சுப்பு ஆறுமுகம்

From Tamil Wiki
Revision as of 10:08, 11 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "சுப்பு ஆறுமுகம் (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர். ==...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுப்பு ஆறுமுகம் (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி, சத்திரபுதுக்குளத்தில் சுப்பையாபிள்ளை, சுப்பம்மாள் இணையருக்கு 1928-ல் மகனாகப் பிறந்தார். இராம அய்யரிடம் ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றார். நவநீதகிருஷ்ணபிள்ளையிடம் உயர்பள்ளியில் தமிழ் கற்றார். தந்தையிடமிருந்து இசை பயின்றார்.

இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.

கலை வாழ்க்கை

சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஆவார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்தனர்.

திரை வாழ்க்கை

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதினார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்று ஒரு நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பெற்று பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு.

விருதுகள்

  • 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது
  • 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது

மறைவு

சுப்பு ஆறுமுகம் தனது 94வது வயதில் அக்டோபர் 10, 2022-ல் சென்னையில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • வில்லிசை மகாபாரதம்
  • வில்லிசை இராமாயணம்
  • நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்

உசாத்துணை