being created

வையவன்

From Tamil Wiki
Revision as of 22:43, 3 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வையவன் (எம்.எஸ்.பி. முருகேசன்; பிறப்பு: டிசம்பர் 24, 1939) தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களை, சிறுகதைகளை எழுதி வருகிறார். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர். பத்திரிகை ஆசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். தனது மகள் பெயரில் அமைந்த “தாரிணி பதிப்பகம்” மூலம் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியச் செயல்பாட்டுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

எம். எஸ்.பி. முருகேசன் என்னும் இயற்பெயர் கொண்ட வையவன், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24-1939-ல் பரமசிவம் -அமிர்த சிகாமணி இணையருக்குப் பிறந்தார். சூழல்களால் தந்தை கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தார். தன் மகன் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற வேண்டுமென விரும்பினார் வையவனின் தந்தை. அதனால் மகனை பள்ளியில் சேர்க்கும் முன் தனிப் பயிற்சியாக ஆங்கிலம் பயில அனுப்பினார். மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில்  ஆறாம் வகுப்பு வரை படித்தார் வையவன். பள்ளியில் தெலுங்கு மொழிப் பிரிவு இருந்ததால் தமிழும் தெலுங்கும் கற்றுக் கொண்டார். தனிப்பயிற்சி மூலம் ஆங்கிலத்திலும் தேர்ந்தார். பெற்றோர் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்ல, ஏதிலியர் இல்லத் தங்கும் விடுதியில் தங்கி உயர் கல்வி பயின்றார் வையவன். தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பை நிறைவு செய்தார். பின் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்று வசித்தார்.

தனி வாழ்க்கை

குடும்ப வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக் கடை உதவியாள், மலேரியா ஒழிப்புப் பணி சூபர்வைசர் என பல்வேறு பணிகளைச் செய்தார். பின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963-ல், சென்னையில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து பயின்று தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், தமிழாசிரியராகவும் 33 ஆண்டுகள் பணியாற்றினார். மனைவி சகுந்தலா. மகள் டாக்டர் தாரிணி. மகன் டாக்டர் ஜீவகன்.

இலக்கிய வாழ்க்கை

வையவனின் தந்தை இலக்கிய வாசகர். நல்ல பல நூல்களை அவர் மகனுக்கு அறிமுகப்படுத்தினார். ஆங்கில நூல்களை வாசிக்கும்படித் தூண்டினார். தாய் சிறந்த கதை சொல்லியாக இருந்தார். அவர்கள் மூலம் இலக்கிய வாசகரானார் வையவன். பள்ளி மாணவர்களுக்காக, தனது 13-ம் வயதில்  ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதினார்.

திருப்பத்தூரில் வசித்தபோது அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். ’இளங்கோ இலக்கிய மன்றம்’ என்பதன் செயலாளராகப் பணிபுரிந்தார். ’புதுமைப்பண்ணை' என்ற பெயரில் வாடகை நூல் நிலையம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். வையவனின் முதல் சிறுகதை 1956-ல் ’அமுதசுரபி’ இதழில் வெளியானது.  தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.  வையவனின் முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்.’ இந்நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என அதிகம் எழுதினார்.

”உயிரோட்டம்”, ”மணல்வெளி மான்கள்”, ”கன்னியராகி நிலவினிலாடி”, ”வைரமணிக் கதைகள்”, ”ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம்” போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். ”பாடிப்பறந்த குயில்”, ”நங்கூரம்”, ”செண்பக மரங்கள்”, ”தீபிகா” போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. “Loving Animals”, “Nation builder Nehru” போன்ற இவரது ஆங்கில நூல்களும் குறிப்பிடத்தகுந்தனவாகும். வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் ‘காமுகண்டே டைரி’ என்ற நாவலை ‘ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். சிறார்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விமரசனக் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்புகள்

வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் ‘காமுகண்டே டைரி’ என்ற நாவலை ‘ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கட்டுரை நூல் தமிழக அரசின்  சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது.

ஜெகசிற்பியனின் படைப்புலகம் பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் “ஜெகசிற்பியன் ஒரு பார்வை” நூலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு “வையவன் கதைகள்” என்ற தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியுள்ளன. இவரது பல படைப்புகள் இள முனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ‘சாகித்ய அகாதமி’ நிறுவனம் இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

தனது பள்ளிப்பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் 65 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என 1000-த்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார்.

பதிப்புப் பணிகள்

வையவன் பணி ஓய்வுக்குப் பின் தனது மகளின் பெயரில் தொடங்கிய ‘தாரிணி பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். வல்லமை மின்னிதழுடன் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றி பெற்ற சிறுகதைகளை ‘வல்லமைச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். ”English Titles” பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிடுகிறார்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஓவியர் செந்தமிழ்ச்செல்வன் உறுதுணையுடன் படக்கதையாக வெளியிட்டவர். ஆதிசங்கரரின் வாழ்க்கையையும் படக்கதையாகத் தந்துள்ளார். இவரது படைப்புகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகியுள்ளன.

குறும்படம்

இவரது கதைவசனத்தில் உருவான ”நம்ம ஊரு நல்ல ஊரு” குறும்படம் கிராமப்புற மேம்பாடு பற்றிச் சித்திரிக்கிறது.

சமூகச் செயல்பாடுகள்

இளம் வயதிலே சமூக சேவையில் ஆர்வம் உடையவராக இருந்தார் வையவன். திருப்பத்தூரில் வசித்தபோது திருப்பத்தூர், கோடியூர், ஜோலார்ப்பேட்டை போன்ற இடங்களில் பீடித்தொழிற்சங்கங்கள் அமைப்பதிலும், துப்புரவுத் தொழிலாளர் சங்கம் அமைப்பதிலும் ஈடுபட்டார் பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்‌ஷான் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் (Jan Sikshan Sansthan) ‘ஐக்கியா டிரஸ்ட்’ ( என்ற அமைப்பை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி வருகிறார். எழுத்தாளர் சி.ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஹார்ட் பீட் ட்ரஸ்ட் அறக்கட்டளை’ வளர்ச்சிக்கும் உதவி வருகிறார்.

‘அடையாறு தமிழ்ச் சங்கம்’ என்பதனைத் தோற்றுவித்து அதன் மூலம் இலக்கியப் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்

தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ (நாவல்)

பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - ‘ஜமுனா’ (நாவல்)

பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருது - ’ஆனந்தபவன்’ (நாடகம்)

தமிழக அரசின்  சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசு - ‘மகாபலியின் மக்கள்’ (கட்டுரை நூல்)

இலக்கிய சிந்தனை பரிசு - ‘ஆண்மை’ (சிறுகதை)

இலக்கிய சிந்தனை பரிசு - 'மாலை மயக்கம் (சிறுகதை)

அமுதசுரபி - ஸ்ரீராம் அறக்கட்டளை விருது ’மகாகவி' (கட்டுரை நூல்)

மால்கம் ஆதிசேஷையா விருது - அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.