under review

நாக. சண்முகம்

From Tamil Wiki
Revision as of 03:44, 30 June 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாக. சண்முகம் (புலவர் நாக. சண்முகம்) (பிறப்பு: நவம்பர் 28, 1930) எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், திரைப்பட உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர். விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

நாக. சண்முகம், நவம்பர் 28, 1930 அன்று, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுப்பட்டியில், நாகப்பச் செட்டியார் - தேனம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். வேகுப்பட்டியிலும், பொன்னமராவதியிலும் பள்ளிக் கல்வி கற்றார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். அக்கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெளியீட்டுத் துறையில் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நாக. சண்முகம், வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் தேர்ந்தவராக அறியப்பட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய கட்டுரை நூல்களையும், நாடக நூல்களையும் எழுதினார். 'மனக்கோயில்', 'வாழை மரம்' என்பவை நாவல்கள். 'பழனிமலைக் காவடி' என்பது நகரத்தார் வாழ்வியல் மற்றும் மரபைக் கூறும் நாவல். நாக. சண்முகம் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இதழியல்

நாக. சண்முகம், 1969 ஏப்ரலில், தம் நண்பர், வழக்கறிஞர் எஸ்.பி.எல். பழநியப்பாவுடன் இணைந்து 'நகரத்தார்' எனும் மாத இதழைத் தொடங்கினார். பத்தாண்டுகளுக்கு மேல் நகரத்தார் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

பதிப்பு

நாக. சண்முகம், 'தமிழ்நாடு பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் பல்வேறு மலர்களையும் நூல்களையும் பதிப்பித்துப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

நாடகம்

நாக. சண்முகம், ஆர்.எஸ். மனோகர் நடித்து அரங்கேற்றிய 'அங்கயற்கண்ணி' நாடகத்திற்குக் கதை, உரையாடல், பாடல்கள் எழுதினார். 'அன்புக்கயிறு' உள்ளிட்ட மேலும் பல நாடகங்களை எழுதினார். சிலவற்றில் நடித்தார்.

திரைப்படம்

நாக. சண்முகம், 'பாஞ்சாலி' 'ஆயிரங்காலத்துப் பயிரு' என்ற இரு திரைப்படங்களுக்கு உரையாடல் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மதிப்பீடு

நாக. சண்முகம், பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர். இதழாளர். நாடக ஆசிரியர், நடிகர். எழுத்து, திரைப்படம், இதழியல் போன்ற பல களங்களிலும் செயல்பட்ட நகரத்தார்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • அருள்மிகு சந்தோஷிமாதா ஆயிரத்தெட்டுப் போற்றி மலர்கள்
சிறார் நூல்கள்
  • ஔவையாரின் அறநெறிக் கதைகள்
  • நன்னெறி புகட்டும் நகைச்சுவைக் கதைகள்
  • 15 தலைவர்கள் 15 கதைகள்
  • வண்ண மயில்
  • தந்திர முயல்
  • புத்திமான் பலவான் ஆவான்
  • தங்கவிளக்கு
  • அதிசயக் குகை
  • நாடாண்ட நங்கையர் (வலம்புரி அண்ணாமலை உடன் இணைந்து எழுதியது)
நாவல்
  • மனக்கோயில்
  • வாழை மரம்
  • பழனிமலைக் காவடி
வாழ்க்கை வரலாறு
  • சீரடி சாயிபாபா சீர்மிகு வரலாறு
  • நளன் கதை
  • ஒட்டக்கூத்தர் கதை
  • புகழேந்திப் புலவர்
  • மகாத்மா காந்தி
  • பாலகங்காதர திலகர்
  • வல்லபாய் படேல்
  • காமராஜ் வாழ்க்கை வரலாறு
  • அறிஞர் அண்ணாத்துரை
கட்டுரை நூல்கள்
  • சீரடி சாயி பாபா அற்புதங்கள்
  • ஐயப்பனின் அற்புதங்கள்
  • கொன்னையூர் அரசி
  • தெய்வமே துணை
  • திருக்குறள் (மூலமும் உரையும்)
நாடகம்
  • அங்கயற்கண்ணி
  • அன்புக்கயிறு
பதிப்பாசிரியர்
  • விஷங்களை நீக்கும் வீரிய மருந்துகள்
  • கர்ப்பிணிகளுக்கு கைகண்ட மருந்துகள்
  • பல்நோய் மருந்துகள்
  • தலைவலி, வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள்
  • சர்ம ரோக நிவாரண மருந்துகள்
  • தேனின் மருத்துவ குணங்கள்
  • மாமிச உணவின் மருத்துவ குணங்கள்
  • மூலரோக நிவாரண மருந்துகள்
  • வெள்ளைப்பூண்டு வைத்தியம்
  • எலுமிச்சை வைத்தியம்
  • சண்முக கவசம் விளக்கவுரை

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2026, 16:48:53 IST