள் வாழ்த்து ஆராய்ச்சி, கம்பராமாயணம் அரங்கேறிய காலம், வாலிவத சமாதனம் என்பது போன்ற தலைப்புகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

பங்களிப்பாளர்கள்

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர், மு. இராகவையங்கார், உ.வே.நரசிம்ஹாச்சாரியார், உ.வே. அப்பணையங்கார் ஸ்வாமி, வி.எஸ்.ராமஸ்வாமி சாஸ்திரிகள் போன்ற பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

வைணவ மடம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இவ்விதழின் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்து ஊக்குவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது இதழ்களில் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆவணம்

ஹரிஸமய திவாகரம் இதழின் பிரதிகள் சில ஆர்கைவ் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

ஹரிஸமய திவாகரம் இதழ்:ஆர்கைவ் தளம்


✅Finalised Page