under review

குட்டிக்கிருஷ்ண மாரார்

From Tamil Wiki
Revision as of 03:44, 15 May 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குட்டிகிருஷ்ண மாரார்

குட்டிக்கிருஷ்ண மாரார் (ஜூன் 14 1900 - ஏப்ரல் 6, 1973) (டி.கே.குட்டிக்கிருஷ்ண மாரார்) மலையாள இலக்கிய விமர்சகர். மகாபாரதம் உள்ளிட்ட செவ்வியல் படைப்புகளை விரிவாக ஆராய்ந்து எழுதியவர்.

பிறப்பு

திருப்பங்கோடு கிழக்கே மாராத்து குட்டிக்கிருஷ்ண மாரார் என இயற்பெயர் கொண்ட குட்டிக்கிருஷ்ண மாரார் ஜூன் 14, 1900-ல் கரிக்காட்டு மாராத்து கிருஷ்ண மாரார் மற்றும் திருப்பங்கோடு கிழக்கே மாராத்து லக்ஷ்மி வாரியஸ்யார் ஆகியோரின் மகனாக பிறந்தார். மாரார் என்பது கேரள ஆலயங்களில் இசைக்கருவிகளை வாசிக்கும் துணைச்சாதி. வாரியர் என்பது அதற்கிணையான சாதி, ஆலயத்தில் பூகட்டுதல் முதலியவற்றை செய்பவர்கள். மாரார் குலக்கல்வி முறையில் இசையும், சம்ஸ்கிருதமும் பயின்றார். 1923-ல் பட்டாம்பி சம்ஸ்கிருத கல்லூரியில் தனித்தேர்வு எழுதிய் சாகித்யசிரோமணி வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

தனிவாழ்க்கை

குட்டிக்கிருஷ்ண மாரார் 1925-ல் திருக்காவில் கிழக்கே மாராத்து நாராயணிக்குட்டி வாரியஸ்யாரை மணந்தார். 1938 முதல் மாத்ருபூமி நாளிதழிலும் வார இதழிலும் மெய்ப்பு பார்ப்பவராகப் பணியாற்றினார். 1968-ல் ஓய்வு பெற்றார்.

கலை

மாரார் இளமையில் சித்திரகலையில் ஈடுபாடுகொண்டிருந்தார். அதில் முறையான பயிற்சி பெற்றார். தன் தந்தையின் ஊரான கரிக்காடு சுப்ரமணிய ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னிதியில் உள்ள பல ஓவியங்கள் அவர் வரைந்தவை.

இலக்கியம்

சம்ஸ்கிருத இலக்கியம்

மாணவராக இருக்கையிலேயே மாரார் அன்று சம்ஸ்கிருத பண்டிதர்களின் இதழாக இருந்த சஹ்ருதய முதலியவற்றில் சம்ஸ்கிருத காவியங்கள் பற்றி எழுத ஆரம்பித்தார். மாணவராக இருக்கையிலேயே பட்டாம்பி சம்ஸ்கிருதக் கல்லூரியில் தன் ஆசிரியராக இருந்த சம்பு சர்மா எழுதிய ஸாத்விய ஸ்வப்னம் என்னும் சம்ஸ்கிருத காவியத்திற்கும் பிராகிருத சம்விதானம் என்னும் சம்ஸ்கிருத கட்டுரை நூலுக்கும் முன்னுரையும் அடிக்குறிப்புகளும் எழுதினார்.

மலையாள இலக்கியம்

மாரார் கேரளத்தின் தேசியக் கவிஞர் எனப்படும் வள்ளத்தோள் நாராயணமேனன் எழுதிய நூல்களுக்கு பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர் மற்றும் வெளியீட்டாளராக பணியாற்றினார். வள்ளத்தோளின் தொடர்பால் சம்ஸ்கிருதத்தில் இருந்து மலையாள இலக்கியம் நோக்கி ஆர்வம் திரும்பியது. பின்னர் நாலப்பாட்டு நாராயண மேனன் வழியாக மாத்ருபூமி இதழில் பிழைதிருத்துநராக பணியில் சேர்ந்தார். மாத்ருபூமி உள்ளிட்ட இதழ்களில் எழுதினார்.

