கருப்பங்குன்று,தேவனூர் சமணப்பள்ளிகள்

From Tamil Wiki
Revision as of 08:26, 8 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தினைச் (தாலுகாவை) சார்ந்த ஊர் ஓணம்பாக்கம் எனப்படுவதாகும். இது மதுராந்தகத்திலிருந்து 21 கி.மீ. தென்கிழக்கில் செய்யாறு செல்லும் சால...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தினைச் (தாலுகாவை) சார்ந்த ஊர் ஓணம்பாக்கம் எனப்படுவதாகும். இது மதுராந்தகத்திலிருந்து 21 கி.மீ. தென்கிழக்கில் செய்யாறு செல்லும் சாலையை ஒட்டியுள்ளது. இந்த ஊரிலுள்ள சிறிய மலைத்தொடரினைப் பஞ்ச பாண்டவ மலை என பொது மக்கள் அழைப்பர். இம்மலையின் ஒரு பகுதியில் காணப்படும் இரு குன்றுகளுள் ஒன்று கருப்பங்குன்று எனவும், அதற்குச் சற்று தொலைவில் தேவனூரை ஒட்டியவாறுள்ள குன்று ஊசிமலை அல்லது தேவனூர் மலை எனவும் பெயர் பெறுகின்றன இந்த இரண்டு குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த இரு குகைகள் உள்ளன. இவற்றுள் சமண முனிவர்கள் உறைவதற்கென இரண்டு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன,

இயற்கையான அமைந்த இவ்விரு குகைப்பாழிகளிலும் உள்ள படுக்கைகளில் தலையணை போன்ற அமைப்புகள் வெட்டப்படவில்லை. தென்மாவட்டங்களிலுள்ள குகைப் பாழிகளில் இடம் பெறுவது போன்று இங்கு பிராமிக் கல்வெட்டுக்களும் பொறிக்கப்படவில்லை. குகைகளின் உட்பகுதி ஓரளவு சமமாக இருப்பதால், மேலும் பல கற்படுக்கைகளை உருவாக்கவில்லை போலும்! இந்தக் குகைகளிலுள்ள படுக்கைகள் எப்போது உருவாக்கப்பட்டவை என்று வரையறை செய்வதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் எவையும் இல்லை. மாமண்டூரிலுள்ள கல்வெட்டில் கணிமான் என்னும் சிற்றரசன் வெற்றி பெற்று தேனூரைத் தந்தவன் எனக்குறிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டு, அச் சாசனத்தில் வரும் தேனூரும் கருப்பங்குன்றினை ஒட்டியுள்ள தேவனூரும் ஒன்று என்று கூறலாம், மாமண்டூருக்கு அண்மையில் தேனூர் (தேவனூர்) என்னும் பெயருடைய சமண சமயத்தலம் இது ஒன்றுதான் என்பதையும் மனதிற் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறாயின் இங்குள்ள கற்படுக்கைகள் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை என வரையறை செய்யலாம். எவ்வாறாயினும் ஆரம்ப காலத்தில் இங்கு குகைப்பாழிகளில் கற்படுக்கைகள் மட்டும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

சிற்பங்கள்

இங்கு சமண சமயம் தொடர்ந்து நிலை பெற்றமையால் கருப்பங்குன்றில் சமண சமயச் சிற்பங்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. குகைக்குச் செல்லும் வழியிலுள்ள பாறையின் முகப்பில் ஆதிநாதர், மகாவீரர் ஆகியோர் சிற்பங்களும், இவற்றிற்குச் சற்று தொலைவில் தனியாக உள்ள பாறையில் மாடம் போன்ற அமைப்பினுள் பார்சுவநாதர் சிற்பமும் வடிக்கப்பட்டிருக்கின்றன. இச்சிற்பத்தை அடுத்துள்ள பகுதியில் கிரந்த வடிவம் கொண்ட சாசனமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆதி நாதர் சிற்பம் அமர்ந்த கோலத்தில் தியான ரூபியாகக் காட்சியளிக்கிறது. இதன் தலையின் பின் பகுதியில் அரைவட்ட வடிவ பிரபையும், அதற்கு மேலாக முக்குடையும் இடம் பெற்றுள்ளன. ஆதி நாதரின் அமைதியான முகச்சாயலும், தவத்தால் மூடிய கண்களும், நீண்டு வடிக்கப்பெற்ற காதுகளும், அகன்ற மார்பும், அசைவற்றதாகத் திகழும் உடலமைப்பும் சிறப்புறத் திகழ்கின்றன. இவரது தோள்களுக்கு இணையாக இரு மருங்கிலும் சாமரம் வீசுவோரின் சிற்பங்கள் சிறியனவாக வடிக்கப் பட்டிருக்கின்றன. மகாவீரர் சிற்பமும், ஆதிநாதர் சிற்பத்தினைப் போன்றே அமர்ந்த கோலத்தில் எழிலுறப் படைக்கப்பட்டுள்ளது.

