நீல பத்மநாபன்

From Tamil Wiki
நீல பத்மநாபன்

நீலபத்மநாபன் [நீலகண்டப்பிள்ளை பத்மநாபன்] பிறப்பு: ஏப்ரல் 26, 1938, கன்னியாகுமரி மாவட்டம்).தமிழ் எழுத்தாளர். யதார்த்தவாத- இயல்புவாத அழகியலின் முன்னோடிகளில் ஒருவராக விமர்சகர்களால் கருதப்படுபவர். இவரது தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் ஆகிய நாவல்கள் விமர்சகர்களால் தமிழில் எழுதப்பட்டமுதன்மையான நாவல்களின் வரிசையில் வைக்கப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டில் இலையுதிர்காலம் என்னும் நாவலுக்காக கேந்த்ரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

நீல பத்மநாபன் 1988

நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்னும் ஊரில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். தந்தை நீலகண்டப்பிள்ளை. தாய் ஜானகி அம்மாள். இவருடைய தந்தை திருவனந்தபுரத்தில் மரக்கடை ஒன்றில் பணியாற்றினார். ஆகவே இளமைப்பருவம் திருவனந்தபுரத்தில் கழிந்தது. நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார். கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் ஆண்டுகளில் இயற்பியல் பயின்று இளங்கலை (BSc.) பட்டம் பெற்றார். கேரளப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வென்று திரிச்சூரில் சிலகாலம் இளநிலை அரசு ஊழியராகப் பணியாற்றினார். அவ்வேலையை துறந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் இளங்கலைப் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றார் . 1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். 1993  ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார்

தனிவாழ்க்கை

மனைவி கிருஷ்ணம்மாளுடன்

நீல பத்மநாபனின் மனைவி பெயர் கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு ஜானகி, உமா, கவிதா என்னும் மூன்று மகள்கள். நீலகண்டன் என்னும் மகன். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்

இலக்கிய வாழ்க்கை

நீலபத்மநாபனின் முதல் படைப்பு ’பதில் இல்லை’ என்னும் சிறுகதை. இது 1956ல் கல்லூரி மலரில் வெளியாகியது. அப்போது அவருக்கு வயது 18. உதயதாரகை என்னும் நாவலை தன் 20 ஆவது வயதில் எழுதினார். ஆனால் அது 1980ல்தான் வெளிவந்தது. அவருடைய இரண்டாம் நாவலான இஞ்சீனியர் 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்ரமணியம் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். 1968ல் வெளிவந்த மூன்றாவது நாவலான தலைமுறைகள்தான் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றது.

தலைமுறைகள் நாவலைப் பற்றி க.நா.சு “இந்தியச் சூழ்நிலையில் விமர்சனப் பரீட்சைகளை எதிர்கொண்டு நிற்கக்கூடிய ஒரு டஜன் நாவல்களில் தலைமுறைகளும் ஒன்று.” என்று குறிப்பிடுகிறார். அவருடைய பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரம் நகரின் பின்னணியில் நனவோடை உத்தியால் எழுதப்பட்டது. “திருவனந்தபுரம் நகரத்தின் ஆன்மா வெளிப்பட்ட நாவல் அது’ என்று மலையாள விமர்சகர் என்.வி.கிருஷ்ண வாரியர் குறிப்பிடுகிறார்.

நாகர்கோயில் ஜெய்குமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகக்கடை தலைமுறைகள் நாவலை வெளியிட்டது. நீல பத்மநாபனின் சொந்தச் செலவில் இந்நூல் வெளியாகியது என அவர் பதிவுசெய்திருக்கிறார். பள்ளிகொண்டபுரம் நாவல் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்னும் பதிப்பாளரின் வாசகர் வட்டம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. உறவுகளை மீண்டும் சொந்தச்செலவில் நீலபத்மநாபனே வெளியிட்டார். அவருடைய படைப்புகளுக்கு பல ஆண்டுக்காலம் பதிப்பகங்களின் உதவி கிடைக்கவில்லை. ஏனென்றால் அவை வெகுஜன வாசகர்களுக்குரியவையாக அமையவில்லை.

நீல பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதி என்னும் நாவல் இலக்கியப்பூசல் தன்மை கொண்டது. இதில் ஓர் எழுத்தாளன் தன் படைப்புக்களை அச்சில் கொண்டுவர படும் துயரங்களை விரிவாக எழுதியிருக்கிறார். இது அவருடைய தனியனுபவங்களை ஒட்டிய சித்திரம்.

அழகியல், உலகப்பார்வை

நீல பத்மநாபன் பெரும்பாலும் தன் சொந்தவாழ்க்கையின் அணுக்கமான சாயல் கொண்ட படைப்புகளை எழுதுபவர். பெரும்பாலான கதைகள் அவர் பிறந்த இரணியல், அவர் வாழும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களைக் களமாகக் கொண்டவை. அவருடைய குடும்பப்பின்புலம், அவருடைய அலுவலகச்சூழல் ஆகியவற்றை ஒட்டிய புனைவுகளாக தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம் ஆகிய நாவல்கள் அமைந்துள்ளன.

