being created

இந்து ஒருவருக்கு ஒரு கடிதம்

From Tamil Wiki
Revision as of 16:52, 18 October 2022 by Vikram (talk | contribs) (Added image)
A Letter to a Hindu - Leo Tolstoy.jpg

இந்து ஒருவருக்கு ஒரு கடிதம் (A Letter to a Hindu) - ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் 1908 டிசம்பர் 14-ல் தாரக்நாத் தாஸ் என்ற இந்தியருக்கு எழுதிய கடிதம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலைக்கு ஆதரவு கோரி தாரக்நாத் தாஸ் என்ற வங்காளி ஒருவர் லியோ டால்ஸ்டாய்க்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.  அவற்றுக்கு பதிலாக டால்ஸ்டாய் எழுதியது இக்கடிதம். இக்கடிதம் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'பிரீ இந்துஸ்தான்' என்ற இந்திய செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. 1909-ல் தென் ஆப்ரிக்காவில் இருந்த மகாத்மா காந்தி லியோ டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதி அவரது அனுமதியுடன் இக்கடிதத்தை தன்னுடைய 'இண்டியன் ஒப்பீனியன்' செய்தித்தாளில் மறுபிரசுரம் செய்தார்.  பின்னர் இக்கடிதத்தை தானே ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார். இக்கடிதம் ஆங்கிலத்தில் காந்தியின் முன்னுரையுடன் 'இந்து ஒருவருக்கு ஒரு கடிதம்' என்ற நூலாக பின்னர் வெளியிடப்பட்டது. இதில் டால்ஸ்டாய், தாரக்நாத் தாஸின் கடிதத்திலிருந்தும் 'பிரீ இந்துஸ்தானின்' கட்டுரைகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சுவாரஸ்யமான எழுத்துக்களில் இருந்தும் தம் காலத்தின் அனைத்து நாடுகளின் நோய்க்கூறுகளுக்கும் வாழ்வின் உண்மையான பொருளை விளக்குவதன் மூலம் நன்னடத்தைக்கு வழிகாட்டக் கூடிய மற்றும் போலி சமய, போலி அறிவியலின் அறமற்ற முடிவுகளை மாற்றி அமைக்கக் கூடிய சமயக் கல்வி போதிய அளவில் இல்லாததே காரணம் என்று தமக்குத் தோன்றுவதாக குறிப்பிடுகிறார். மேலும் தாரக்நாத் தாஸின் கடிதமும் 'பிரீ இந்துஸ்தானின்' கட்டுரைகளும் அத்துடன் இந்திய அரசியலும் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற தலைவர்கள் சமயங்கள் வலியுறுத்தும் அறவுணர்வு மற்றும் போதனைகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதில்லை என்றும், அத்துடன் தம் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க ஆங்கில மற்றும் போலி கிறிஸ்தவ நாடுகள் கடைப்பிடிக்கும் சமய உணர்வற்ற அறவுணர்வற்ற அதே நடைமுறைகளைக் கைக்கொள்வதைத் வேறு சாத்தியத்தை அவர்கள் காண்பதில்லை என்றும் தமக்குக் காட்டுவதாக குறிப்பிடுகிறார்.

இந்திய மக்கள் தங்கள் சமய (அவற்றின் மெய்மை, அறவுணர்வு) விழிப்பற்று இருப்பதே அதன் அடிமைத்தளைக்கு காரணம் என்றும் வன்முறையின் மூலமாக அல்லாமல் அன்பின் வழியில் மட்டுமே இந்தியா விடுதலை பெற முடியும் என்று வலியுறுத்துகிறார்.  உலகின் அனைத்து சமயங்களும் அன்பை  வலியுறுத்துவதையும் அவற்றின் அடிப்படை ஒருமையையும் சுட்டுகிறார்.

இக்கடிதத்தில் டால்ஸ்டாய் சுவாமி விவேகானந்தரின் நூல், வேதங்கள், பைபிள், பகவத் கீதை, திருக்குறள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டுகிறார்.

காந்தியின் மீதான தாக்கம்

டால்ஸ்டாயை தன் ஆசிரியராக கருதிய காந்தியின் அறம் சார்ந்த, மானுட நோக்குடைய, வெறுப்பு அரசியலற்ற அறப்போராட்ட முறைகளில் இக்கடிதமும் டால்ஸ்டாய் 1894-ல் எழுதிய "கடவுளின் அரசு உன்னுள் இருக்கிறது" (The Kingdom of God Is Within You) என்ற நூலும் தாக்கம் செலுத்தின.

திருக்குறள்

டால்ஸ்டாய் இக்கடிதத்தில் 'இந்து குறள்' என்று திருக்குறளைக் குறிப்பிடுகிறார்.  இக்கடிதம் காந்திக்கு திருக்குறளை அறிமுகம் செய்தது.  திருக்குறளில் ஆர்வம் கொண்ட காந்தி பின்னர் தான் சிறையில் இருந்த நாட்களில் திருக்குறள் பயின்றார்.  சமண சமய பின்னணி கொண்டவரான மகாத்மா காந்தியை டால்ஸ்டாயின் திருக்குறள் மேற்கோள்கள் ஈர்த்தன. இன்னா செய்யாமை அதிகாரத்தின் கீழ்க்காணும் ஆறு குறட்பாக்களை தன் கடிதத்தில் டால்ஸ்டாய் குறிப்பிட்டிருந்தார்.

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போற் போற்றாக் கடை.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.

நூல்

டால்ஸ்டாயின் இக்கடிதம் ஆங்கிலத்தில் காந்தியின் முன்னுரையுடன் 'இந்து ஒருவருக்கு ஒரு கடிதம்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் தமிழிலும் பிற இந்திய மொழிகளும் மொழிபெயர்ப்பட்டு வெளியிடப்பட்டது.

உசாத்துணை

https://www.gutenberg.org/files/7176/7176-h/7176-h.htm

https://englisharchives.mathrubhumi.com/features/social-issues/vivekananda-the-man-who-impressed-tolstoy-kumaranasan-1.237648

https://en.wikipedia.org/wiki/A_Letter_to_a_Hindu



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.