ஆற்றுமாடன் தம்புரான்
ஆற்றுமாடன் தம்புரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் (திருவிதாங்கூரில்) வழிபடப்படும் நாட்டார் தெய்வம். திருவிதாங்கூர் அரசரின் படைத்தளபதியாக இருந்த வலியகேசி, சிறியகேசி சகோதரர்களே ஆற்றுமாடன் தம்புரான் என்றழைக்கப்படுகின்றனர். திருவிதாங்கூரில் வழக்கிலிருந்த மண்ணாப்பேடி, புலைப்பேடி வழக்கத்தைத் தடைசெய்த போது எழுந்த கலவரத்தை அடக்கிய படைத்தளபதிகள் வலியகேசியும், சிறியகேசியும். இவர்களின் கதை இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லுப்பாட்டாகவும், தெக்கன் பாட்டாகவும் பாடப்படுகிறது.
பெயர் காரணம்
வலியகேசி, சிறியகேசி ஆற்றுமாடன் தம்புரான் இருவரும் தற்போது கோவில் கொண்டிருக்கும் கல்லடிவிளைக்கு தாங்கள் இறந்த இடத்திலிருந்து வள்ளி ஆற்றை கடந்து வந்ததால் இப்பெயர் பெற்றனர். அதுவே அவர்களின் கோவில் பெயராகவும் விளங்குகிறது.
வரலாற்று பின்னணி
மண்ணாப்பேடி, புலைப்பேடி வழக்கம்
திருவிதாங்கூரில் (தற்போதைய திருவனந்தபுரம், கன்னியாகுமரி பகுதிகளை உள்ளடக்கியது) மண்ணாப்பேடி, புலைப்பேடி என்ற சமூகப்பழக்கம் வழக்கிலிருந்தது. பேடி என்றால் மலையாளத்தில் பயம் என்று பொருள். வருடத்தில் சில நாட்களில் (ஆடி மாதங்களில்) பறையடித்து மண்ணாப்பேடி - புலைப்பேடி நாட்கள் என கிராம சபையில் அறிவித்து விடுவர். அந்நாட்களில் உயர் சாதிகளாக கருதப்பட்ட நாயர், நம்பூதிரி பெண்களை சூரிய அஸ்தமனத்திற்கு பின் வீட்டிற்கு வெளியே தனியாக பார்த்தால் "கண்டேன் பூஹோய்", "தொட்டேன் பூஹோய்" என உரக்க கூவி அழைத்தால் சம்பந்தப்பட்ட பெண் அவருக்கு உரிமையாகிவிடுவார். அப்பெண்ணின் குடும்பத்தினரும் அவள் இறந்ததாகக் கருதி பிண்டம் வைத்து இறுதி சடங்குகள் நிகழ்த்துவர். அதன்பின் பெண் வீட்டார் அவளுடன் எந்த உறவுமுறையும் வைத்துக்கொள்வதில்லை. இதற்கு இணங்க மறுக்கும் பெண்களை சொந்தக் குடும்பத்தினரே கொல்லும் வழக்கமும் இருந்துள்ளது. மண்ணா, புலை ஆண்கள் அதன்பின் அப்பெண்களை உரிமையாக்கிக் கொள்வோ, விற்றுவிடவோ செய்வர். பெண் அடிமையான காலகட்டத்தில் அவள் கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் வரை தனிக்குடிலில் வைத்திருப்பர். அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அக்குழந்தையை பெண்ணின் சொந்தக்காரர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும். பெண்ணென்றால் அடிமையாக்கியவரே வைத்துக்கொள்வார்.
