under review

ஆரணி குப்புசாமி முதலியார்

From Tamil Wiki
Revision as of 20:08, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாவலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
ஆரணி குப்புசாமி முதலியார்

ஆரணி குப்புசாமி முதலியார் (டிசம்பர் 8, 1866 - ஜனவரி 24, 1925) தமிழின் முன்னோடி துப்பறியும் கதாசிரியர்களுள் ஒருவர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட் (Walter Scott), அலெக்ஸாண்டர் டூமாஸ்(Alexander Dumas), எட்கார் வாலஸ் (Edger Wallace), கானன் டாயில் (Arthur Conan Doyle) போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைத் தழுவி தமிழில் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

ஆரணி குப்புசாமி முதலியார், டிசம்பர் 8, 1866-ல், வடஆற்காட்டில் உள்ள ஆரணியில் பிறந்தார். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த பின் வேலூரில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

ஆரணி குப்புசாமி முதலியாரது மனம் ஆன்மிகத்தை நாடியதால், திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்குள்ள ஈசான்ய மடத்தில் தங்கி வேத, வேதாந்த நூல்களைக் கற்றார். மகாதேவ சுவாமிகள் என்பவரிடம் சமய தீட்சை பெற்றார். துறவியாக விரும்பினார். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் இல்லற வாழ்வை மேற்கொண்டார்.

உப்பள இலாகாவில் துணை ஆய்வாளர் வேலை கிடைத்தது. சென்னைக்குக் குடி பெயர்ந்தார். ஆரணி குப்புசாமி முதலியார் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். சைவம் சார்ந்த கருத்துக்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தனக்குக் கிடைத்த ஓய்வுநேரத்தில் எழுதத் தொடங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆரணி குப்புசாமி முதலியாரின் முதல் நூலான 'இந்துமத உண்மை’ அவரது 26-ஆம் வயதில் வெளியானது. தொடர்ந்து ஆங்கில நூல்களின் பக்கம் அவரது கவனம் சென்றது. குறிப்பாக ரெயினால்ட்ஸின் நாவல்கள் இவரைக் கவர்ந்தன. ஆகவே அதனைத் தமிழ்ப்படுத்தி எழுத ஆரம்பித்தார். முதல் நாவல் 'லீலா’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அது ரெயினால்ட்ஸ் நாவலின் தழுவலே. (பிற்காலத்தில் மறைமலையடிகளும் 'குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி’ என்ற தலைப்பில் இதே நாவலை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டார்) அதனைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புக் கதைகளில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆரணி குப்புசாமி முதலியார் எழுதும் நாவல்களை 'நோபில் அச்சகம்’ போன்றவை வாங்கி நேரடியாகப் பதிப்பித்தன.

ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்கள் பட்டியல்
ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களின் தனித் தன்மை

பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தனவாக ஆரணி குப்புசாமி முதலியாரது நாவல்கள் அமைந்திருந்தன. வாசககர்களைக் கதையோடு கட்டிப்போடும் வல்லமை அவரது எழுத்திற்கிருந்தது. ஆர்தர் கானன் டாயில் நாவல்களில் வரும் ’ஷெர்லாக் ஹோம்ஸ்’ பாத்திரத்தை தமிழில் 'ஆனந்தஸிங்’ என்ற கதாபாத்திரமாக உருவாக்கி தனது படைப்புகளில் இடம் பெறச் செய்தார்.

பிற்காலத்திய சங்கர்லால் (தமிழ்வாணன்), சிங் (புஷ்பா தங்கதுரை), கணேஷ் (சுஜாதா), ராஜா (ராஜேந்திரகுமார்) விவேக் (ராஜேஷ்குமார்), பரத் (பட்டுக்கோட்டை பிரபாகர்), நரேந்திரன் (சுபா), பிரசன்னா (தேவிபாலா) என்றெல்லாம் வரும் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி ஆரணி குப்புசாமி முதலியார் படைத்த 'ஆனந்த்ஸிங்’ பாத்திரமே. நாவல் தலைப்புகளிலும், அத்தியாயத் தலைப்புகளிலும் வாசகர்களை ஈர்க்கும்படியான பல்வேறு உத்திகளை கையாண்டார். ஆங்கிலக் கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களையும் ஊர்ப் பெயர்களையும் அப்படியே தமிழ்ப்படுத்தி விடுவது ஆரணி குப்புசாமி முதலியாரின் பாணி.

