under review

ராக்காயி அம்மன் கோயில் (மதுரை)

From Tamil Wiki
Revision as of 03:44, 31 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராக்காயி அம்மன்
ராக்காயி அம்மன் கோயில்

ராக்காயி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அழகர் மலை காப்புக்காடுகளில் அமைந்துள்ள கோயில். இக்கோயிலில் சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கை தீர்த்தம் கொட்டுகிறது.

அமைவிடம்

ராக்காயி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அழகர்மலை காப்புக் காட்டில் அமைந்த அம்மன் கோயில். இக்கோயில் மதுரை நகரத்திலிருந்து வடக்கே இருபத்தினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அழகர்மலை மீதமைந்த பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்கு மேலே சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது.

தொன்மம்

  • ராக்காயி அம்மன் அழகர் மலையில் வசித்த பழங்குடிகள், வேட்டை சமூகத்தின் தெய்வமாகக் கருதப்பட்டது.
  • வாணாதிராயர் குலதெய்வமான ராக்காயி அம்மன், பார்வதி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறார். சுந்தர ராஜப்பெருமாளின் தங்கையாகக் கருதப்படும் ராக்காயி பகலில் அவரைக் காவல் காப்பதாக நம்பிக்கை உள்ளது.
  • ராக்காயி என்ற பெயர் ராட்சசி என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும், வாணர் குல அசுர வழிவந்த பெண் தெய்வத்தைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
நூபுர தீர்த்தம்/திரிவிக்ரமாவதாரம்

பெருமாள் திரிவிக்ரமாவதாரம் செய்து சகல உலகங்களையும் அளந்த போது அவரின் திருவடி பிரம்ம லோகத்திற்கு சென்றது. முப்பத்தி ஆறாயிரம் வருடங்களாக பெருமாளின் பாதத்தைக் கண்டு வணங்கிட வேண்டி தவம் செய்த பிரம்மன் அது தன் அருகில் வந்ததும் ஸ்வர்ண கலசத்தில் இருந்த கங்கை நீரால் அவரின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். அப்போது அவரின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பு எனும் நூபுரத்திலும் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூமிக்கு வந்து சேர்ந்தது. இதனால் சிலம்பாறு என்றும் நுபுர தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் விடச் சிறந்ததாய் உள்ளது.

துர்வாசமுனிவர் சாபம்

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகையாற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

அமைப்பு

ராக்காயி அம்மன் கோயிலின் தல விருட்சங்கள் ஜோதி விருட்சம் மற்றும் சந்தன மரம். மலையில் அமைந்திருக்கும் அம்மன் சன்னதிக்கு எண்பது படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலவராக வீற்றிருக்கும் ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள தொட்டியில் விழும் தீர்த்தத்தின் பெயர் நூபுர கங்கை தீர்த்தம். இதனை சிலம்பாறு என்றும் அழைப்பர். அதில் நீராடியபின் மூலவரை தரிசிக்கச் செல்வது மரபாக உள்ளது.

வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை காலத்தின் துவாதசி தினத்தன்று சுந்தரராஜ பெருமாள் ராக்காயி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி அவருக்கு தைலக்காப்பு படைக்கிறார். ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து அழகருக்கு அன்றாடம் அபிசேகம் செய்வார். ஆடிமாதம் ராக்காயி அம்மனுக்கு திருவிழா நடக்கிறது.

ராக்காயி அம்மன் கோயில் மனநலம் மற்றும் தோல் நோய்களுக்கான பரிகாரத் தலமாகவும், ராகு, கேது தோஷங்கள் நீக்கும், குழந்தைப் பேறு அளிக்கும் தலம் என்றும் நம்பப்படுகிறது.

கோயில் நேரம்

ராக்காயி அம்மன் கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jan-2026, 19:46:10 IST