விஜயா வேலாயுதம்

From Tamil Wiki
விஜயா வேலாயுதம்

விஜயா வேலாயுதம் ( ) கோயம்புத்தூரில் இருந்து செயல்படும் விஜயா பதிப்பகம் என்னும் வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர். இலக்கியப்புரவலர். நவீனத் தமிழிலக்கியத்தின் தேர்ந்த வாசகர்களில் ஒருவராக அறியப்படுபவர். தமிழிலக்கிய ஆளுமைகள் பலரின் தோழர்.

பிறப்பு, கல்வி

விஜயா வேலாயுதம் என அழைக்கப்படும் மு.வேலாயுதம் மதுரையை அடுத்த மேலூரில் ம.முத்தையா -சௌந்தர ஆச்சி இணையருக்கு 13 மார்ச் 1941 ல் பிறந்தார் ( பள்ளியில் சேர்க்கையில் 15- ஆகஸ்ட் 1940 என தேதி எழுதப்பட்டது. அது அக்கால வழக்கம்)

மேலூர் சுந்தரேஸ்வர வித்யாசாலா (எஸ்எஸ்வி பள்ளி)யில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

தனிவாழ்க்கை

விஜயா வேலாயுதம் 1954ல் கோவையில் ஒரு துணிக்கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் பல்பொருள் விற்பனைக் கடை ஒன்றை தானே தொடங்கி நடத்தினார். வேலாயுதத்தின் துணைவியார் பெரியநாயகி ஆச்சி. (27 அக்டோபர் 2021ல் மறைந்தார்) அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் மருத்துவர் அரவிந்தன். இரண்டாமவர் சிதம்பரம் விஜயா பதிப்பகத்தை நடத்தி வருகிறார். ஒரே மகள் விஜயா.

பதிப்புப்பணி

விஜயா வேலாயுதம் இளமையிலேயே தீவிரவாசகராக இருந்தார். பலசரக்குக் கடை நடத்தும்போதே நூல்களை விற்பனைசெய்து வந்தார். தீபம், கணையாழி போன்ற இலக்கியச் சிற்றிதழ்களின் முகவராக இருந்தார். நா.பாரத்தசாரதியின் தேவதைகளும் சில சொற்களும் என்னும் நூலை 1975ல் நவபாரதி பதிப்பகம் என்னும் பெயரில் தானே வெளியிட்டார். பார்த்தசாரதியின் கவிதைகளை மணிவண்ணன் கவிதைகள் என்னும் பெயரில் வெளியிட்டார்.

வேலாயுதம் தன் மகளுக்கு சுப்ரமணிய பாரதியின் மேல் கொண்ட பற்றினால் விஜயா என பெயரிட்டார். (விஜயா பாரதி நடத்திய இதழ்) அப்பெயரிலேயே 17 அக்டோபர் 1977 ல் கோவையில் விஜயா பதிப்பகம் மற்றும் நூல் விற்பனை நிலையத்தை தொடங்கினார். விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட முதல் நூல் மு.மேத்தா எழுதிய கண்ணீர்ப்பூக்கள்.

உசாத்துணை

விஜயா வேலாயுதம் முத்துவிழா மலர் வெளியீடு

வாசிப்பை நேசிக்கும் மு.வேலாயுதம்!-ஹிந்து