மாராரின் முதல் நூல் 1928-ல் எழுதிய சாகித்ய பூஷணம். அது அணியிலக்கணம் பற்றியது. ஆனால் அது அச்சிடப்பட்டாலும் வெளியாகவில்லை. 1965ல்தான் அந்நூல் அச்சேறியது.

இலக்கிய விமர்சனம்

மாராரின் இலக்கிய விமர்சன செயல்பாடுகள் 1928 முதல் அவருடைய இறப்பு வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தன. மாராரின் இலக்கியக் கொள்கைகளை கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம்.

  • கலை வாழ்க்கைக்காகவே, கலை கலையின்பத்துக்காக மட்டுமே' என்னும் இரு கொள்கைகள் எழுந்து அவற்றுக்கிடையே விவாதம் நிகழ்ந்த காலகட்டத்தில் மாரார் 'கலை வாழ்க்கையேதான்' என்னும் நிலைபாட்டை முன்வைத்தார். இலக்கியம் செயற்கையாக, ஏதேனும் நோக்கத்துடன் உருவாக்கப்படுவது அல்ல. அது வாழ்க்கை போலவே தானாக நிகழ்வதுதான். வாழ்க்கை அளவுக்கே சிக்கலானதும் அறுதியாக ஏதும் சொல்லமுடியாததும் குறிப்பிட்ட நோக்கமேதும் இல்லாததும் தான் இலக்கியமும். வாசகன் இலக்கியத்தை ஒரு வாழ்க்கையாகவே அனுபவிக்கிறான். வாழ்க்கையில் இருந்து அறிதல்கள் கிடைப்பதுபோல இலக்கியத்திலிருந்தும் வாசகனுக்கு அறிதல்கள் கிடைக்கலாம். ஆனால் இலக்கியம் அந்த அறிதல்களை அளிக்கும் பொருட்டு உருவாக்கப்படுவது அல்ல.
  • சார்புநிலை அற்ற இலக்கிய விமர்சனம் என்னும் கருத்து பிழை. விமர்சனம் என்பதே விமர்சகனின் சார்புநிலையை பிரதிபலிப்பதுதான். தனக்கு வாழ்க்கை சார்ந்து இருக்கும் கேள்விகளுடன் விமர்சகன் இலக்கியத்தை வாசிக்கிறான். தன் கண்டடைதல்களை முன்வைக்கிறான். அதில் அவனுடைய அக உண்மை வெளிப்படவேண்டும், அந்த அக உண்மைக்கு அணுக்கமான இலக்கியவாதிகளை அவன் முன்வைக்க வேண்டும். இலக்கியவிமர்சனம் இலக்கிய விமர்சகனின் கருத்துநிலையின் வெளிப்பாடாக மட்டுமே நிகழமுடியும்.
  • மஹிமபட்டரின் அனுமான சித்தாந்தம் மாராருக்கு உகந்ததாக இருந்தது. நவீன இலக்கிய விமர்சனத்தில் இன்று பேசப்படும் வாசக மையப் பார்வைக்கு அணுக்கமானது இந்தக் கொள்கை. இலக்கியப் படைப்பு வாசகனின் பார்வையால்தான் அர்த்தம் கொள்கிறது, வாசிப்பே இலக்கியத்தை முழுமையாக்குகிறது என்னும் கருத்து கொண்டிருந்தார்.

மாராரின் முதன்மையான நூல்கள் மலையாள சைலி (மலையாள நடை), கல ஜீவிதம் தன்னே (கலை வாழ்க்கையேதான்), ராஜாங்கணம் ஆகியவை. மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்யும் 'பாரதபரியடனம்' (பாரதப்பயணம்) அவருடைய முதன்மை நூலாகக் கருதப்படுகிறது.

இறுதிக்காலத்தில் மாரார் காளிதாசனின் ஆக்கங்களை மொழியாக்கம் செய்தார். 1961 முதல் பெரும்பாலும் ஆன்மிகக் கட்டுரைகளையே எழுதினார்.

