ப.முத்துக்குமாரசுவாமி (இசையறிஞர்)

From Tamil Wiki

ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) தமிழ் மரபிசை அறிஞர், இசை ஆசிரியர். பண்ணியல், தமிழிசைமரபு ஆகியவற்றில் ஆய்வுசெய்தவர். தமிழிசை அறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகரின் மாணவர்

பிறப்பு, கல்வி

ப. முத்துக்குமாரசுவாமியின் முன்னோர்கள் காஞ்சீபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேறியவர்கள் .இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா இணையருக்கு 23 ஆகஸ்ட் 1932 ல் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் கல்வியை முடித்தபின் 1950ல் இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசைமாணாக்கராகச் சேர்ந்தார். அங்கே எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவராக ஆனார்.

தனிவாழ்க்கை

முத்துக்குமாரசுவாமி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின் யாழ்ப்பாணம் சென்று அங்கே அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணியாற்றினார். இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டதையடுத்து 1986 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்து அண்ணாமலை பல்கலை கழகத்தில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். தன் 86 வயதுவரை கௌரவப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்

இசைப்பணி

ப. முத்துக்குமாரசுவாமி சென்னை சங்கீத சபாக்களிலும், தனி நிகழ்ச்சிகளிலும் இசைநிகழ்ச்சிகள் செய்தார். சுதா ரகுநாதன் முதலிய இசைக்கலைஞர்களுக்கு மரபிசை கற்பித்தார்

2008 ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது சென்னையில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். தேசிகர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடிய பாடல்களை முத்துக்குமாரசுவாமி பலரால் பாடவைத்து புகழ்பெறச் செய்தார்

உசாத்துணை