under review

மூங்கில் பூக்கள்

From Tamil Wiki
Revision as of 10:24, 29 November 2022 by Madhusaml (talk | contribs)
மூங்கில்பூக்கள்

மூங்கில் பூக்கள் (1981) வாஸந்தி எழுதிய நாவல். இந்திய வடகிழக்கு மாநிலமான மிஸோரத்தின் பின்னணியில் அங்குள்ள இனப்பிரச்சினையை இணைத்துக்கொண்டு எழுதப்பட்டது.

எழுத்து, வெளியீடு

வாஸந்தி மூங்கில் பூக்களை 1981ல் மணியன் மாத இதழில் எழுதினார். பின்னர் நூல்வடிவம் பெற்றது. இந்நாவலை வாஸந்தி எழுபதுகளில் வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் இருந்தபோது கண்டவற்றின் அடிப்படையில் எழுதினார். "அந்த மாநிலங்களில் மக்கள் மத்திய அரசிடம் விரோதம் கொண்டதே அரசு நிர்வாகத்தில் இருந்தவர்கள் (வெளியிலிருந்து வந்தவர்கள்) மாநில பழங்குடியினரை 'ஜங்க்லீ' காட்டுமிராண்டி என்று பரிகசிப்பதும், அவர்களது பெண்களை உபயோகப்படுத்தி கேவலப்படுத்தும் தான் காரணம் என்று எல்வின் சொல்வதில் உண்மை இருப்பதை நான் என் அனுபவத்தில் கண்டு உணர்ந்தேன். மூங்கில் பூக்களில் வரும் விபத்து ஒரு உண்மை சம்பவம். அது நாங்கள் மிஜோராம் தலைநகரான அய்ஜலில் இருந்தபோது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்தது. என்னை மிகப் பெரிய விசனத்தில் ஆழ்த்தியது. ஆனால் மூங்கில் பூக்களை நான் டில்லிக்கு வந்த பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் எழுதினேன்" என வாசந்தி குறிப்பிடுகிறார்.

கதைச்சுருக்கம்

மிஸோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண்ணான ஷீலா ராணுவ அதிகாரி ராஜீவை காதலிக்கிறாள். அவளுடைய வகுப்பில் பிரிவினைவாத தலைவர் லால் கங்காவின் மகன் சுங்கா படிக்க வருகிறான். சுங்கா கெட்டவன் என அறியப்பட்டாலும் நுண்ணுணர்வும் அழகுணர்வும் கொண்டவன். அவனுக்கும் ஷீலாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. ராஜீவ் பெண்பித்தன் என்பதை சுங்கா ஷீலாவிடம் சொல்ல அவன் இந்திய எதிரி என்பதனால் அப்படிச் சொல்கிறான் என ராஜீவ் சொல்கிறான். சுங்காவை ராஜீவ் கொல்கிறான். ஷீலா அங்கிருந்து தப்பிக்கிறாள். மிஸோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால் கங்காதான் என்று தெரிய வருகிறது.

மொழியாக்கம்

மூங்கில் பூக்கள் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளிவந்தது.

திரைப்படம்

இக்கதை மலையாளத்தில் பி.பத்மராஜன் இயக்கத்தில் கூடெவிடே என்னும் பெயரில் 1983ல் திரைப்படமாக வெளிவந்தது.

உசாத்துணை


✅Finalised Page