பார்க்க: மண்ணாப்பேடி, புலைப்பேடி
வழக்கொழிப்பு
மண்ணாப்பேடி, புலைப்பேடி வழக்கத்தைத் தடை செய்யும் சட்டத்தை திருவிதாங்கூர் அரசரான கேரள வர்மா இயற்றினார். திருவிதாங்கூரின் முக்கிய அரசியான உமையம்மா ராணியின் வளர்ப்பு மகனான கேரள வர்மா வேணாட்டில் பலவித சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். அதன் பகுதியாக மண்ணாப்பேடி, புலைப்பேடி தடைச்சட்டமும் இயற்றினார். இதற்கான ஆதார கல்வெட்டு "தோவாளைக்கு மேற்கேயும், கண்ணெற்றிக்கு கிழக்கேயும் கடலிற்கும் மலைக்கும் அகப்பட்ட நாட்டில் கன்னி வியாழம் நின்ற கொல்ல வருடம் 871 தை மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை முதல் மண்ணாப்பேடி, புலைப்பேடி தடைசெய்யப்படுகிறது என்று தம்புரான் திருவுள்ளம் கொண்டு இரண்டு மகாஜனங்களின் பிரதிநிதிகளைக் கூட்டி முடிவு செய்யப்படுகிறது, இதனை மறுப்பவர்கள் குடும்பத்தோடு அழிக்கப்படுவர். இவ்வழக்கத்தில் அகப்படும் பெண்கள் நீராடி எழுந்தாலே அவர்கள் தோஷம் நீங்கியவர்கள் ஆவர். இக்கல்வெட்டு புவி உள்ள வரை இருக்குமென்றும், இதற்கு சேதம் விளைவிப்பவர்கள் கங்கைகரையில் காரம் பசுவை கொன்ற தோஷத்திற்கு ஆளாவார்கள்" என்றும் பொ.யு. 1696-ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.
வலியகேசி, சிறியகேசி கதை
வலியகேசி, சிறியகேசி கதை கேரள வர்மா கொண்டு வந்த மண்ணாப்பேடி, புலைப்பேடி தடைச்சட்டத்துடன் தொடர்புடைய கதை. வேணாட்டின் ஒரு பகுதியாக இருந்த பைங்குளம் கிராமத்தில் காலனுக்கும், குஞ்சு நீலம்மைக்கும் தவமிருந்து பிறந்த இரட்டையர்கள் வலியகேசி, சிறியகேசி. இவர்கள் இளமையில் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தனர். அடவு முறைகள், சோதிடம் போன்றவற்றைக் கற்றபின்னும் நிறைவு கொள்ளாத சகோதரர்கள் 'சாத்தன்காளி புலையன்' என்பவரை ஆசானாக ஏற்று அம்பு தடை செய்யும் முறை, ஆள் மாற்றம் கொள்ளும் முறை, கூடுவிட்டு கூடு பாயும் முறை என எல்லா வித்தைகளையும் கற்றனர். இக்காலத்தில் ஹிரண்ய சிம்ஹநல்லூரில் (தற்போதைய இரணியல்) கேரள வர்மா மண்ணாப்பேடி, புலைப்பேடி தடைச் சட்டத்தை இயற்றினார். இதனை எதிர்த்து நாட்டில் கலகம் ஏற்பட்ட போது அதனை அடக்க வலியகேசி, சிறியகேசியை நியமித்தார். அரசனின் சொல் கேட்டு தம்புரான்கள் கலகம் செய்தவர்களை வெட்டி வீழ்த்தினார். இறுதியில் காளிப்பேரான் என்பவன் சூழ்ச்சியால் வலியகேசியின் முதுகில் குத்த அவர் மடிந்தார். அண்ணன் இறந்ததைக் கண்ட தம்பி தானும் கழுத்தறுத்து மரணமடைந்தான். அகால மரணமடைந்த பெருவீரர்களாக கேசி சகோதரர்கள் கைலாயம் சென்று சிவனிடம் வரம் பெற்று வந்தனர். பின் தங்களைக் கொன்ற காளிபேரான் சந்ததிகள் அனைவரையும் அழித்தனர். இறுதியாக காளிபேரான் குடும்பத்தில் கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண்ணின் கனவில் சென்று தொல்லை கொடுத்தனர். அவள் ஜோதிடம் பார்த்து தம்புரான்கள் இருவருக்கும் கேசி சகோதரர்களின் இனத்தவர்கள் வாழும் கல்லடிவிளையில் கோவில் எழுப்பி, கொடை நிகழ்த்தினாள். இதனால் சாந்தம் கொண்ட வலியகேசி, சிறியகேசி சகோதரர்கள் பீடத்தில் அமர்ந்தனர் எனக் கதைப்பாடல் பாடுகிறது. வள்ளியாற்றங்கரையின் மறுஎல்லையில் கொல்லப்பட்டு பின் ஆற்றை கடந்து மறுபுறம் வந்து கோவில் கொண்டதால் ஆற்றுமாடன் தம்புரான் எனக் கேசி சகோதரர்கள் அழைக்கப்படுகின்றனர்.
