first review completed

அப்துல் மஜீது புலவர்

From Tamil Wiki
Revision as of 15:19, 6 February 2022 by Logamadevi (talk | contribs)

அப்துல் மஜீதுப் புலவர் இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர். இலங்கையில் வாழ்ந்தவர். இசைப்பாடல்களையும் இஸ்லாமிய நெறிநூல்களையும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

அப்துல் மஜீது புலவர் வள்ளல் சீதக்காதி வழிவந்தவர் என்று கூறப்படுகிறது. கீழக்கரையில் பிறந்தார். வணிகம் செய்ய இலங்கை சென்றார். அங்கு இப்ராஹீம் நெய்னார்ப் புலவர் என்பவரிடம் அரபும் தமிழிலக்கணமும் கற்றார்

இலக்கியவாழ்க்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பாடப்பட்ட 50 இசைப்பாடல்களை சங்கீர்த்தன மஞ்சரி என்றபெயரில் வெளியிட்டார். இலங்கை வள்ளல் முஹம்மது தம்பி மரைக்காயரின் விருப்பத்திற்கேற்ப ‘ஆசாரக்கோவை' என்ற நூலையும் இயற்றினார். இந்நூல் நூறு கட்டளைப் பாக்களால் ஆனது. அப்பாடல் களின் ஒவ்வொரு ஈற்றடியிலும் ’முஹம்மதுத் தம்பி மரைக்காய சகாயனே’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 1902ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இறப்பு

இவர் தமது 84ஆம் வயதில் இலங்கையில் உள்ள தேனி என்னும் ஊரில் காலமானார்.

தொன்மம்

பக்கீர் இப்ராஹீம் புலவர் என்பவர்  இவர்மேல் பொறாமைகொண்டு இவரை குறுக்குக்கேள்விகளால் துன்புறுத்த இவர் அவரை குருட்டுத்தனமாகக் கேட்கிறீர்கள் என்றார். கவிச்சொல் பலித்து பக்கீர் இப்ராஹீம் புலவர் குருடரானார்

பதிப்பு

ஆசாரக்கோவையையும், சங்கீர்த்தன மஞ்சரியையும் ஒருங்குசேர்த்து அப்துல் மஜீதுப்புலவரின் மருமகன் ஹாஜி கா.மு. முஹம்மது முத்தலிபு 1972 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

இஸ்லாமிய இலக்கியத்தில் தமிழ் மரபு என்பது மார்க்க அறிஞர் சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பின்னர் வலுவடைந்தது. அந்த மரபில் வந்த கவிஞர் அப்துல் மஜீது புலவர். தமிழ்மரபு சார்ந்த செய்யுள்களும் இசைப்பாடல்களும் இவருடைய கொடை

இவருடைய நடைக்குச் சான்று

முன்செல் ஆகமம் கற்றுணர்ந் தோர்களும்

            முதலினைத் தர்மம் கொடுத் தோர்களும்

மன்சொல் நீதி செலுத்திய பேர்களும்

           மதிக்கும் சற்குண மக்களுள் ளோர்களும்

இன்சொல் நூற்கள் இயற்றிவைத் தோர்களும்

           இறந்தும் தாம்இற வாதவர் தாமரோ

தன்சொல் நித்தியம் பேணும் முகம்மதுத்

          தம்பி  மாமரைக் காய சகாயனே (ஆசாரக்கோவை)

உசாத்துணை

  • இஸ்லாமியக் கலைக்களஞ்சியம். அப்துற் றஹீம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.