being created

அ. மருதகாசி

From Tamil Wiki
Revision as of 17:11, 20 December 2022 by ASN (talk | contribs) (உசாத்துணை இணைப்பு)
கவிஞர் அ. மருதகாசி
Marudhakasi
கவிஞர் அ. மருதகாசி

அ. மருதகாசி (பிப்ரவரி, 13, 1920-நவம்பர் 29, 1989) தமிழ்க் கவிஞர்; திரைப்பாடலாசிரியர். நாடக வசன மற்றும் பாடலாசிரியர். அக்காலத்தின் முன்னணி நடிகர்களான தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலருக்குப் பாடல்கள் எழுதினார். நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவரது படைப்புகளை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

அ. மருதகாசி, பிப்ரவரி, 13, 1920-ல், திருச்சியில் உள்ள பழூர் மேலக்குடிக்காடு கிராமத்தில், ஐயம்பெருமாள்-மிளகாயி அம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். தந்தை கிராம அதிகாரியாகப் பணிபுரிந்தார். நான்காம் வகுப்பு வரை உள்ளூரில் கல்வி பயின்ற மருதகாசி, பின்னர் எட்டாம் வகுப்பை கும்பகோணம் பாணாதுரை உயர்நிலைப்பள்ளியில் படித்தார். இயல்பிலேயே தமிழார்வம் கொண்டிருந்த மருதகாசிக்கு, பள்ளி ஆசிரியரும் பாபநாசம் சிவனின் மூத்த சகோதரருமான ராஜகோபாலய்யர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ‘இண்டர்மீடியட்’ படிப்பை நிறைவு செய்தார். தமிழறிஞர் கோ.முத்துப்பிள்ளை இவரது தமிழ்த்திறன் அறிந்து  ஊக்குவித்தார்.

தனி வாழ்க்கை

அ. மருதகாசி தொடர்ந்து மேற்கல்வி கற்க விரும்பினார். ஆனால், குடும்பச் சூழல்களால் அதனைக் கைவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். தந்தை பார்த்துது வந்த கிராம அதிகாரிப் பணியைத் தொடர்ந்தார். 1940-ல் தனக்கோடியுடன் திருமணமானது. இவர்களுக்கு ஆறு மகன்கள்; மூன்று மகள்கள். மகன் மருதபரணி, திரைக்கதை-வசன ஆசிரியர். தமிழ் மற்றும் தெலுங்கு என ஆயிரக்கணக்கான படங்களுக்கு மொழிமாற்ற வசனத்தில் பங்களித்துள்ளார். பாடல்களும் எழுதியுள்ளார்.

நாடக வாழ்க்கை

அ. மருதகாசி கல்லூரியில் படிக்கும் போது பல நாடகங்களை எழுதி இயக்கினார். நண்பர்களின் நாடகங்களுக்குக் கதை-வசனம், பாடல்கள் எழுதினார். ‘கலைமகள் உறைந்திடும் கலாசாலை' என்பது இவரது முதல் நாடகப் பாடல். தேவி நாடக சபை என்ற நாடக்குழுவில் பாடலாசிரியராகப் பணியாற்றினார். நண்பர் ஒருவர் மூலம் ஏ.கே.வேலன் எழுதிய ‘சூறாவளி’ என்ற நாடகத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது. கவிஞர் கா.மு.ஷெரீப்பின் நட்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்தும், தனியாகவும் சில நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். கவிஞர் உடுமலை நாராயணகுருவைத் தனது குருவாகக் கருதினார்.