தனியாக உள்ள சிறிய பாறை ஒன்றில் நீள் சதுர வடிவ மாடத்தில் (கோஷ்டம்) பார்சுவ நாதர் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. இவரது தலைக்கு மேலாக ஐந்துதலை நாகம் படம் விரித்த வண்ணம் உள்ளது. இவரது இருமருங்கிலும் தரணேந்திரன், பத்மாவதி யக்ஷி ஆகியோர் வழிபடும் நிலையில் திகழ்கின்றனர். இச்சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ள மாடத்தின் மேற்பகுதியில், கோயிலின் விமானத்தைப் போன்று, கிரீவம், சிகரம் ஆகிய அமைப்புகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பார்சுவநாதரைக் கொண்ட மாடத்தினை சிற்பக்கலைஞன் கோயிலின் வடிவாக அமைக்க முயன்றுள்ளமை நன்கு தெளிவாகிறது. மாமல்லையில் அருச்சுனன் தவக்காட்சியைக் குறிக்கும் சிற்பத் தொகுதியில் சிறிய கோயில் வடிவினுள் திருமால் நிற்பதைப் போன்று இங்கு பார்சுவநாதர் சிற்பம் கோயில் போன்ற அமைப்பினுள் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கருப்பங்குன்றிலுள்ள கலைச்செல்வங்கள் அனைத்தும் கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியினைக் கொண்டு விளங்குகின்றன. இவை தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்த பல்லவப் பேரரசர்கள் காலத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குறிப்பாக எந்த பல்லவ மன்னனது ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றித் தெரியவில்லை.

கல்வெட்டு

பார்சுவநாதர் சிற்பத்தை அடுத்து ஆறுவரிகளாலான, கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கிரந்த வடிவம் கொண்ட இச்சாசனம் பல்லவர் காலக்கல்வெட்டுக்களின் வரிவடிவத்தைப் போன்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சாசனம் கி பி. 8ம் நூற்றாண்டைச் சார்ந்ததென வரையறை செய்யப் பட்டுள்ளது.

ஸ்ரீ சதுர்விம்

சதி ஸ்தாவகவ

ஸுதேவ சித்தா

ந்த படாரர் செய்வித்த

தேவாரம் [1]

அதாவது பார்சுவநாதர் சிற்பமடங்கிய கோயில் (தேவாரம்) போன்ற அமைப்புடைய மாடத்தினைச் சதுர்விம்சதி ஸ்தாபகார் வசுதேவ சித்தாந்த பட்டாரகர் தோற்றுவித்தார் என்பதாகும். பார்சுவதேவர் சிற்பம் காணப்பெறும் மாடம் கோயிலின் விமானத்தை ஒத்துக்காணப்படுவதால் இது தேவாரம் (கோயில்) என்றே அழைக்கப்பெறுகிறது. கருப்பங்குன்று பாழியில் தவமேற்கொண்ட துறவி வசுதேவசித்தாந்த பட்டாரகராதல் வேண்டும். இவர் சதுர்விம்சதியைச் ஸ்தாபித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இருபத்து நான்கு தீர்த்தங்கரச் சிற்பங்களைக் கொண்ட தொகுதியினைச் ‘சதுர்விம்சதி’ என அழைப்பர். இவர் எங்கு இருபத்தினான்கு தீர்த்தங்கரர் திருவுருவங்களை நிறுவினார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை கருப்பங்குன்றில் காணப்படும் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதி நாதர் சிற்பத்தையும். கடைசி தீர்த்தங்கரராகிய மகா வீரரையும் நிறுவியதையே மொத்தமாக சதுர்விம்சதி ஸ்தாபகம் செய்ததாகக் குறிப்பிடுவதாகவும் இருக்கலாம்.

இதுவன்றி இருபத்தி நான்கு பேரைக் கொண்ட குழுவினையும் சதுர்விம்சதி என அழைப்பதுண்டு. வடஆர்க்காடு மாவட்டத்தில் விளாப்பாக்கம் என்னுமிடத்திலுள்ள பராந்தக சோழன் காலத்துச் (கி பி. 945) சாசனம் ஒன்று இத்தகைய குழுவினைக் குறிப்பிடுகிறது.[2] என வ வசுதேவசித்தாந்த பட்டாரகர் சமய - சமுதாயப் பணிகளைக் கண்காணித்து வந்த இத்தகைய குழுவினையும் நிறுவியவராக இருக்கலாம் ஆனால் இதனை உறுதி செய்யும் வகையில் சான்றுகள் எவையும் தற்போது கிடைக்கவில்லை.

கருப்பங்குன்றில் எஞ்சியுள்ள சமண சமயச் சான்றுகளை அடிய படையாகக் கொண்டு நோக்கினால், இங்கு கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் சமணம் வேரூன்றியிருக்க வேண்டும் எனவும் அப்போது இங்குள்ள பாழிகளில் சமணத் துறவியர் துறவற கொண்டு அருகன் அருள் நெறி பரப்பியிருக்க வேண்டுமெனவும் கூறலாம். தொடர்ந்து இத்தலம் சமண சமய முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தமையால் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் இங்கு ஆதி நாதர், மகாவீரர் சிற்பங்களும், பார்சுவநாதரைக் கொண்ட தேவாரமும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இங்கு சமண சமயம் செல்வாக்குடன் திகழ்ந்ததா என்பதனை நிலை நாட்டுவதற்குத் தற்போது சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை.


[1] R. Champakalakshmi, “An unnoticed Jaina cavern near Madurantakam” Journal of the Madras University, vol. xli, 1969, pp. 111-113.

[2] ARE, 53/1900