under review

பத்மநாப மிஸ்ரர்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பத்மநாப மிஸ்ரர் (பொயு 16-ம் நூற்றாண்டு) சம்ஸ்கிருத அறிஞர். நியாயவியலுக்கு உரை எழுதியவர். வேதாந்தத்துடன் இணைந்துகொண்ட பிற்கால நியாயவியலான நவநியாயம் என்னும் இயக்கத்தைச் சேர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

பத்மநாப மிஸ்ரா சம்ஸ்கிருத அறிஞர் பலபத்ர மிஸ்ராவுக்கு 1548ல் மிதிலையில் பிறந்தார். காசியில் கல்வி கற்றார். பத்மநாப மிஸ்ரருடைய தம்பியும் சீடருமான கோவர்த்தன மிஸ்ரர் நியாயவியலுக்கு தர்க்கப்பிரகாசம் என்னும் உரை எழுதியவர்.

வாழ்க்கை

கௌட நாட்டில் இருந்த கரமண்டலம் என்னும் பகுதியை ஆட்சி செய்த துர்க்காவதி என்னும் அரசியின் அவைப்பண்டிதராக இருந்தார். பின்னர் அக்பரின் அவையில் தர்க்கவியல் பண்டிதராகப் பணியாற்றினார்

தத்துவப் பங்களிப்பு

பத்மநாப மிஸ்ரர் தர்க்கம், அலங்காரம் ஆகியவற்றில் அறிஞர். அவர் நியாய தரிசனத்துக்கு எழுதிய வர்த்தமானஹேது என்னும் நூல் புகழ்பெற்றது. பிரத்யக்ஷசிந்தாமணிப்பரீக்ஷா, அனுமானப்பரீக்ஷா, சப்தப்பரீக்ஷா ஆகிய நியாயவியல் நூல்களை எழுதினார். நவநியாயம் எனப்படும் தத்துவ இயக்கத்தின் அறிஞர்களில் ஒருவர். இது வேதாந்தத்துடன் இணைந்த நியாயவியலாகும்.

பத்மநாப மிஸ்ரர் தன்னை ஆதரித்த ராஜா ராம்சந்திரா என்னும் அரசரின் மகன் பீர்பத்ரதேவாவை புகழ்ந்து பிர்பத்ரதேவாசம்பு என்னும் குறுங்காவியத்தை எழுதினார். ஜெயதேவரின் புகழ்பெற்ற நூலான சந்த்ரலோக் என்னும் இசைநூலுக்கு சாரதாகம் என்னும் உரையை எழுதினார். வேதாந்தக் கொள்கையை விளக்கும் துர்காவதிப்பிரகாசம் என்னும் நூலையும் வேதாந்த விவாதமாகிய கண்டனப்பராக்ரம் என்னும் நூலையும் இயற்றினார்.

நூல்கள்

நியாயம்
  • வர்த்தமானஹேது
  • பிரத்யக்ஷசிந்தாமணிப்பரீக்ஷா
  • அனுமானப்பரீக்ஷா,
  • சப்தப்பரீக்ஷா
வேதாந்தம்
  • துர்க்காவதிப்பிரகாசம்
  • கண்டனப்பராக்ரம்
இலக்கியம்
  • பீர்பத்ரதேவ சம்பு
  • சாரதாகம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 10:28:29 IST