திரையுலக வாழ்க்கை

அரு.ராமநாதன் எழுதிய ‘வானவில்’ என்ற நாடகத்திற்குப் பாடகர் திருச்சி லோகநாதன், மருதகாசியைப் பாடல்கள் எழுதச் சொன்னார். அந்தப் பாடல்கள் பலரையும் கவர்ந்தன. அப்பாடல்களால் ஈர்க்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம், மருதகாசியைத் தனது நிறுவனத்துக்குப் பாடல்கள் எழுத அழைத்தார். தயாரிப்பு நிர்வாகியாக இருந்த எம்.ஏ.வேணு மருதகாசியின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். 1949-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த, ‘மாயாவதி’ என்ற படத்திற்காக,  ஜி.ராமநாதனின் மெட்டுக்கு மருதகாசி பாடல் எழுதினார். “பெண் எனும் மாயப் பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ’ என்ற பாடல்தான் திரையுலகிற்காக மருதகாசி எழுதிய முதல் பாடல். மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் நண்பர்கள் என்பதால் ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்தே பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினர். தொடர்ந்து வாய்ப்புகள் அதிகமாகவே இருவரும் தனித்தனியாக எழுதத் ஆரம்பித்தனர். பாடலாசிரியராகத் தனது திரைப்பயணத்தில், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பாடல்களை எழுதினார் மருதகாசி.

இசையும் பாடல்களும்

தியாகராஜ பாகவதர் ‘அமரகவி’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய வாழ்வு பெறுவோம்’ என்னும் மருதகாசியின்  பாடலை மனம் விரும்பிப் பாடினார். ‘ராஜா ராணி’ படத்திற்காக மருதகாசி எழுதிய ‘சிரிப்பு.. சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு...’ என்ற பாடலின் வரிகளை மனமுவந்து பாராட்டி, வாழ்த்தினார் என்.எஸ்.கிருஷ்ணன். ஹிந்தி மெட்டுக்களுக்கேற்ப சுவாரஸ்யமான பாடல்களைத் தமிழில் தருவதிலும் மருதகாசி தேர்ந்தவராக இருந்தார். ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘தாய்க்குப் பின் தாரம்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘வண்ணக்கிளி’, ‘கைதி கண்ணாயிரம்’ என 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு மருதகாசி முழுமையாகப் பாடல்களை எழுதினார்.

மெட்டுக்குப் பாடல்கள் எழுதிவதில் மிகத் தேர்ந்தவராக இருந்தார் மருதகாசி. ஜி.ராமநாதன் மட்டுமல்லாமல் சி.ஆர். சுப்பராமன், ஞானமணி, சலபதிராவ், டி.ஜி.லிங்கப்பா, எஸ்.தக்ஷிணாமூர்த்தி, எஸ்.வி.வெங்கட்ராமன்,  சி.என்.பாண்டுரங்கன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, வேதா, சங்கர்-கணேஷ் எனப் பலரது இசைக்கு இவர் பாடல்கள் எழுதினார். திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்றோருக்கு சிறந்த பல பாடல்களைத் தந்து, அவர்கள் திரையுலகில் புகழ் பெறக் காரணமானார்.

பக்தி, காதல், தாலாட்டு, நகைச்சுவை, சமூகம், தத்துவம், சோகம், கிராமியப்பாடல்கள் என பல தரப்பட்டதாய் இவரது பாடல்கள் அமைந்தன. “அறுபதுகளின் இறுதிவரை 21 விவசாயப் பாடல்கள்தான் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் 17 பாடல்களை அப்பா எழுதியிருக்கிறார்.” என்கிறார், அ. மருதகாசியின் மகன் மருதபரணி [1]

திரைப்படத் தயாரிப்பு

நண்பர்கள்  கே. வி. மகாதேவன், வி. கே. முத்துராமலிங்கம், வயலின் மகாதேவன் ஆகியோருடன் இணைந்து ‘அல்லிபெற்ற பிள்ளை’ என்ற படத்தைத் தயாரித்தார் மருதகாசி. படம் ஓடாததால் பெரும் பொருளாதார நட்டத்திற்கு உள்ளானார். மன உளைச்சலால் படத்திற்குப் பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார்.

இதனை அறிந்த நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இவருக்குத் தகுந்த உதவிகள் செய்து பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்தார். சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாத் தேவரும் தனது படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்பைத் தந்தார். தொடர்ந்து மீண்டும் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி, முன்னணிப் பாடலாசிரியரானார் அ. மருதகாசி.