"ரெயினால்ட்ஸ்(Reynolds), வால்டர் ஸ்காட் (Walter Scott), அலெக்ஸாண்டர் டூமாஸ்(Alexander Dumas), எட்கார் வாலஸ்(Edgar Wallace), கானன் டாயில்(Conan Doyle) போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தரவிரும்பிய குப்புசாமி முதலியார், தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் நடை, உடை, பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார். அத்துடன், கதைகளுக்கு இடையிடையே, நீதிபோதனைகளையும், வேதாந்தத் தத்துவங்களையும் கூறியிருக்கிறார்" என்கிறார், நாரண துரைக்கண்ணன்.

75-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளார் ஆரணி குப்புசாமி முதலியார். அவற்றில் சில, பல பாகங்களாக வெளிவந்தவை.

ஆனந்தபோதினி இதழ் - 1923

இதழியல் வாழ்க்கை

ஆரணி குப்புசாமி முதலியார், இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ’சஞ்சீவகரணி’ என்னும் இதழுக்குச் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். ஸ்ரீகரப்பாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகளின் சீடரான நாகவேடு முனிசாமி முதலியார் ஜூன், 1915-ல் சுவாமிகளின் ஆசியோடு 'ஆனந்தபோதினி’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆரணி குப்புசாமி முதலியார் அதற்கு ஆசிரியரானார்.

ஆரணி குப்புசாமி முதலியாரின் பல்துறைத் திறமை, ஆர்வம், கடின உழைப்பு போன்றவை ஆனந்தபோதினி இதழின் வளர்ச்சிக்கு உதவின. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அக்காலத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் என தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளிலும் ஆனந்தபோதினி வரவேற்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் சந்தாதாரர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது. பின் இருபதாயிரத்திற்கு உயர்ந்தது.

'ஆனந்தபோதினி’ இதழின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் "ஆனந்த குண போதினி", "ஆனந்த விகடன்" உள்பட பல இதழ்கள் தோன்றின. ஆரணி குப்புசாமி முதலியாரின் ஆசிரியத்துவத்தில், ஆனந்த போதினி இதழ், மாதர் பகுதி, சிறுவர்கள் பகுதி, வேதாந்த விளக்கம், சமயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பொதுவான குறிப்புகள் என பல்வேறு விஷயங்களைத் தாங்கி வந்தது. ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் தொடர்கதைகளும் மாதந்தோறும் வெளியாகின. அவை பின்னர் தொகுக்கப்பட்டு 'ஆனந்தபோதினி அச்சகத்தார்’ மூலமே நூல்களாகவும் வெளிவந்தன.

பகவத் கீதை வசனம் - கைவல்ய நவநீத வசனம்

துப்பறியும் நாவல்களோடு "சீடன்" என்ற புனைபெயரில் "ஸ்ரீபகவத் கீதை வசனம்", "கைவல்ய நவநீத வசனம்" போன்ற சமயம் சார்ந்த தொடர்களையும் ஆரணி குப்புசாமி முதலியார் 'ஆனந்தபோதினி’ இதழில் எழுதி வந்தார்.

ஆவணம்

ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய ஸ்ரீபகவத் கீதை வசனம், கைவல்ய நவநீத வசனம் போன்ற நூல்களும், அவர் ஆசிரியத்துவத்தில் வெளியான ஆனந்தபோதினி இதழ்களும் ஆர்கைவ் தளத்திலும், தமிழ் இணைய நூலகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளன.

ஆரணி குப்புசாமி முதலியாரின் நூல்கள் சிலவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மறைவு

ஆனந்தபோதினி" இதழின் ஆசிரியராக டிசம்பர், 1924 வரை பணியாற்றிய ஆரணி குப்புசாமி முதலியார், தனக்கேற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், ஜனவரி 24, 1925-ல் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னரும் கூட அவரது தொடர்கள் ஆனந்தபோதினியில் வெளியாகி வந்தன.

இலக்கிய இடம்

ஆரணிகுப்புசாமி முதலியாரின் எழுத்து பற்றி, கி.வா.ஜகந்நாதன் தனது 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில், "ஆரணி குப்புசாமி முதலியார் அவர்கள் ரைனால்ட்ஸ் நாவல்களையும் மற்ற மர்மக் கதைகளையும், கொலை, கொள்ளை, துப்பறிதல் ஆகியவற்றைச் சொல்லும் கதைகளையும் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பு தெளிவாக இருந்தது. படித்தால் கதையோட்டத்தோடு மனம் செல்லும்படி அமைந்திருந்தது. அதனால் அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கிப் படித்தனர். மாணவர்கள் மிகுதியாகப் படித்து இன்புற்றனர்" என்கிறார். மேலும் அவர், "அவருடைய நாவல்களால் விளைந்த நன்மைகளையும் சொல்ல வேண்டும். அவருடைய மொழிபெயர்ப்பு இயல்பான தமிழ்நடையில் அமைந்திருந்தது. அது ஒரு சிறப்பு. மற்றொன்று அவருடைய மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள் மேலும் மேலும் நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றார்கள் [1]" என்று மதிப்பிடுகிறார். தமிழில் 'வெகு ஜன இலக்கியம்’ என்பதற்கு வித்திட்ட முன்னோடி எழுத்தாளராகவும், சாதாரண மக்களை வாசிப்பின் பக்கம் நோக்கி ஈர்த்தவராகவும் ஆரணி குப்புசாமி முதலியார் மதிப்பிடப்படுகிறார். அக்காலத்து மத்தியதர வர்க்கத்து மக்களிடையே வாசிப்பார்வம் பெருக இவரது எழுத்துக்கள் மிக முக்கியக் காரணமாய் அமைந்தன.

