under review

புலவர் குழந்தை

From Tamil Wiki
Revision as of 03:43, 22 May 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குழந்தை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குழந்தை (பெயர் பட்டியல்)
புலவர் குழந்தை

புலவர் குழந்தை (அ.மு. குழந்தை; அ. முத்துசாமி குழந்தை; குழந்தைசாமி) (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) கவிஞர்; புலவர்; எழுத்தாளர். நாடக ஆசிரியர். சுய மரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 'இராவண காவியம்' என்னும் காப்பிய நூலைப் படைத்தார். திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சில நூல்களுக்கு உரை எழுதினார். தமிழக அரசு, குழந்தையின் நூல்களை, 2006-ல் நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

குழந்தைசாமி என்னும் இயற்பெயரை உடைய குழந்தை, ஜூலை 1, 1906 அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலவலசு கிராமத்தில், முத்துசாமிக் கவுண்டர்-சின்னம்மை இணையருக்குப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தார். எட்டு மாதங்களோடு இவரது பள்ளிக் கல்வி முற்றுப்பெற்றது. பின்னர் சுயமாக இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தனித்தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 'எலிமெண்டரி கிரேடு', 'லோயர் கிரேடு', 'ஹையர் கிரேடு' ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1934-ல், சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

புலவர் குழந்தை, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: முத்தம்மை. மகள்கள்: சமத்துவம், சமரசம்.

இலக்கிய வாழ்க்கை

குழந்தை கவிதை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். மரபு வழுவாது பாடல்கள் இயற்றும் ஆற்றலையும், சிற்றிலக்கியங்கள் படைக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தார். தொடக்க காலத்தில் 'கன்னியம்மன் சிந்து', 'வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து', 'வீரகுமாரசாமி காவடிச்சிந்து', 'ஆடிவேட்டை' போன்ற சமயம் சார்ந்த இலக்கியங்களை எழுதினார். மாணவர்கள் இலக்கணத்தை எளிதில் கற்கும் வகையில் 'யாப்பதிகாரம்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவு சார்ந்த கவிதைகளை எழுதினார். திருக்குறளுக்குப் பகுத்தறிவு சார்ந்த உரை எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று திருக்குறளுக்குப் புதிய உரை ஒன்றை எழுதினார். தொடர்ந்து பல்வேறு இலக்கண, இலக்கியங்களுக்கு உரைகளை எழுதினார். பல்வேறு செய்யுள் நூல்களையும், ஆய்வு மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதினார்.

இராவண காவியம்

வடமொழி ராமாயணம் மற்றும் கம்பராமாயணத்தை ஆரியர்களின் பிரதியாகக் கருதிய குழந்தை, திராவிடர்களின் பெருமையைக் கூறும் வகையிலும், தமிழரின் சிறப்பை விதந்தோதும் வகையிலும், 'இராவண காவியம்' என்ற காப்பிய நூலை, இராவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதினார். இந்நூல் 1946-ல் வெளியானது. 1948-ல் அமைந்த காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. 1971-ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தடை நீக்கம் செய்யப்பட்டது. தமிழகக்காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம், போர்க் காண்டம் ஆகிய காண்டச் செய்திகளின் வாயிலாக தமிழர்களின் பெருமை, வீரம், கொடைச் சிறப்பு, ஆட்சித் திறம், கருணை உள்ளம் ஆகியனவற்றைப் பதிவு செய்திருந்தார். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் ஒன்றாக இராவண காவியம் அறியப்படுகிறது.

இதழியல்

குழந்தை, வேளாளர்கள் இடையே உள்ள பல பிரிவினரை ஒன்று சேர்க்கும் வகையிலும், அந்த இனத்து இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவு, 'வேளாண்' என்ற மாத இதழை 1946 முதல் 1958 வரை நடத்தினார்.