அ. மருதகாசி பற்றிப் பாடலாசிரியர்கள்

கவிஞர் வாலி, மருதகாசி பற்றி

”படத்துறை இவரால்

பயன்கள் பெற்றது

பழந்தமிழ் இவரால்

புதுத்தமிழ் ஆனது


அடக்கம் இவரது

அணிகலம் என்பேன்

அகந்தை யாதென

அறியாப் பெம்மான்”

- என்று புகழ்ந்துரைத்தார்.

“விலைக்கு எழுதும் வியாபார நோக்கு அவருக்கு இருந்ததில்லை. கலைக்கு எழுதும் கற்பனைப் போக்கு மிக்கவர்” என்று பாராட்டியிருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஏ.கே.வேலன். “கவிஞர் மருதகாசி ஒரு மகத்தான மனிதர். பண்பாடுகளின் சாரம், நாகரிகத்தின் பிழிவு. அவரது எழுத்துக்களைப் போலவே மென்மையானவர்.” என்று புகழ்கிறார் கவிஞர் வைரமுத்து.

நான்காயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியிருக்கும் மருதகாசி, அதில் சில பாடல்களை நூலாகத் தொகுத்து, “என்னை வாழ வைத்த தெய்வம்; தென்னையைப் போன்ற வள்ளல்” என்றெல்லாம் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்துரைத்து, அவருக்கே அந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

விருதுகள்

  • திரைக்கவித் திலகம்
  • கண்ணதாசன் நினைவுப் பரிசு
  • தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது
  • தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது

மறைவு

அ. மருதகாசி, நவம்பர் 29, 1989 அன்று காலமானார்.

ஆவணம்

மருதகாசியின் மறைவுக்குப் பின் தமிழக அரசு, 2007-ல், அவரது திரை இசைப் பாடல்களை நாட்டுடைமை ஆக்கியது. கவிஞர் பொன். செல்லமுத்து, அ. மருதகாசியின் பாடல்களைத் தொகுத்து இரண்டு பாகங்களாக, மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

தமிழ்த் திரைப்படப் பாடல்களை இலக்கியத்தரத்திற்கு உயர்த்த முடியும் என்பதைத் தனது பாடல்கள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் அ. மருதகாசி. மண்ணின் மாண்புகளைக் கூறும் பாடல்களைப் படைத்ததில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர்களுக்கு முன்னோடி. மெட்டுக்கு இலக்கிய நயத்துடன் பாடல்களை அமைப்பதில் வல்லவராக இருந்ததால், இசையமைப்பாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். வடமொழிச் சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில், தமிழ்ச் சொற்களை அதிகம் பயன்படுத்திய முதன்மைப் பாடலாசாரியராக அ. மருதகாசி மதிக்கப்படுகிறார்.

அ. மருதகாசியின் பாடல்கள் சில...

பெண் எனும் மாயப் பேயாம் பொய் மாதரை...

புதிய வாழ்வு பெறுவோம்...

சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு...

சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...

பைசாவைப் போட்டு நைசாக வாங்கி...

எஜமான் பெற்ற செல்வமே...

வாராய் நீ வாராய்...

ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே...

மணப்பாறை மாடு கட்டி...

முல்லைமலர் மேலே...

மாசிலா உண்மை காதலே...

மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா..

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே...

காவியமா? நெஞ்சின் ஓவியமா?...

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...

வசந்தமுல்லை போலே வந்து...

உலவும் தென்றல் காற்றினிலே...

தென்றல் உறங்கியபோதும்...

வீணைக்கொடி உடைய வேந்தனே..

தை பொறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...

விவசாயி.. விவசாயி...

கடவுள் என்னும் முதலாளி...

ஆசைக் கிளியே கோபமா...

மாடுக்கார வேலா...

அன்பே.. அமுதே.. அருங்கனியே..

ஆடாத மனமும் உண்டோ..?

நீலவண்ணக் கண்ணா வாடா...

சின்ன பாப்பா எங்க செல்லப்பாப்பா..

ஜகம் புகழும் புண்ய கதை...

சித்தாடை கட்டிக்கிட்டு...

சீவி முடிச்சி சிங்காரிச்சி...

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.