கொட்டாரத்தில் சங்குண்ணி

கொட்டாரத்தில் சங்குண்ணி மேனன் (வாசுதேவன் உண்ணி) (மார்ச் 23, 1855 - ஜூலை 22, 1937) மலையாள எழுத்தாளர், ஆய்வாளர். மலையாள புராணக் கதைகளை எட்டு தொகுதிகளாக ஐதீகமாலை என்னும் நூலாகத் தொகுத்தவர். உரைநடை, கவிதை, கதகளி பாடல், ஓட்டந்துள்ளல் ஆகிய வடிவங்களில் எழுதியவர். பாஷாப்போஷினியின் நிறுவர்களுள் ஒருவர். கேரள பாரத விலாச சபாவின் உறுப்பினர்.
பிறப்பு, கல்வி

கொட்டாரத்தில் சங்குண்ணி மார்ச் 23, 1855 அன்று வாசுதேவன் உண்ணி, நங்கய்யா இணையருக்குப் கோட்டயம்[1] அருகேயுள்ள கொடிமத்தை கிராமத்தில் பிறந்தார். வாசுதேவன் உண்ணி எனப் பெயரிட்டப்பட்டார். தாங்கு, சங்கு, சங்குண்ணி எனக் குழந்தைப் பருவத்தில் அழைக்கப்பட்டார். சங்குண்ணி தியாட்டுண்ணி என்னும் பத்ரகாளியாட்டம் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்தார்.
கொட்டாரத்தில் சங்குண்ணி முறையான கல்வி கற்கவில்லை, தன் பத்து வயது வரை வீட்டிலிருந்து கல்வி கற்றார். பதினேழாவது வயதில் மன்னார்காட்டு சங்கு வாரியரிடம் சமஸ்கிருதம் கற்றார். சகஸ்ரயோகம், குணபதம், சிகித்சாகிரமம்[2], அஷ்டாங்க ஹிருதயம் முதலிய ஆயுர்வேத நூல்களை ஆரியன் நாராயண் முஸ்ஸத்திடம் கற்றார். சங்கு வாரியரின் குருகுலத்தில் கவிதை ஆசிரியராகப் பணியாற்றினார். பொ.யு. 1881-ல் குடும்ப பணிகளுக்காக குருகுலத்தை விட்டு வீட்டிற்கு திரும்பினார். பின் பொ.யு. 1893-ல் கோட்டயம் எம்.டி. செமினரி உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனி வாழ்க்கை
பொ.யு. 1881-ல் கொட்டாரத்தில் சங்குண்ணி மேனனின் தாய் நங்கய்யா இறந்த போது அவர் முதல் திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி ஓராண்டில் மரணமடைந்தார். பொ.யு. 1887-ல் பனவேலிவீட்டில் ஶ்ரீதேவி அம்மாளை திருமணம் செய்துக் கொண்டார். பனவேலி லட்சுமி அம்மாள், பெங்காலி தேவகி அம்மாள் என மேலும் இருவரை திருமணம் செய்துக் கொண்டார். சங்குண்ணிக்கு குழந்தை பிறக்காததால் பொ.யு. 1914-ல் வாசுதேவன் உண்ணியை (எவூர் பனவில் கிருஷ்ண சர்மாவின் இரண்டாவது மகன்) தத்தெடுத்துக் கொண்டார். பிப்ரவரி 23, 1973-ல் சங்குண்ணியின் மூன்றாவது மனைவியும், டிசம்பர் 3, 1973-ல் மகன் வாசுதேவனும் மரணமடைந்தனர். வாசுதேவன் உண்ணியின் ஒரே மகன் நாராயணன் உண்ணி பின்னாளில் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
சங்குண்ணி மேனன் அறுபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உரைநடை, கவிதை, புராணக் கதைகளைத் தொகுத்த ஆய்வு நூல் என மலையாள, மணிபிரவாள மொழிகளில் எழுதியுள்ளார். ஐதீகமாலை அவரது முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. கதகளி, துள்ளல், கிளிப்பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற பிற இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
சங்குண்ணி தன் முப்பத்தி ஆறாம் வயதில் தம்புரானின் தூண்டுதலுக்கு இணங்க (1891-ல்) சுபதாரணம் மணிபிரவாளம் நூலை எழுதினார். கேசவதச சரிதம் நூலை தம்புரான் தூண்டுதலில் எழுதினார். மலையாள முன்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த போது கொடுங்கல்லூர் குஞ்சுட்டன் தம்புரான், கவிஞர் கேரள வர்மா வலியகோய் தம்புரான் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. அந்நாளில் மலையாள மனோரமா, பாஷாபோஷினி[3] போன்ற இலக்கிய நிறுவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. சங்குண்ணி ஐதீகமாலை நூலை முதலில் பாஷாபோஷினியிலும், மனோரமாவிலும் தொடராக எழுதத் திட்டமிட்டார். பின் அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதி தொகுத்த நூலாக ஐதீகமாலை அமைந்தது.
