கொல்லிப்பாவை

From Tamil Wiki
Revision as of 13:02, 8 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கொல்லிப்பாவை (1976) கொல்லிப்பாவை நாகர்கோயிலில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். முதன்மையாக சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன் படைப்புகளுக்காக நினைவுகூரப்படுகிறது வரலாறு க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொல்லிப்பாவை (1976) கொல்லிப்பாவை நாகர்கோயிலில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். முதன்மையாக சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன் படைப்புகளுக்காக நினைவுகூரப்படுகிறது

வரலாறு

கொல்லிப்பாவை சிற்றிதழ் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் ஜேசுதாசனின் கீழ் இலக்கிய ஆய்வுமாணவராக இருந்த ராஜமார்த்தாண்டன் எம்.வேதசகாயகுமார் உதவியுடன் வெளியிட்ட இதழ். முதல் இதழ் 1976 அக்டோபரில் வெளியானது. இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் அப்போது ராஜமார்த்தாண்டனுடன் இருந்த பிரமிள் என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டார். கொல்லிப்பாவை பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது. முதல் இதழ் 52 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. 1977இல் ஒரே ஒரு இதழ் வெளிவந்தது. வெவ்வேறு காலங்களிலாக 12 இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டது. பின்னர் கட்டைக்காடு ஆர்.கே. ராஜகோபாலன் 1985 ஜூலை முதல் 1988 ஜூன் வரை எட்டு இதழ்களை வெளியிட்டார். மொத்தம் இருபது இதழ்கள் வெளியாயின.

உள்ளடக்கம்

பிரமிள், சுந்தரராமசாமி, நகுலன், வண்ணநிலவன், ந.முத்துச்சாமி, எஸ்.ராமானுஜம், கி.ரா, தேவதச்சன், கலாப்ரியா, சுகுமாரன் ஆகியோரின் படைப்புகள் கொல்லிப்பாவையில் வெளியாயின. 1985ல் ஒரே இதழில் பதிமூன்று கவிதைகளை சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் எழுதினார். ராஜமார்த்தாண்டன் இளம்கவிஞர்களை விரிவாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. ஜெயமோகன் இலக்கியத்தில் நுழைந்து எழுதிய முதல் படைப்பு கைதி என்னும் கவிதை 1986 கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தது.

பங்களிப்பு

கொல்லிப்பாவை சிறு வட்டத்திற்குள் மட்டும் புழங்கிய இதழ். சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழை தொடங்குவதற்கு முன்பு எழுத களம் அமைத்தது. முதன்மையாக எண்பதுகளில் நிகழ்ந்த இலக்கிய விவாதங்களை வெளியிட்டமையால் நினைவுகூரப்படுகிறது.வெங்கட்சாமிநாதன் எழுதிய "இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’ கோயில் கலாச்சாரம் உயர்கலையை பேணியது என்பதை மறுத்து சுந்தர ராமசாமி எழுதிய கடித வடிவிலான கட்டுரையும் அதற்கு வெங்கட்சாமிநாதனின் வெளிவந்தன. அதை தொடர்ந்து 'வெகுசன ரசனையும் மதமரபும்' என்ற பிரமிளின் கட்டுரை வெளிவந்தது. சிறுகதை வடிவம் பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை, நாடக வடிவம் பற்றிய எஸ்.ராமானுஜம் கட்டுரை போன்றவை விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

உசாத்துணை

https://selvanraman.blogspot.com/2012/02/blog-post_16.html

https://www.jeyamohan.in/108415/