ராஜேந்திரகுமார்
ராஜேந்திரகுமார் (ஜனவரி 02, 1939 - ) ஓவியர், எழுத்தாளர், இதழாளர், நாடக நூலாசிரியர். விளம்பரத்துறையில் பணியாற்றினார். முழு நேர எழுத்தாளராக இயங்கினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேந்திரகுமார், ஜனவரி 02, 1939 அன்று, கோயம்புத்தூரில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்றார். சென்னையில் உள்ள ஜெ. வால்டர் தாம்ப்ஸன் கம்பெனியில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். ஆங்கிலம், ஹிந்தி கற்றவர்.
ராஜேந்திரகுமார் மணம் செய்துகொள்ளவில்லை. வளர்ப்பு மகன்: இதழாளர், எழுத்தாளர் நாகராஜகுமார்.
இலக்கிய வாழ்க்கை
ராஜேந்திரகுமார், கல்கி, சுஜாதா எழுத்துக்களின் ரசிகர். 1963-ல் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை 'ஓய்வு'. தொடர்ந்து பதின்ம வயதினரின் உலகைப் பேசும் 'வால்கள்' சிறுகதை குமுதத்தில் வெளியாகிப் பரவலான அறிமுகம் பெற்றது. முதல் நாவல், 'வணக்கத்துக்குரிய காதலியே' மாலைமதியில் வெளியானது தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார். குமுதம், கல்கி, பாக்கெட் நாவல், திகில் நாவல், த்ரில் நாவல், மாலைமதி, ராணிமுத்து, நவரத்னம் உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதை, தொடர்கள், நாவல்களை எழுதினார். 'ஙே' என்ற எழுத்தைப் பயன்படுத்திப் பிரபலமானார். தனது மர்ம நாவல்களில் 'ராஜா-ஜென்னி' என்ற பாத்திரங்களைப் பயன்படுத்திப் புகழ்பெற்றார்.
மர்மக் கதைகளையும், ஆவி, பேய், பிசாசு, மாந்த்ரீகம் போன்றவற்றைப் பின்னணியாகக் கொண்ட கதைகளையும் அதிகம் எழுதினார். பொது வாசிப்புக்குரிய சமூக நாவல்களை எழுதினார்.
இதழியல்
ராஜேந்திரகுமார் 'ராஜா-ராணி' என்ற இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
நாடகம்
ராஜேந்திரகுமார், நாடகங்கள் சிலவற்றை எழுதினார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ராஜேந்திரகுமாரின் நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகின.
திரைப்படம்
ராஜேந்திரகுமாரின் வணக்கத்துக்குரிய காதலியே, மூடுபனி, கண்ணாமூச்சி, கௌரி ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகின.
மறைவு
ராஜேந்திரகுமார் எப்போது காலமானார் என்ற விவரங்களை அறிய இயலவில்லை.
மதிப்பீடு
ராஜேந்திரகுமார், குடும்பம், சமூகம், நகைச்சுவை, காதல், குற்றம், மர்மம், மாந்த்ரீகம் எனப் பல வகைமைகளில் பொது வாசிப்புக்குரிய நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். உரையாடல் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் பாணியைக் கையாண்டார். மர்மக் கதைகளை அதிகம் எழுதிய எழுத்தாளராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- வணக்கத்துக்குரிய காதலியே
- நீ, நீயா?
- வால்கள்
- மொட்டும் மலரும்
- அவள் தம்பி அங்கதன்
- நிஜங்கள்
- ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை
- மின்னல் இடி பூகம்பம்
- உறவு சொல்ல ஒருத்தி
- ஒரு காதல் புயல் வருகிறது
- காதல் XYZ
- ஒரு சின்னத் தவறு
- துரத்து துரத்து
- பருவம் பக்கத்தில்
- அந்தரங்கம் அலறுகிறது
- பாசமெல்லாம் உங்க மேலே
- அவளும் பெண் தானே
- தங்க விழித் தாரா
- அதற்கு இதுவல்ல வயது
- கன்னி இளமை கனவு
- எப்படியடி காதலிப்பது?
- கொலை தூரப் பயணம்
- பரிசாக ஓர் இரவு
- மறுபடியும் மரணம்
- அவன், அவள், தீவு
- அழகு, வயது, ஆபத்து...!
- இரவல் உறவுகள்
- இரவு வசந்தம்
- இறந்தவன் பேசுகிறேன்
- இன்னமும் பிரம்மசாரி
- ஈரமான ரோஜாவே!
- உலாவரும் தேவதை
- உனக்கே தெரியும் சுகந்தி!
- ஊமைக்கரு
- என்னோடு ஒரே இரவு
- ஒரு சின்னத்தவறு
- ஒரு நள்ளிரவின் மறுபக்கம்
- ஓடி வா, இனியா...
- கண்ணாமூச்சி
- கதவுக்கு இருபுறமும் சொர்க்கம்
- கொலைதூர பயணம்...
- கொல்வதெல்லாம் நன்மை
- கொல்லாதே யாரும் பார்த்தால்!
- கௌரி
- சம்மந்தி
- பகலில் இங்கே! இரவில் எங்கே?
- பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரி
- ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்
- பெண் பேய் போலீஸ்
- மறுபடியும் மரணம்...!
- மூடுபனி
- தனிமரத் தோப்பு
- தீ... தீ... சிநேகிதி
- தனிமரத்தோப்பு
- தீர்க்கா சுமங்கலி
- தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள்
- நம்புவதற்கல்ல
- நரகத்திற்குப் புதியவன்
- நான் ஒரு ஏ
- நித்தம் ஒரு நட்சத்திரம்
- நியாயம் (சில சமயம்) கொல்லும்
- நில், கவனி, காத்திரு
- நீயா என் காதலி?
- வாழ்க! மேலும் வளமுடன்!
- வேடிக்கை மனிதர்கள்
- 37-வது எலும்புக்கூடு
- ஸ்ட்ரா ஒரு எக்ஸ்ட்ரா
- ஜூலி கொடுத்த விலை
- அந்தப்புரத்தில் ஒரு நந்தலாலா
- ரயிலில் வந்த மயில்
- கோணல் நிழலைத் துரத்தி..,
- எது வரை சொர்க்கம்
- பைரவன் அழைக்கிறேன்
உசாத்துணை
- ராஜேந்திரகுமார் நூல்கள், அமேசான் தளம்
- ராஜேந்திரகுமார் நூல்கள், புஸ்தகா தளம்
- ராஜேந்திரகுமார் நூல்கள், குட்ரீட்ஸ் தளம்
- ராஜேந்திரகுமார் நாவல்கள் ஒலி வடிவம், யூ ட்யூப் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2026, 21:34:13 IST