சங்குண்ணி அத்யாத்ம ராமாயணம் நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம், குசேலகோபால நாடகம் போன்ற கதகளி நூல்கள் எழுதினார்.
ஐதீகமாலை
பொ.யு. 1909-ல் சங்குண்ணி கேரளத்தின் புராண/நாட்டார் கதைகளைத் தொகுக்கத் தொடங்கினார். இருபத்தைந்து ஆண்டுகள் இப்பணியை செய்தார். அவை எட்டு தொகுதிகளாக 127 கதைகள் கொண்ட ஐதீகமாலை என்னும் நூலாக வெளிவந்தது. அவை முதலில் பாஷாபோஷினி இதழில் நூலாக வெளிவந்தது. குயிலோன் ரெட்டியார் பிரஸ் இந்நூலை முதலில் வெளியிட்டது. கொட்டாராத்தில் சங்குண்ணி நினைவு குழுவின் சார்பாக 1974, 1991 ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. பின் டி.சி. புக்ஸ் வெளியீடாக வந்தது. இந்நூல் ஆங்கிலத்தில் ஶ்ரீகுமாரி ராமசந்திரன் என்பவரின் மொழிபெயர்ப்பில் 2010-ல் வெளிவந்தது.
பார்க்க: ஐதீகமாலை
மதிப்பீடு
[உள்ள சங்ண்ணி நினைவு நூலகம்] கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதீகமாலை நூல் கேரள மொழியின் முக்கியமான தொகுப்பு நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. நூல் வெளியாகி நூறாண்டுகள் கடந்த பின்பும் இன்று பரவலாக வாசிப்புக்குரிய நூலாகவும், திரைப்படங்கள் எடுப்பதற்கான மூலநூலாகவும் கருதப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரமயுகம் திரைப்படம் இந்நூலின் ஒரு மூலக்கதையிலிருந்து கதையாக்கப்பட்டது. சங்குண்ணி மேனன் மலையாளத்தின் கதகளி நூல்கள், மணிபிரவாள நூல்கள் பல எழுதியவர். அவரது அத்யாத்ம ராமாயணம் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு முக்கியமானது. இந்நூல் பின்னாளில் துஞ்சத்து எழுத்தச்சன் எழுதிய அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூல் எழுத மூலநூலாக அமைந்தது.
பார்க்க: தொன்மங்கள்
நினைவகம்
[உள்ள சங்குண்ணி சிலை] கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணி மேனனுக்கென தனி நினைவு அரங்குள்ளது. சங்குண்ணி நினைவுக் குழு ஒன்று 1968-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக கே.எம். செரியன்[4] இருந்தார். நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை சங்குண்ணியின் வாரிசு வாசுதேவன் உண்ணி நன்கொடையாக வழங்கினார். பனம்பள்ளி கோவிந்த மேனன் பொ.யு. 1969-ல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் 1972-ல் தொடங்கப்பட்டது. ஐதீகமாலை நூலின் பதிப்பு உரிமைக் கொண்டிருந்த திருச்சூர் மங்கலோதயம் நிறுவனத்திடம் இருந்து பத்தாயிரம் ரூபாய சங்குண்ணி நினைவுக்குழு வாங்கியது. சங்குண்ணியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு குழுவின் துணைத்தலைவர் டி.சி.கிழக்கேமுரியின் வேண்டுக்கோளுக்கு இணங்க இந்நூல் புதிய பதிப்பு கண்டது. அப்பதிப்பில் கிடைத்த வருமானம் கொண்டு நினைவுக்கட்டடம் கட்டப்பட்டது. மே14, 1972-ல் கட்டடம் துறக்கப்பட்டது. பொ.யு. 1978 முதல் இக்குழு சங்குண்ணி பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டாட வருகிறது.
இங்கே 1980-ல் கலைப்பள்ளி தொடங்கப்பட்டது. 1981 முதல் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ந்து வருகின்றன. இசைப்பள்ளி ஒன்று 1985-ல் தொடங்கப்பட்டது. 1991-ல் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. 2001-ல் மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டில், 'அரண்மனையில் சங்கண்ணியின் முழுமையான படைப்புகள்' என்ற நூலை வெளியிட்டது.
