first review completed

வடம வண்ணக்கன் தாமோதரனார்

From Tamil Wiki
Revision as of 19:31, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)

வடம வண்ணக்கன் தாமோதரனார் சங்ககாலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூலில்(குறுந்தொகை,புறநானூறு) உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

தாமோதரன் என்பது இயற்பெயர். வடநாட்டிலுள்ள வடமர் வகுப்பினர். வடம வண்ணக்கன் நாணய ஆய்வாளர் தொழில் செய்து வந்தார் என்பதை அவரை "வண்ணக்கார்" என்று வழங்குவதிலிருந்து அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

வடம வண்ணக்கன் தாமோதரனார், குதிரை மலைக்குறியவனும், சேரர் படைத்தலைவனும் சிறந்த கொடையாளனுமான பிட்டங்கொற்றனைப் பாடிய பாடல் புறநானூற்றில் 172-ஆவது பாடலாக உள்ளது. குறுந்தொகை 85-ஆவது பாடல் மருதத் திணையில் தோழி கூற்றாக உள்ளது. தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், "தலைவன் மிக்க அன்புடையன்" என்று பாராட்டியபொழுது தோழி, "இவன் சொல்லத்தான் அவரதன்பு புலப்படுகின்றது. மற்று அவர் செயலால் அறிந்திலம்" என்று கூறி வாயில் மறுத்தது என்ற துறையின் கீழ் வருகிறது.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • பிட்டங்கொற்றன் பாணர், இரவலர்களைப் புரந்து ஓம்பினான்.
  • அவன் புரப்பது தவறினால் சேரன் தான் முந்தி வந்து புரத்தல் செய்வான்.
  • பிட்டங்கொற்றன் நாட்டில் தினை காப்போர் காவலுக்குத்துணையாக நிற்கும் தீ அணைந்துவிட்டால் அங்கு மலிந்து கிடக்கும் மாணிக்கக்கற்கள் தாம் விடும் ஒளியால் துணை செய்யும் என்று கூறி நாட்டின் செல்வ வளத்தைக் காணிக்கிறார்.
  • தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்திற்கு உவமை: ஆண்பறவையானது கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு முட்டையிடுவதற்குரிய ஏற்ற இடத்தை அமைக்கும் பொருட்டு தேனடை கட்டித்தொங்கும் இனிய கரும்பு வளைந்திருக்கும் கழனிக்குச் சென்று அத்தேனடையினைக் காணாது மணம் வீசாத வெள்ளிய பூவைக் கொணரும்.

பாடல் நடை

  • குறுந்தொகை 85

யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே.

  • புறநானூறு 172

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி,
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும்.
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.