under review

அப்துல் காதிர்

From Tamil Wiki
Revision as of 09:42, 1 October 2022 by Ramya (talk | contribs)
அப்துல் காதிர் (நன்றி: எம். ஏ. நுஃமான்)

அப்துல் காதிர் (அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்)(ஆகஸ்ட் 30, 1866-1918) ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆன்மீக சொற்பொழிவாளர். அந்தாதி, பதிகம், குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். இஸ்லாமிய இலக்கியத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

அப்துல் காதிர் இலங்கை மலைநாட்டைச் சேர்ந்த கண்டிக்கு அண்மையிலுள்ள வீரபுரி எனப்படும் தெல்தோட்டைனயைச் சேர்ந்த போப்பிட்டி கிராமத்தில் ஆ.பி. அல்லா பிச்சை ராவுத்தர், ஹவ்வா உம்மா இணையருக்கு மகனாக ஆகஸ்ட் 30, 1866இல் பிறந்தார். கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (தற்போது திரினிற்றிக் கல்லூரி) தமிமிழும் ஆங்கிலமும் பயின்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று, மதுரை திருப்பத்தூர்த் தமிழ் வித்தியாசாலைத் தலைமைமயாசிரியராக இருந்த வித்துவசிரோமணி, மஹ்மூது முத்துவாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண விலக்கியங்களை முறையாகக் கற்றார். தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். போப்பிட்டியில் உள்ள மலையை அப்துல் காதிரின் நினைவாக புலவர் மலை என்று அழைக்கின்றனர்.

தனிவாழ்க்கை

அப்துல் காதிர் போப்பிட்டியில் திண்ணைப்பள்ளி ஒன்றினை நிறுவி நடத்தி வந்தார். உடுதெனியா, பட்டியகாமம் ஆகிய இடப்பகுதிகளில் செய்கு சுலைமானுல் காதிரியவர்களுடன் சேர்ந்து சமூகசேவை புரிந்து, பல பள்ளிவாயில்களையும் நிறுவுவதற்குத் துணை புரிந்தார்.

தொன்மம்

அப்துல் காதிர் தனது பதினேராவது வயதில் அருட் காட்சி கிடைத்தபின், தாமாகவே பாக்கவிகள் இயற்றும் வன்மை பெற்றார். பக்திப் பாடல்கள் பாடிப் தீராதிருந்த பிணிகளைப் போக்கினர் எனவும் நம்பப்படுகின்றது. தன் பாட்டால் தீபத்தை எரிய வைத்ததால் “தீப சித்தி” என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

அப்துல் காதிர் நூற்றாண்டு சிறப்பிதழ் (ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை)

அப்துல் காதிர் பதினெரு வயதிலிருந்து பாடல்களை இயற்றினர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்-இஸ்லாமிய கவிதை நூல்கள் எழுதினார். அப்துல் காதிரின் நூல்கள் சில திருப்பத்தூர் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டன. பிரபந்தப்புஞ்சம், காட்டுபாவா சாஹிபு கும்மி, காரணப்பிள்ளைத்தமிழ், பிரான்மலைப் பதிகம், பேரின்ப ரஞ்சித மாலை போன்ற சில நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டன. 1887-ல் சென்னையில் பிரான்மலைப் பதிகம் அப்துல் காதிரின் முதலில் அச்சடிக்கப்பட்ட நூல். பல இலக்கிய நிகழ்ச்சிகளில் அப்துக் காதிர் தன் அட்டாவதனத் திறமையை நிரூபித்தார். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இருந்த பிரதான இறை நேசர்களின் அடக்க ஸ்தலங்களைப் பற்றி பல மாலைகளையும் பிரபந்தங்களையும் பாடினார். ஷிஹாபுதின் வலியுல்லாவை ஞானாசிரியராகக் கொண்டிருந்தார். அவர் மேல் பதிற்றுப்பத்தந்தாதி பாடினார். மீரா மக்காம் தர்க்காவில் தர்ஹா வித்வானாக கெளரவிக்கப்பட்டார்.

இலக்கிய இடம்

”அருள்வாக்கியின் நூல்களைப் படிக்கும்போது இடைக்காலத் தமிழ்ச் செய்யுள் மரபிலும், இஸ்லாமிய ஆன்ம ஞானத்திலும் அவருக்கு இருந்த ஆழமான புலமை பளிச்செனப் புலப்படுகின்றது. தமிழ்ச் செய்யுள் வடிவங்களையும், பல்வேறு பிரபந்த வடிவங்களையும் அவர் மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார்.” என பேராசிரியர் எம். ஏ. நுஃமான் குறிப்பிடுகிறார்.