இந்திரா பாய்
இராஜாமணி
தேவசுந்தரி

நூல்கள்

  • இரத்தினபுரி ரகசியம் - 9 பாகங்கள்
  • தினகரசுந்தரி அல்லது ஒரு செல்வச் சீமாட்டியின் அற்புதச் சரித்திரம்
  • அரசூர் இலட்சுமணன் அல்லது அதியற்புதக் கள்ளன்
  • இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்
  • இந்திர ஜித்தன் அல்லது கள்ளர் தலைவன்
  • தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்
  • விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை
  • இராஜாமணி அல்லது ஓர் அபூர்வ மர்மம்
  • கமலநாதன் அல்லது களவு போன ரத்னமாலை
  • கற்பகச் சோலையின் அற்புதக் கொலை
  • சங்கநிதி அல்லது செல்வராஜன்
  • கற்பகசுந்தரி அல்லது மூன்று அறைகளின் மர்மம்
  • கிருஷ்ணவேணி அல்லது அதிசய மர்மச் சுரங்கம்
  • கிருஷ்ணா சிங் அல்லது துப்பறியும் சீடன்
  • குணசுந்தரன் அல்லது மித்ருத் துரோகம்
  • சந்திராபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி
  • சுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம்
  • ஞான செல்வாம்பாள் அல்லது இரண்டு சகோதரிகள் - 5 பாகம்
  • தாக்ஷாயணி அல்லது காதலன் வெற்றி
  • தினகர சுந்தரி அல்லது செல்வச் சீமாட்டியின் அற்புத சரித்திரம்
  • தேவசுந்தரி அல்லது ஓர் கற்புக்கரசியின் சரிதை
  • கிருஷ்ணவேணி அல்லது அதிசயமர்மச் சுரங்கம்
  • சந்திரபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி
  • பவளத் தீவு அல்லது குடும்ப சாபம் - 2 பாகம்
  • சுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம்
  • கமலசேகரன் அல்லது ஓர் சுத்தவீரனின் அதிசய சரித்திரம்
  • மதன பூஷணம் அல்லது இறந்தவன் பிழைத்தது
  • ரங்கநாயகி அல்லது துப்பறியும் மூன்று நிபுணர்கள்
  • லீலா அல்லது மங்கைபுர மாணிக்கம்
  • லோகநாயகி அல்லது அதிசயப் புதையல்
  • வரத சுந்தரம் அல்லது நவநீதம்
  • வீரநாதன் அல்லது மலைநாட்டுத் துப்பறிபவன்
  • நித்தியானந்தன்
  • பூங்கோதை
  • ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள்
  • மின்சார மாயவன்
  • தபால் கொள்ளைக்காரர்கள்
  • மதனகல்யாணி
  • கடற்கொள்ளைக்காரன் - 2 பாகம்
  • அமராவதி பாலம்
  • ஆயிஷா
  • அபூர்வ சிந்தாமணி
  • அர்ஜுன் சிங்
  • ஆனந்தசிங்
  • ஆனந்தசிங்கின் அஷ்டஜயங்கள்
  • கருணாகரன்
  • கற்கோட்டை
  • கனக பூஷணம்
  • கனகரத்தினம்
  • கோஹர்ஜான்
  • தேவராஜு
  • நாகபுரியின் நாகரீகம் -2 பாகம்
  • பத்மலோசனி
  • பத்மாசனி
  • பதுமநிதி
  • லண்டன் சாமர்த்தியத் திருடர்கள்
  • பூலோக லக்ஷ்மி
  • மங்கைக்கரசி
  • மஞ்சள் அறையின் மர்மம்
  • மதன காந்தி
  • மதனாம்பாள் -2 பாகம்
  • மாண்டி கிருஸ்டோ - 2 பாகம்

உசாத்துணை

குறிப்புகள்



✅Finalised Page