சுப்பு ஆறுமுகம்

From Tamil Wiki
Revision as of 14:02, 11 October 2022 by Ramya (talk | contribs)

சுப்பு ஆறுமுகம் (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர். தேசபக்தி, புராணங்கள், விழிப்புணர்வு சார்ந்த வில்லிசைப்பாடல்கள் அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி, சத்திரபுதுக்குளத்தில் ஆ. சுப்பையாபிள்ளை, சுப்பம்மாள் இணையருக்கு ஜுன் 28, 1928-ல் கடைசி மகனாகப் பிறந்தார். அப்பா சுப்பையாபிள்ளை இசைக்கலைஞர், பொம்மை தொழில் செய்தவர், ஆசுகவி. சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படித்தார். மதுரை தமிழ்ச்சங்கம்’ அமைப்பில் மூன்று ஆண்டுகள் தமிழ்மொழி படித்தார். இராமஅய்யர், நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சுப்பு ஆறுகுமத்தின் தமிழ் ஆசிரியர்கள். தந்தையிடமிருந்து இசை பயின்றார்.

தனி வாழ்க்கை

சுப்பு ஆறுமுகத்தின் மனைவி மகாலட்சுமி. மகள்கள் சுப்புலட்சுமி, பாரதி, மகன் காந்தி. காந்தியும், பாரதியும் வில்லிசைக் கலைஞர்கள்.

கலை வாழ்க்கை

சுப்பையா பிள்ளை, நவநீத கிருஷ்ணன் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டை முறையாகப் பயின்றார். சென்னைக்கு அழைத்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் சுப்பு ஆறுமுகத்தை தனது வீட்டில் தங்க வைத்தார். கலைவாணர் கம்பெனியில் வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத வைத்தார். உடுமலை நாராயண கவியார், கே.பி.காமாட்சி என இணைந்து நாங்கள் மூவரும் அவருக்கு எழுத்துப்பணி புரிந்தோம். 17 வயதில் என்.எஸ்.கே ஐயா பாடும் பாடலை எழுதும் பாக்கியம் பெற்றேன்.

காந்திமகான் கதையை, என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் சுப்பு ஆறுமுகத்தைக் கொண்டு எழுதச் சொல்லி பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். 1948-ம் ஆண்டு ‘காந்தி மகான்’ என்ற கதையை எழுதினார். அந்தக் கதையை வில்லுப்பாட்டாகவும் நடத்தினார்.

1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி "கருணைக்கடல் காஞ்சி காமாட்சி" என்ற தலைப்பில் அரங்கேறியது. காஞ்சிப் பெரியவர் நல்லாசியுடன் ஆலயங்களில் தெய்வீகம் மற்றும் பற்பல தமிழ்ச்சங்களில் என் வில்லுப்பாட்டு வியாபிக்க ஆரம்பித்தது. "காந்தி வந்தார்" என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். 1975 முதல் தூர்தர்ஷன் என . காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி அரங்கேற்றினார். கலைவாணர்ன் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

ராமாயணம், மகாபாரதம், அரசியல்-சமூக பிரச்சனைகளையும் வில்லுப்பாட்டில் பாடினார். மெல்லிய பகடியுடன் கூடிய இசை இவருடைய வில்லிசைப்பாடல்களில் இருந்தன. திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத தமிழை ஒலிக்கச் செய்தார். சுப்பு ஆறுமுகம் தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தியாகபிரம்மத்தின் 145வது ஆண்டு நிகழ்ச்சி முதல் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற தலைப்பில் சுமார் இரண்டு மணிநேர வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து 7 வருடங்களுக்கு நடத்திய பாக்கியம் பெற்றேன். ‘நாதத்தில் பேதமில்லை’ என்ற தலைப்பிலும் அம்மகோற்சவத்தில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினேன்.இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்தார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்தனர். இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் ஒலிநாடாக்களாகவும், குறுந்தகடுகளாகவும் வெளிவந்தன.

இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரை வாழ்க்கை

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதினார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

சுப்பு ஆறுமுகம் தன் பதினாறு வயதில் பாரதியார் மீது கொண்ட பற்று காரணமாக அவரின் கண்ணன் பாட்டு சாயலில் "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. வில்லுப்பாட்டை மையமாகக் கொண்டு பதினைந்து நூல்களை எழுதினார். 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்ற நாடகம் இவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிட்டது. மனிதர்கள் ஜாக்கிரதை நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்ற வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு இருந்தது. 85 வயதோடு, வில்லுப்பாட்டு மேடைக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, எழுத்துப் பணியைத் தொடங்கினேன். நான் எழுதி முடித்துள்ள ‘திருக்குறள் அனுபவ உரை’ என்ற நூலை சிவாலயம் மோகன் பதிப்பிட்டுள்ளார்.

பதிப்பகம்

சுப்பு ஆறுமுகம் மகம் பதிப்பகத்தை ஆரம்பித்தார். ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற நூலையும், ‘வில்லிசையில் சமுதாயப் பாடல்கள்’ என்ற நூலையும் வெளியிட்டேன்.

விருதுகள்

  • 1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருது
  • 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது
  • 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது
  • தமிழக அரசால் "கலைமாமணி"
  • இந்து தமிழ் திசை நாளிதழின் ‘தமிழ் திரு விருது’

மறைவு

சென்னை கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் தனது மகளுடன் வசித்து வந்த சுப்பு ஆறுமுகம் தனது 94வது வயதில் அக்டோபர் 10, 2022-ல் சென்னையில் வயது முதிர்வு காரணமாக காலமானார். நெசப்பாக்கம் மின் மயானத்தில் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இவரைப்பற்றிய நூல்

  • மனைவி மகாலட்சுமி சுப்பு ஆறுமுகத்தின் வாழ்க்கையைப் பற்றி ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • வில்லிசை மகாபாரதம்
  • வில்லிசை இராமாயணம்
  • நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • நூலக வில்லிசை

உசாத்துணை