கோவில்
ஆற்றுமாடன் தம்புரான் என்றழைக்கப்படும் கேசி சகோதரர்களுக்கு (வலியகேசி, சிறியகேசி) கோவில்களும், பீடங்களும் அமைக்கும் வழக்கம் உள்ளது. கோவில்களாக அமைந்த இடங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகவும், தம்புரான் கதைப்பாடலோடு தொடர்புடையவையாகவும் உள்ளன.
பூர்வீக கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, மணவாளகுறிச்சிக்கு அருகே கல்லடிவிளையில் கேசி சகோதரர்களுக்கு தம்புரான் கோவில் உள்ளது. இதுவே இவர்களின் பிரதான கோவில் என ஆய்வாளர் சஜு குறிப்பிடுகிறார்.[1] இக்கோவில் ஊராளி சமூகத்தின் ஊர்க்கோவிலாக உள்ளது.
கட்டப்பட்ட காலம்
இக்கோவில் கட்டப்பட்ட காலம் எதுவென்று உறுதியாக அறியமுடியவில்லை. ஆற்றுமாடன் தம்புரான் கதைப்பாடலில் உள்ள குறிப்புப்படி மண்ணாபேடி, புலைப்பேடி வழக்கத்தை ஆதரித்து கலகம் செய்த காளிபேரானை கேசி சகோதரர்கள் கொன்றபின் காளிபேரானின் வம்சத்திலுள்ள ஒரு பெண் கேசி சகோதரர்களுக்கு கல்லடிவிளையில் கோவில் அமைத்தாள் என அறிய முடிகிறது. இக்கலகம் நிகழ்ந்த வரலாற்று கணக்கு படியும், கதைப்பாடல் படியும் இக்கோவில் பொ.யு. 1697 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. அதாவது இன்றிருக்கும் ஊராளி வம்சத்திற்கு ஆறு தலைமுறை முன்பு.
அமைப்பு
மூலவர்
மூலவர்களான வலியகேசிக்கும், சிறியகேசிக்கும் தனி தனி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வலியகேசி வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், சிறியகேசி அருகில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். காணப்படும் இச்சிலை வடிவம் புனரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. அதற்கு முன் பீடத்தை வழிபடும் வழக்கமே இருந்தது. இன்றிருக்கும் சிலை வடிவம் ஊர் நிர்வாகி ஒருவருக்கு கொடைவிழாவின் சாமியாட்டத்தின் போது தோன்றியது.
கொடையின் போது கேசி சகோதரர்கள் சாமிகொண்டாடியின் மேல் எழுந்ததும் சன்னதியில் வைக்கப்பட்ட வாள், கத்திகளை எடுத்து அடவுக்கூட்டி தோரணங்கள், ஆரங்களை வெட்டி நொறுக்குவர். பின் தம்புரான்களுக்கு வேட்டியும், இடுப்பில் கச்சையும், தலைப்பாகையும் அணிவிப்பார்கள். வலியகேசியின் இடுப்பில் பட்டாக்கத்தியும், இடது தோளில் துணிப்பை ஒன்றும் அணிவிப்பர். தோள்பைக்குள் எழுத்தாணி இருக்கும். பொ.யு. 2004 சுதையால் வடிவமைக்கப்பட்ட சிலை, பொ.யு. 2016-ம் ஆண்டு கற்சிலையாக மாற்றப்பட்டது.
பீடம்
வலியகேசியின் முன் ஒரு பீடம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடம் 'சப்பாணி போற்றி' என அறியப்படுகிறது. [2] இதை தவிர கேசி சகோதரர்களுக்கு வெவ்வேறு காலத்தில் உதவிய ஆசான்கள், பரவர் குலப்பெண்ணான கோதை நல்லாள் (இறக்கும் தருவாயில் தாகம் தீர்த்தவள்), பனையேறி நாடார் (நீர் குடிக்க பனையோலையை வெட்டிக் கொடுத்தவர்) ஆகியோருக்கு தனித்தனி பீடம் உள்ளது.