விவாதங்கள்

அப்துல் காதிர் (நன்றி தெல்தோட்டை ஊடக மன்றம்)

அப்துல் காதிர் மதுரை திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்ற விவாதம் நிலவி வந்தது. அதை எஸ்.எம்.ஏ. ஹசன் ஆய்வின் மூலம் மறுத்து இலங்கையைச் சேர்ந்தவர் என்பதை நிறுவினார். தன்பீகுல் முரீதீன் என்ற ஒரு உரைநடை நூலை அருள்வாக்கி எழுதியதாகவும், அறிஞர் சித்திலெப்பை 1897 இல் எழுதி வெளியிட்ட அஸ்றாறுல் ஆலம் என்ற நூலுக்கு எதிராகப் பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து அருள்வாக்கி எழுதிய நூல் அது என்றும் அதுபற்றி எழுதிய பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். "முஸ்லிம் சமுதாயத்திலே பரவியிருந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தெறிவதற்கு அறிஞர் சித்திலெப்பை முன்னின்று உழைத்துவந்தார். பாரம்பரியப் போதனைகள் சிலவற்றினால் மக்களது சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சமுதாயம் முல்லாக்களால் வரையறுக்கப்பட்ட ஒருசில கட்டுக்கோப்புகளை மீறமுடியாமலிருந்தது. அந்த நிலையைத் தகர்த்தெறிவதற்கு முன்வந்த சித்திலெப்பை ஞானதீபம், அஸ்ராருல் ஆலம் ஆகியவற்றின் மூலமாக இஸ்லாமியத் தத்துவங்களைக் காரண காரியத்தோடு விளக்க முற்பட்டார். இஸ்லாமிய தத்துவ விளக்கங்களையும் ஞானக் கோட்பாடுகளையும் காலத்துக்கேற்ற வகையில் ஒப்பியல் முறையில், கதைகளாகவும் உருவகங்களாகவும் விளக்கம் கொடுத்து வாழ்க்கையின் இரகசியங்களிற் காணப்படும் இஸ்லாமியக் கோட்பாட்டுச் சிறப்புகளை தெளிவுபடுத்தியுள்ளார்." என்கிறார் எஸ்.எம்.ஏ. ஹஸன்தான்.

சிறப்புகள்

  • இவரது தமிழ்ப்பணியினை அங்கீகரிக்கும் வகையில் 1993-ல் இலங்கையில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் “அருள்வாக்கி அப்துல் காதிர்புலவர்” என்ற பெயரில் பாடல்களைச் சேர்த்தனர்.
  • 1965-ல் தினகரன் நூற்றாண்டு சிறப்புமலர் வெளியிட்டது.
  • 1973-ல் அப்துக் காதிர் பற்றிய ஆராய்ச்சி நூலை எஸ்.எம்.ஏ. ஹசன் வெளியிட்டார்.
  • ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை 2018-ல் அருள்வாக்கி அப்துல் காதிர் மரணித்த நூற்றாண்டை ஒட்டி சிறப்பிதழ் வெளியிட்டது.

பட்டங்கள்

  • பதினறு வயதில் கவியரங்குகளில் கலந்து "யாழ்ப்பாண சங்கன்", "மெய்ஞ்ஞான அருள் வாக்கி’ என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றார்.
  • யாழ்ப்பாணத்திலே சீருப்புராணம், இராமாயணம் ஆகியவை பற்றி அப்துல் காதிர் ஆற்றிய விரிவுரைகளுக்காக அசனுலெப்பைப் புலவரின் தலைமையில், இவருக்கு "வித்துவ தீபம்" பட்டத்தினை 1912-ல் வழங்கினர்.
  • நிமிட வித்துவான் என்று அழைக்கப்பட்டார்.

மறைவு

தமது ஐம்பத்திரண்டாவது வயதில்,1918ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 18ஆம் தேதி கண்டியிலுள்ள தமது இல்லத்தில் இவ்வுலக வாழ்வினை நீத்த்ார்கள்.

நூல் பட்டியல்

  • கண்டிக் கலம்பகம்
  • கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி
  • கண்டிநகர்ப் பதிகம்
  • சலவாத்துப் பதிகம்
  • தோவாரப் பதிகம்
  • பதாயிடுப் பதிகம்
  • பிரான்மலைப் பதிகம்
  • கண்டி செய்கு ஷிஹாபுதின் பதிகம்
  • திருபகுதாதந்தாதி
  • மெய்ஞ்ஞானக் குறவஞ்சி
  • மெய்ஞ்ஞானக் கோவை
  • கோட்டாற்றுப் புராணம்
  • உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ்
  • காரணப் பிள்ளைத்தமிழ்
  • திருச்சந்தப் பிள்ளைத்தமிழ்
  • சித்திரக் கவிப்புஞ்சம்
  • பிரபந்த புஞ்சம்
  • ஆரிபுமாலை
  • பேரின்ப ரஞ்சிதமாலை
  • ஞானப் பிரகாச மாலை
  • வழிநடை பத்து மாலை
  • புதுமொழிமாலை
  • திருமதீனத்தந்தாதி மாலை
  • வினுேத பதமஞ்சரி
  • நவமணித் தீபம்
  • சந்தத் திருப்புகழ்

உசாத்துணை

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.