விருதுகள்

  • 1947 பட்டாம்பி ஶ்ரீநீலகண்ட சம்ஸ்கிருத கல்லூரி அளித்த சாகித்ய ரத்னம் விருது
  • 1947 பாரதபரியடனம் நூலுக்காக மெட்றாஸ் பிரசிடென்ஸி அளித்த விருது
  • 1966-ல் கல ஜீவிதம் தன்னே நூலுக்காக கேரள சாகித்ய அக்காதமி
  • 1966-ல் கல ஜீவிதம் தன்னே நூலுக்காக கேந்திர சாகித்ய அக்காதமி விருது
  • 1966-ல் கல ஜீவிதம் தன்னே நூலுக்காக எம்.பி.பால் நினைவு விருது
  • 1967-ல் திருப்ணித்துற சம்ஸ்கிருதக் கல்லூரி அளித்த சாகித்ய நிபுணன்

இறுதிக் காலம்

மாராருக்கு குழந்தைகள் இல்லை. மே 27, 1967-ல் அவருடைய மனைவி மறைந்த பின் ஶ்ரீராமகிருஷ்ண மடத்துடன் அணுக்கமான உறவு கொண்டு ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் பலருக்கும் அவர் எழுதிய கடிதங்கள் ஆன்மிக உள்ளடக்கம் கொண்டவை. அவை நூலாகியுள்ளன. இறுதிக் காலத்தில் அல்ஷைமர் நோய்க்கு ஆளாகியிருந்த மாரார் ஏப்ரல் 6, 1973-ல் கோழிக்கோட்டில் மறைந்தார்.

இலக்கிய இடம்

கேரள இலக்கிய விமர்சன மரபின் முதன்மை ஆளுமைகள் என கருதப்படும் மூவரில் ஒருவர் மாரார். பிறர் இடதுசாரிச் சிந்தனையாளரான ஜோசப் முண்டச்சேரி, நவீன இலக்கியத்தின் முன்னோடியான எம்.பி.பால். அவர்களில் மாரார் செவ்வியலை முன்வைத்தவராக கருதப்படுகிறார். செவ்விலக்கியங்களை நவீனச்சூழலில் வாசிப்பதற்கான அடிப்படைக் கருத்துக்களை உருவாக்கியவர் மாரார். செவ்வியல் நூல்கள் மதநூல்களாகவோ அறநூல்களாகவோ மட்டும் வாசிக்கப்பட்ட காலகட்டத்தில் அவற்றை இலக்கிய ஆக்கங்களாக மட்டும், வாழ்க்கைச்சித்திரங்களாக மட்டும் வாசிப்பதற்கு அவர் வழிகாட்டினார். மரபின் பெரும்படைப்பாளிகளை திருவுருக்களாக வழிபட்டு அவர்களின் சொற்களை மேற்கோள்களாக மட்டுமே மதிப்பிட்டிருந்த காலகட்டத்தில் வாசகனின் இடத்தை வலியுறுத்தி வாசிப்பினூடாக அவற்றை நவீனச்சூழலில் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று கற்பித்தார்.

நூல்கள்

  • கல ஜீவிதம்தன்னெ
  • மலையாள சைலி
  • சாகித்ய பூஷணம்
  • ராஜாங்கணம்
  • பாரதபரியடனம்
  • பனினஞ்சு உபன்னியாசங்கள்
  • சாகித்ய சல்லாபம்
  • கைவிளக்கு
  • சாகித்ய வித்ய
  • தந்தகோபுரன்
  • விருத்தசில்பம்
  • பாஷா பரிசயம்
  • ஹாஸ்யசாகித்யம்
  • சரணாகதி
  • கீதபரிக்கிரமணம்
  • பலரும் பலதும்
  • நளினியும் இவாஞ்சலினும்
குழந்தை இலக்கியம்
  • பாஷாவிருத்தங்கள்
  • விஸ்வாமித்ரன்
கவிதைகள்
  • நிழலாட்டம்
மொழியாக்கம்
  • ரகுவம்சம்
  • அபிக்ஞான சாகுந்தலம்
  • குமாரசம்பவம்
  • பஜகோவிந்தம்
  • மேகசந்தேசம்
நாடகம்
  • ஜீவிச்சிருந்நால்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2026, 09:28:33 IST