மூலவர் சன்னதி அருகே நான்கு பீடங்கள் ஒரே மட்டத்தில் அருகருகே உள்ளன. கதைப்பாடலில் நான்கு பீடங்கள் மூலவர் வலியகேசிக்கு அருகில் குறிப்பிடப்படுகின்றன. அதன் காரணக் கதை ஒன்றும் வழக்கில் உள்ளது. நான்கு பீடங்கள் என்பது இரண்டு சகோதரர்களும், அவர்களது ஆசிரியர்களும், அனைத்து வித்தைகளையும் கற்ற கேசி சகோதரர்கள் மீதமிருந்த வித்தைகளை கற்க வேண்டி ஆசானிடம் சென்றார்கள். தங்களோடு அமர்ந்து உணவுண்டால் கற்று தருகிறோம் என ஆசான் சொல்லவே சகோதரர்கள் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.[3]
அம்மன் சன்னதி
இக்கோவிலில் மூன்று முகமுடைய முத்தாரம்மனுக்கும் உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
புனரமைப்பு
பொ.யு. 2004 வாக்கில் இக்கோவில் புனரமைத்து மீண்டும் கட்டப்பட்டது.
விழா
ஆற்றுமாடன் தம்புரானுக்கு சித்திரை மாதத்தில் கொடை விழா எடுக்கப்படுகிறது. அம்மாதத்தின் கடைசி செவ்வாய் தொடங்கி விழா நடைபெறும். விழாவின் நான்காம் நாள் இரவிலும், ஐந்தாம் நாள் பகலிலும் வலியகேசி, சிறியகேசி கதைப்பாடல் பாடப்படுகிறது. ஐந்தாம் நாள் காலையில் சப்பாணி போற்றி கதைப்பாடலும் பாடப்படுகிறது. ஐந்தாம் நாள் இறுதி நிகழ்வாக கேசி சகோதரர்களுக்கு பூக்களம் வரைந்து[4] பூஜை நிகழ்த்துகின்றனர். பூஜை முடிந்ததும் விழா இறுதியாக 'ஆசான் கொடுப்பு' என்னும் சடங்கு ஊர் மைதானத்தில் நிகழ்கிறது. அங்கே ஊராளி சமூகத்தினர் சைவத்துடன் அசைவ படையல் சேர்த்து பனையோலையில் இரண்டு ஆசான்களுக்கும், இரண்டு தம்புரான்களுக்கும் படைக்கின்றனர். இது குருவிற்கு செலுத்தும் மரியாதையாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பிற கோவில்கள்
முறிப்பாலத்தடி தம்புரான் கோவில்
முறிப்பாலத்தடி தம்புரான் கோவில் தம்புரான்களின் தாய்க்கோவிலாக கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் கிழக்கு கோட்டைக்கு அருகேயுள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் அமைந்துள்ளது. [5] இங்கு பொ.யு. 2023 - ல் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. கேரள பாரம்பரிய முறையில் அமைந்த மாடன் தம்புரான் சிலை ஒன்று அமைக்கப்பட்டு மூலவராக உள்ளது.
ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஸ்ரீ வலியகேசி தம்புரான் கோவில்
தம்புரான்கள் பிறந்த ஊரான பைங்குளத்தை அடுத்த மணக்காடு குறிச்சன்மூட்டில் அவர்களுக்கு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஸ்ரீ வலியகேசி தம்புரான் கோவில் என்ற பெயரில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. தண்டான்கள், ஊராளிகள் இரு சாதியினரும் பத்ரகாளியை வழிபடுபவர்கள். பத்ரகாளியின் தூக்கம் திருவிழா நேர்ச்சையில் இவ்விரு சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோவில் பழமையான நாட்டார் கோவில்களில் ஒன்று. வேலுதம்பி தளவாய் இக்கோவிலை வழிப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இங்கு வலியகேசி தம்புரானுக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமி கோவில்
கலிங்கராஜபுரத்தில் அமைந்துள்ள இக்கோவில் தண்டான் சமூகத்தினர் வழிப்பாட்டிற்குரியது. இக்கோவிலிலும் தம்புரான் சாமிக்கு தனிப் பீடம் உள்ளது.
ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்
கேசி சகோதரர்கள் மரணமடைந்த இடமாக கருதப்படும் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தட்டான்விளையில் தம்புரான் சாமிகளுக்கு தனி பீடங்கள் உள்ளன. இக்கோவில் நாடார் சமூகத்திற்கானது. இக்கோவிலே கேசி சகோதரர்கள் கதைப்பாடலுக்கு ஆதார சான்றாய் உள்ளது.
