under review

அவிநாசி கருணாம்பிகை சதகம்

From Tamil Wiki
Revision as of 03:44, 25 April 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அவிநாசி கருணாம்பிகை சதகம் (ஶ்ரீ தென்காசியாகிய அவிநாசி கருணாம்பிகை சதகம்) (19-ம் நூற்றாண்டு) அவிநாசியில் கோயில் கொண்ட கருணாம்பிகையின் மீது இயற்றப்பட்ட சதகம் என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

கருணாம்பிகை சதகத்தை இயற்றியவர் கொங்குநாட்டைச் சேர்ந்த வாசுதேவ முதலியார். வஞ்சிப்பாளையம் சுப்பிரமணிய முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவிநாசி சிவன்கோயிலில் உள்ள கருணாம்பிகை மீது சதகம் பாடினார். இந்நூல் 1891-ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. சுப்பிரமணிய முதலியார் உரிய வெகுமதிகள் அளித்துள்ளார்.

நூல் அமைப்பு

உ.வே.சாமிநாதையர், வெ.சீனிவாசையங்கார், ஓகை ஐ.சண்முகம்பிள்ளை, சா.சரவணப்பிள்ளை, புரவிப்பாளையம் முத்துநாகப்ப முதலியார் ஆகியோர் கருணாம்பிகை சதகத்திற்கு சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.

ஶ்ரீ தென்காசியாகிய அவிநாசி கருணாம்பிகை சதகத்தில் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்துக்கேற்ப 100 பாடல்கள் உள்ளன. பதிநான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடல்கள் அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

அவிநாசி கருணாம்பிகை சதகம் கருணாம்பிகையைப் போற்றித் துதிப்பதோடு உலக இயல்புகள், நடைமுறைகள் நீதிகள் போன்றவற்றைக் கூறுகிறது.

சிவபெருமானின் மெய்க்கடவுள் தன்மை, அந்தணர் இயல்பு, அரசர் இயல்பு, வணிகரியல்பு, வேளாளர் இயல்பு, பொருள்களில் சிறந்தவை (மலைகளில் உயர்ந்தது மேரு, பறவைகளில் கருடன்), ஒன்றின்றி ஒன்று அமையாதவை, தீயோரின் செயல்கள், நல்லோரின் இயல்புகள், சான்றோரின் தன்மைகள், பொருள்களின் தன்மைகள், ஒன்றுக்கொன்று அணிசேர்ப்பவையாக அமைந்த குணங்கள், கல்வியின் தன்மை, பெண்களின் இயல்புகள் போன்ற 100 தலைப்புகளில் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும்

கங்கா குலன் சுப்ரமணியன்மன மகலாத
கருணாலயச் செல்வியே

என்ற ஈற்றடியில் முடிகின்றது.

பாடல் நடை

மேலான உத்தமர்கள் சொல்கின்ற புத்திகளை
மெய்யென்று கேட்பது நலம்
வினையமிகு பொல்லாத நீசர் சொல்லினை
விரும்பிடா திருப்பது நலம்:
பாலான சற்குணநல் விதரணர்க டங்கண்மேற்
பைந்தமி ழுரைப்பது நலம்
பன்னறுதமி ழருமையறொயாப் பரமலுத்தரை
பாடா திருப்பது நலம்
மாலான வுபசார வாசார மிச்குளோர்
மனையிலுண்டிடுதல் நலம்
மரியாதை செரியாத மூடர்மனை தன்னிலே
வந்தணா ததுவே நலம்
சாலாடு சோலையஞ் சேலாடு சடமுங்
கதிக்கு மவிசாசி மயிலே
கங்கா குலன் சுப்ரமணியன்மன மகலாத
கருணாலயச் செல்வியே

உசாத்துணை

ஶ்ரீ தென்காசியாகிய அவிநாசி கருணாம்பிகை சதகம்-தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:43:22 IST