விருதுகள்
- கவிதிலகம், கொச்சி மகாராஜா (1904)
நூல்கள்
மணிப்பிரவாள நூல்கள்
- காலை வணக்கம்
- ராஜகேசவதாசரின் வரலாறு
- கேரள வர்மா நூற்றாண்டு விழா
- லட்சுமிபாயின் நூற்றாண்டு
- மரணத்தின் விளிம்பில் ஏற்படும் எண்ணங்கள்
- மதமாஹிச சதகம்
- பயணக் கட்டுரை
- உலகின் மிக அழகான சமாச்சாரம்
- முர்ஜ்பாச்சரிதம்
- கபோத செய்தி
மொழிபெயர்ப்பு
- கௌலி சாஸ்திரம்
- அத்யாத்ம ராமாயணம்
- ராணி ஶ்ரீ சேது லட்சுமிபாய் கதை
கிளிப்பாட்டு
- விநாயக மகாத்மியம்
மொழிநாடகங்கள்
மொழிபெயர்ப்பு
- மாலதிமாதவம்
- விக்ரமோர்வசியம்
- ரவி வர்மா
தொன்ம கதைகள்
- குசேலகோபாலம்
- சீமந்தினிச்சரிதம்
- பஞ்சலத்தனஞ்ஜெயம்
- கங்கா வஸ்த்ராவத்ரா
புனைக்கதைகள்
- தேவியின் முகவரி
- ஜானகி பரிணயம்
தொன்மக் கதைகள்
- ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம்
- ஶ்ரீ ராம அவதாரம்
- சீதா திருமணம்
- சூரிய கிரகணம்
- சூனியாக்காரியின் கதை
கைகொட்டிக்களி[5]
- நிவாதகவசம் காலகேயவதம்
- ஸ்ரீமூலராஜவிலாசம்
- விக்டோரியாசரிதம்
- துருவசரிதம்
- ஷோணத்ரீஷ்வரீ மஹாத்மீயம் (’ஷ’ விற்கு z போல உச்சரிப்பு)
- ஆர்த்ராசரிதம்
- பத்ரோல்பத்தி
- ஓணப்பான
துள்ளல் பாட்டு
- ஸ்ரீபூதனாதோத்பவம்
- ஸ்ரீமூலமகாராஜா ஷஷ்டிபூர்த்தி மஹோத்சவம்
- கல்யாண மஹோத்சவம்
- ஶ்ரீ சங்கரவிலாசம்
- திருமாடம்பு மஹோத்சவம்
வஞ்சிபாட்டுகள்
- கல்யாண மஹோத்சவம்
- சீதா ஸ்வயம்பரம்
உரைநடை கட்டுரைகள்
- மருந்து
- விக்ரமோர்வஸீய நாடக கதைத்தொகுப்பு
- விஸ்வாமித்திர சரிதம்
- அர்ஜுனன்
- ஶ்ரீகிருஷ்ண பகவான்
- ஜதீகமாலை (எட்டு தொகுதி)
- சேத்திர மஹாத்மியம் (2 பாகங்கள், இதிலுள்ள கட்டுரைகள் ஐதீகமாலை நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
- Tales of Kerala, kottarathil Sanguni (1997)
- Aithihyamaala, the great legends of kerala (2010), Translator: Sreekumari Ramachandran
- Tales once told: legends of Kerala adapted from Kottarathil Sankunni's Ithihyamala, Abhraham Eraly
உசாத்துணை
- Aithihyamaala, Sreekumari Ramachandran Translation
- Kerala State Organization Book, Kottarathil Sankunni Books Online Collection
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ தற்போதைய கேரளத்தின் பகுதி (முன்னர் திருவிதாங்கூர்)
- ↑ சிகித்சாகிரமம் - மலையாள நூல்; சிகிச்சை முறை (தமிழ் அர்த்தம்)
- ↑ கோட்டயத்தில் கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா பாஷாபோஷினி சபா தொடங்கினார்.
- ↑ மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர்
- ↑ கைகொட்டிக்களி - குடும்ப பெண்கள் ஆடும் நடனவகைமை; இதற்கென தனி நடன அடவுகள் உண்டு. தனிக்கலை வடிவம் என்ற வகையில் இன்று கேரளத்தில் வெகுஜன கலை வடிவாக உள்ளது. திருவாதிரை பண்டிகையன்று இந்நிகழ்த்துக்கலை அரங்கேற்றப்படுகிறது.