நீல பத்மநாபனின் நாவல்களின் பொதுவான அமைப்பு ஒரு கதாபாத்திரத்தின் புறவுலகையும் அகவுலகையும் அந்த கதாபாத்திரத்தின் பார்வையிலேயே விவரிப்பது. உணர்ச்சிகளும் அவ்வாறே விவரிக்கப்படுகின்றன. நடுத்தரவர்க்க அன்றாட வாழ்க்கையை நடுத்தரவர்க்க எளியமனிதர்களின் பார்வையிலேயே அவர் எழுதியிருக்கிறார். நனவோடை உத்தியை பள்ளிகொண்டபுரம், உறவுகள் போன்ற நாவல்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் கதைசொல்லவும் பேச்சுமொழிக்கு அணுக்கமான நடையை பயன்படுத்தியிருக்கிறார். இது க.நா.சுப்ரமணியம் போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்டது, மரபான வாசகர்களால் எதிர்க்கப்பட்டது. “நீல பத்மநபனின் தலைமுறைகள் தமிழ் உரைநடைப்போக்கில் முக்கியமானதோர் திருப்புமுனையாகும்.பேச்சுத்தமிழ் இலக்கியப் படைப்புக்குரியதே என்று செயல்முறையில் செய்துகாட்டிய சாதனை நீலபத்மநாபனுடையது. இதை ஆங்கில மொழியில் ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலிஸஸ் நாவல் மூலம் செய்துகாட்டிய சாதனையுடன் ஒப்பிடலாம்’’ என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார் [கால ஓட்டமும் தமிழ்நடையும். கல்கத்தா தமிழ் மன்ற வெள்ளிவிழா மலர்]

நீல பத்மநாபன் கவிதைகள் நேரடியான உணர்ச்சிப்பெருக்குகளாக அமைபவை.யாப்பில்லாமல் ஓசையொழுங்குடன் அமைந்த அக்கவிதைகளில் ஐயப்பப் பணிக்கர் போன்றவர்கள் எழுதிய யாப்பற்ற ஆனால் இசையமைதி கொண்ட மலையாளக் கவிதைகளின் அழகியல் செல்வாக்கு உண்டு.

இருத்தலியல், மார்க்ஸியம் போன்ற கொள்கைகளின் செல்வாக்கு நீல பத்மநாபனில் இல்லை. ஆனால் அவருடைய எஞ்சீனியர், மின்உலகம் போன்ற நாவல்களில் உழைப்பாளிகள் மீதான சுரண்டலின் சித்திரங்கள் உள்ளன என்று நா.வானமாமலை குறிப்பிடுகிறார். ( நீலபதமாந்பன் படைப்புலகம்பாரதி நேஷனல் ஃபாரம்) பள்ளிகொண்டபுரம், உறவுகள் ஆகிய நாவல்களில் இருத்தலியல் சிக்கல்கள் பேசப்படுகின்றன என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதுண்டு.

பொதுவாக உறவுகளிலும், அரசு குடும்பம் போன்ற அமைப்புக்களிலும் சிக்கி சிதைவுறும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை நீல பத்மநாபன் எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

நீல பத்மநாபன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புகொண்டு இலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறார். சிறுகதைகளுக்காக நீலபத்மம் என்னும் இலக்கிய விருது திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது.கவிதைகளுக்காக தலைமுறைகள் விருது வழங்கப்படுகிறது. அவருடைய பிறந்தநாளான ஏப்ரல் 26 அன்று இவ்விருது அளிக்கப்படுகிறது.

விவாதங்கள்

1986 ல் நீல பத்மநாபன் தீபம் இதழில் எழுதிய ஒரு சிறுகதை தனிப்பட்ட முறையில் தன்னை தாக்குவதாக எண்ணிய ஒரு சக ஊழியர் அவரை தாக்கினார். இது எழுத்தாளர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

1987ல் நீல பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதி என்னும் நாவலில் சிவ கதிரேசன் என்னும் எழுத்தாளரின் வாழ்க்கைக்கதை. அது நீலபத்மநாபன் தன்வரலாற்றுத்தன்மையுடன் எழுதியது என்றும், அதில் அவர் பல எழுத்தாளர்களைப் பற்றிய அவதூறுகளை எழுதிவிட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

படைப்புகள்

to be updated

நீல பத்மநாபனின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகள்

  1. நீல பத்மநாபனின் இலக்கியத்தடம் 1999
  2. தமிழன்னை விருது 1988
    நீல பத்மநாபன் படைப்புலகம் 2001
ராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது 1977

விருதுகளும் பரிசுகளும்

  • ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசு 1977 (உறவுகள்)
  • தமிழ் அன்னை விருது 1988
  • சாகித்திய அகாதமி விருது 2007 (இலை உதிர் காலம்)
  • கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் ரங்கம்மாள் பரிசு (இலையுதிர்காலம்)
  • மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது
  • தமிழ்நாடு அரசு விருது
  • மைசூர் சிஐஐஆரின் பாஷா பாரதி பரிசு

உசாத்துணை

https://sahitya-akademi.gov.in/library/meettheauthor/neela_padmanabhan.pdf

https://www.jstor.org/stable/23337414

https://neelapadmanabhan.com/