அரசியல்

குழந்தை, ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் கருத்துக்களாலும் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டார். சுயமரியாதைக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். 1930-ல், 'ஞானசூரியன்' என்ற இதழின் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதி என்பாருடன், 'கடவுள் இல்லை' என்ற தலைப்பில் வாதாடி வெற்றிபெற்றார். திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராகிச் செயல்பட்டார். 1938, 1948-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தி ஆட்சி மொழியானால் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு உண்டாகும் என்பதை விளக்கி, 'இந்தி ஆட்சி மொழி ஆனால்...' என்னும் ஆராய்ச்சி நூலினை எழுதி அச்சிட்டு, 1965-ல் கோவையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வழங்கினார்

மறைவு

குழந்தை, செப்டம்பர் 22, 1972 அன்று காலமானார்.

நாட்டுடைமை

குழந்தையின் நூல்கள், 2006-ல், தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்டன.

மதிப்பீடு

குழந்தை, இந்தி எதிர்ப்பு இயக்கம், தனித் தமிழ் இயக்கம், பகுத்தறிவு இயக்கம் ஆகிய இயக்கங்கள் சிறப்புற்றிருந்த காலத்தில் வாழ்ந்தவர். அதன் தாக்கங்கள் அவர் படைப்புகளில் வெளிப்பட்டன. திராவிட அரசியலை முன்னெடுத்துச் செயல்பட்டார்.இராவண காவியம் குழந்தையின் படைப்புகளில் முக்கியமானதாக அறியப்படுகிறது. இந்நூல் பற்றி ஜெயமோகன், "உவமைகள் வர்ணனைகள் அனைத்துமே மிக மிகச் சம்பிரதாயமானவை. புதிய சொல்லாட்சிகளை அனேகமாக காணவே முடியாது. ஆகவே ஒரு கவிதை வாசகன் ஆழமான ஏமாற்றத்தையே எப்போதும் அடைய முடிகிறது அதில். அதைவிட முக்கியமானது காவியத் தன்மை என்பதை குழந்தை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான். அவரது மனம் எளிமையான திராவிட இயக்கப் பேச்சாளரின் தளத்தில்தான் செயல்பட்டது. சாதாரணமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களை, வெறுப்பரசியலை அது சமைத்துப் பரிமாறிக் கொண்டே செல்கிறது [1]" என்று மதிப்பிடுகிறார்.

புலவர் குழந்தை திராவிட இயக்க எழுத்தாளர். பேச்சாளர், இலக்கிய, இலக்கண உரையாசிரியர், மரபுசார்ந்த இலக்கியப் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

செய்யுள் நூல்கள்
  • கன்னியம்மன் சிந்து
  • ஆடி வேட்டை
  • நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
  • வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து
  • வீரகுமாரசாமி காவடிச்சிந்து
  • வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
  • இராவண காவியம்
  • அரசியலரங்கம்
  • நெருஞ்சிப்பழம்
  • காமஞ்சரி
  • உலகப் பெரியோன் கென்னடி
  • திருநணாச் சிலேடை வெண்பா
  • புலவர் குழந்தை பாடல்கள்
உரை நூல்கள்
  • திருக்குறள் - குழந்தையுரை
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் - குழந்தையுரை
  • நீதிக்களஞ்சியம் உரை
இலக்கண நூல்கள்
  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்
  • இன்னூல் (சூத்திரம்)
உரைநடை நூல்கள்
  • தொல்காப்பியர் காலத் தமிழர்
  • திருக்குறளும் பரிமேலழகரும்
  • பூவாமுல்லை
  • கொங்கு நாடு
  • தமிழக வரலாறு
  • தமிழ் வாழ்க (நாடகம்)
  • தீரன் சின்னமலை (வரலாறு)
  • கொங்கு நாடும் தமிழும்
  • கொங்குக் குலமணிகள்
  • அருந்தமிழ் விருந்து
  • அருந்தமிழ் அமிழ்து
  • சங்கத் தமிழ்ச் செல்வம்
  • ஒன்றே குலம்
  • அண்ணல் காந்தி
  • தமிழெழுத்துச் சீர்திருத்தம்
  • தீரன் சின்னமலை நாடகம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2026, 06:40:23 IST