செய்கு முஸ்தபா
செய்கு முஸ்தபா (செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி) (1836 - ஜூலை 25, 1888) ஈழத்து தமிழ் மதத்தலைவர், கவிஞர். காதிரியதுன் நபவிய்யா எனும் இசுலாமிய சூபி பிரிவைச் சேர்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
செய்கு முஸ்தபா களுத்துறை, பேருவளையில் பிறந்தார். இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான ஹஸ்ரத் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றல். தனது சிறுவயதிலே தாயையும், தந்தையும் இழந்தார். பின்னர் தனது சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். சிறுவராக இருக்கும் போதே அரபு எழுத்தணிக்கலையில் (அப்ஜத்) தேர்ச்சி பெற்றிருந்தார்.தனது பன்னிரெண்டாவது வயதில் கல்வியைத் தொடர்வதற்கு இந்தியாவின் காயல்பட்டினம் சென்றார். அங்கு தப்ஸீர் (அல்-குர்ஆன் விளக்கவுரை), ஹதீஸ், பிக்ஹ் போன்ற இஸ்லாமியக் கல்வி கற்றார். மக்கா நகருக்குச் சென்று அங்கு புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் (கஹ்பா பள்ளிவாசல்) இமாமான செய்குல் இஸ்லாம் முப்தி ஸைனி தெஹ்லான் றஹ்மதுல்லாஹி அலைஹியிடம் கல்வி கற்றார். தனது கல்வியை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். இலங்கையில் தனது சன்மார்க்கப் பணியினைத் தொடர்ந்தார்.
ஆன்மிக வாழ்க்கை
இலங்கையில் யெமன் தேசத்தின் ஹழரமொத் நகரைச் சோந்த செய்கு அஹ்மத் முபராக் றஹ்மதுல்லாஹி அலைஹி என்ற இசுலாமிய அறிஞரைச் சந்தித்தார். செய்கு அஹ்மத் முபராக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைத் தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டார். செய்கு அஹ்மத் முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், காதிரியதுன் நபவிய்யா எனும் இசுலாமிய சூபி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தார். இவர்கள் இருவரும் சன்மார்க்கப் பணிக்காக இலங்கையின் காலி, மல்வானை, கஹடோவிட போன்ற பல இடங்களுக்கு சென்று, அங்கு இசுலாமிய ஆத்மிக நிலையங்களை உருவாக்கினர். பேருவளையில் காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலமையகத்தை இவர்கள் நிறுவினர். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கி.பி.1862 இல் மரணமடைந்தார். அவர்கள் காலி தளாபிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பின்னர் செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலைவராக செயற்பட்டார். அதற்கான உத்தரவும் அனுமதியும், செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் கொட்டியாக்கும்புர நகருக்கு அண்மையிலுள்ள அம்பைப்பள்ளியில் வைத்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில் இலங்கைக்கு வந்து பேருவளையில் அவர்களைச் சந்தித்த யெமன் நாட்டைச் சோந்த இஸ்லாமிய அறிஞர் அஹ்தல் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் பேருவளை மாளிகாச்சேனை தக்கியாவில் வருடாந்த புகாரி ஹதீஸ்கிரந்த பாராயண மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
இவர் பத்குர் ரஹ்மா பி தர்ஜிமதில் குர்ஆன் (அரபுத் தமிழில் எழுதப்பட்ட உலகின் முதலாவது புனித அல்குர்ஆன் விளக்கவுரை நூல்), மீதான் மாலை, பவாரிகுல் ஹிதாயா, பாகியாதுஸ் ஸாலிஹாத் நூல்களை இயற்றினார்.
மறைவு
செய்கு முஸ்தபா ஜூலை 25, 1888இல் காலமானார்.
நூல் பட்டியல்
- பத்குர் ரஹ்மா பி தர்ஜிமதில் குர்ஆன்
- மீதான் மாலை
- பவாரிகுல் ஹிதாயா
- பாகியாதுஸ் ஸாலிஹாத்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:செய்கு முஸ்தபா: noolaham
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.