கதைப்பாடல்
வலியகேசி, சிறியகேசி கதைப்பாடல் எண்ணூறு வரிகளுக்கு மேல் கொண்டது. மலையாளமும், தமிழும் கலந்த மொழியில் அமைந்துள்ளது. இக்கதைப்பாடல் முழுவதும் பாடல் நடையில் அமைந்துள்ளது. பிற கதைப்பாடல்கள் போல் பாடலுக்கு இடையில் கதை/வசனம் என்ற அமைப்பு இதிலில்லை. மணவாளக்குறிச்சி, ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வேளாந்தோட்டம் குடும்பத்தைச் சேர்ந்த குமாரபிள்ளை ஆசான் முதலில் ஓலைச்சுவடியில் இக்கதைப்பாடலை எழுதினார். அவரது சீடர்கள் இதனை வில்லுப்பாட்டாகப் பாடினர். பின் கேசி வம்சத்தைச் சேர்ந்த ஆற்றங்கரை கோனம்பு வீட்டு குட்டியப்பி ஆசான் இக்கதைப்பாடலைப் பாடினார். தற்போது பலரால் வில்லுப்பாட்டாகவும் தெக்கன் பாட்டாகவும் பாடப்பட்டு வருகிறது.
பாடல் நடை
பாரறிய வித்தை புத்தி
பல கணக்கும் தான் படித்து
மல்லடவு சிரமத்தொழில்
வாளு வித்தை மோடி வித்தை
வடக்கன் களரி தெக்கன்களரி
வர்மாணியம் தான் படித்தார்
ற்றும் இது போதாது
காசியினில் உள்ள வித்தை
அத்தனையும் கற்றுணர்ந்தோர்
எங்கிருப்பார் என்று சொல்லி
இன்பமுடன் தேச மெங்கும்
இருவருமே எழுச்சியுடன் தான் தேட
சாத்தான்காளி புலையனொரு
சமர்த்தான் உண்டு என்றறிந்து
அங்கு சென்று அடி வணங்கி
ஆசான் என்று சம்மதித்து
தெட்சணையும் கை கொடுத்து
திறமாக படிக்கலுற்றார்
உசாத்துணை
- ஆற்றுமாடன் தம்புரான் வரலாறும், கதைப்பாடலும், ஆசிரியர் - சஜு, முத்ரா பதிப்பகம் (மே, 2024)
- புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம் (2012)
வெளி இணைப்புகள்
- ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சிவந்தமண் மணவாளக்குறிச்சி, யூடியூப்.காம்
- கல்லடிவிளை ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா
அடிக்குறிப்புகள்
- ↑ சஜுவின் ஊரில் அமைந்த கோவில் இது. இவர் ஆற்றுமாடன் தம்புரான் பற்றி நீண்ட ஆய்வை மேற்கொண்டு புத்தகமாக்கியுள்ளார்.
- ↑ சப்பாணி போற்றி கதைப்பாடலில் துணைக்கதையாக வருகிறார். கேசி சகோதரர்கள் இறந்து சிவலோகம் செல்லும் போது வழியில் கால் ஊனமுற்ற வாய் பேச முடியாத ஒருவர் இருக்கிறார். சகோதரர்கள் அவரை சிவலோகத்திற்கு தோளில் தூக்கிச் சென்றனர். அவரை தங்களுடனே அமர்த்திக் கொண்டனர்.
- ↑ கேசி சகோதரர்கள் ஆசான்களை விட சாதியில் ஒரு படி உயர்ந்தவர்கள். ஆசான் அதனை சோதித்து பார்க்க செய்திருக்கலாம். கேசி சகோதரர்களின் அச்செயலை பறைசாற்றும் விதமாக அப்பீடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
- ↑ பூப்படையில் மஞ்சாடி இலையுடன் தொடங்கி, மஞ்சானத்தி இலை, வேப்பிலை, பொங்கு இலை, காட்டுக் கொன்றை இலையுடன் சேர்த்து அரளிப்பூ, தெற்றிப்பூ, கமூகம் பூ, ரோஜா பூ, பிச்சி பூ கூட்டி அலங்கரிக்கப்படும்
- ↑ முன்பு இவ்விடம் வயலாக இருந்ததாகவும் அவ்வயல்பரப்பைக் கடக்க முறிந்த தென்னந்தடிகளால் ஒரு பாலம் அமைக்கப்பட்டதாகவும் செவிவழி கதைகள் உள்ளன.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:21:06 IST
