being created

திருப்பாவை

From Tamil Wiki
Revision as of 16:33, 27 December 2022 by Ramya (talk | contribs)
திருப்பாவை

திருப்பாவை (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த நூல். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது.

நூல் பற்றி

பொ.யு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த நூல். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தன்னை ஆயர்பாடி பெண்களில் ஒருத்தியாக பாவித்து பாடியது. முப்பது பாடல்களைக் கொண்டது. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் 474-503வது பாடல்களாக அமைந்துள்ளன. யாப்பு அமைதியுடன் ஒவ்வொரு பாடலும் எட்டு வரிகளாக அமைந்துள்ளன.

ஆன்மிகம்

வைணவ சமயத்தில் முக்கியமான நோன்பாக மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று பெண்கள் திருப்பாவைப் பாடல்களைப் பாடினர். திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வாடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தருளியுள்ள வடபத்ரசாயியை கண்ணனாகவும் பாவித்து ஆயர்பாடியிலுள்ள பெண்களை துயிலெழுப்பும் பாவத்துடன் இப்பாடல் மார்கழியில் பாடப்படுகிறது.

இலக்கிய இடம்

பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சார்ந்த நூல். ஆண்கள் தங்களை பெண்ணாக பாவனை செய்து இறைவனை நோக்கி பாடல்களைப் பாடினர். இது நாயகன் நாயகி பாவம் என்று அழைக்கப்படுகிறது. தன்னை அவ்வாறு உருவகிக்கத் தேவைப்படாத, பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண்ணான ஆண்டாள் பாடியது குறிப்பிடத்தக்கது.

திருப்பாவை ஜீயர்

ராமானுஜர்க்கு ஆண்டாளின் திருப்பாவை மீது ஈடுபாடு இருந்ததால் ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைக்கப்பட்டார். பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெயரை வழங்கினார்.

ராமானுஜர் (நன்றி: காமதேனு)
தொன்மம்

ராமானுஜர் தன் சீடரான கிடாம்பி அச்சனுடன் திருப்பாவை பாடியபடி சில இல்லங்களுக்குச் சென்று சமயலுக்குத் தேவையானவற்றை சேகரிப்பார். வைணவப் பெரியவரான பெரிய நம்பிகள் இல்லத்துக்குச் சென்று அன்று பதினெட்டாவது திருப்பாவையை பாடினார். பாடலின் நிறைவில் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்’ என்ற வரிகளைப் பாடிய சமயத்தில் பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் வாயிற்கதவைத் திறந்தார். அத்துழாயைக் கண்டதும் ராமானுஜர் மூர்ச்சையானார். இந்தப் பாசுரத்தின் நாயகியான நப்பின்னையை அத்துழாய் ரூபத்தில் தரிசித்ததால் ராமானுஜருக்கு மூர்ச்சையாகியிருக்க வேண்டும் என்று நினைத்த பெரிய நம்பிகள் ராமானுஜரை ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைத்தார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபட்டனர். பாவை நோன்பின் முறைகளும், பயன்களும் சொல்லப்பட்டது.
  • பாவை நோன்பு மேற்கொள்வோர் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டனர். உணவு, ஒப்பனைகள் குறைத்து, நீராடி, பறை, சங்கு இசைத்து பல்லாண்டு பாடி இறைவனை வழிபட்டனர்.
  • மார்கழி மாதத்தில் ஆயர்பாடியில் உள்ள மகளிரை பாவை நோன்பு நோற்க, மார்கழி நீராட அழைத்தல், பாவை நோன்பு நோற்கும் முறைகள், அதன் பயன்கள், இறைவனிடம் மழைக்கான வேண்டல், இறைவனை வேண்டினால் வரும் நன்மைகள், இறைவனின் சிறப்பையும், பாவை நோன்பின் சிறப்பையும் கூரி தன் தோழியை ஆண்டாள் துயிலெழுப்புதலும், இறைவனை ஆண்டாள் துயிலெழுப்புதலும், வேண்டலுமாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

  • திருப்பாவை: 3வது பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்

உசாத்துணை

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.