ஆர். வேலாயுத ஓதுவார்
ஆர். வேலாயுத ஓதுவார் (செப்டம்பர் 30, 1910 - மே 16, 1993), தமிழ்நாட்டின் மூத்த ஓதுவார் மூர்த்திகளுள் ஒருவர். தருமையாதீன தேவாரப் பாடசாலையின் தலைமை ஆசிரியராக அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். 300-க்கும் மேற்பட்ட ஓதுவார் மூர்த்திகளை உருவாக்கினார். 'தமிழ் இசைமாமணி' உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
வேலாயுத ஓதுவார், செப்டம்பர் 30, 1910-ல், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயேந்திரப் பள்ளியில், க.இரத்தின முதலியார் - விசாலாட்சி இணையருக்குப் பிறந்தார். மூன்றாம் வயதில் தந்தையை இழந்தார். மூன்றாம் வகுப்போடு கல்வி முற்றுப்பெற்றது. பத்தாம் வயதில் சிதம்பரம் சி.ப. தேவாரப் பாடசாலையில் நடராஜ ஓதுவார் மூர்த்திகளிடம் தேவார இசைப் பயிற்சி பெற்றார். முழுமையாகத் திருமறைகளைக் கற்றுத் தேர்ந்தார். நல்ல குரல் வளமும், இசை ஞானமும் இயல்பாகவே அமைந்திருந்ததனால் பண்ணாங்கம், சுத்தாங்கம் ஆகிய பாடப் பயிற்சிகளை ஐந்தே ஆண்டுகளில் கற்று ஓதுவார் மூர்த்திகளுள் ஒருவராக உயர்ந்தார்.
தனி வாழ்க்கை
வேலாயுத ஓதுவார், 1933-ல் அங்கம்மாளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள்.
இசை வாழ்க்கை
வேலாயுத ஓதுவார், 1925 முதல் 1928 வரை ஓதுவார் மூர்த்திகள் பலருடன் இணைந்து, வைத்தீஸ்வரன் கோயிலில் திருமுறைப் பணியில் ஈடுபட்டார். 1929-1930-ல் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஓதுவார் மூர்த்தியாகச் செயல்பட்டார். 1931-ல், தருமை ஆதீனத்தின் 23-ம் பட்ட அதிபதியின் உத்தரவுப்படி, ஆதீனத்தின் ஓதுவார் மூர்த்தியாகப் பொறுப்பேற்றார். 1941 மார்ச் முதல், 24-வது பீடாதிபதியால் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். தொடர்ந்து சுமார் 60 ஆண்டுகள் ஆதின ஓதுவார் மூர்த்தியாகவும், தேவாரப் பாடசாலை ஆசிரியராகவும் செயல்பட்டார்.
தருமபுரம் ப. சுவாமிநாதன், சீர்காழி எஸ்.திருஞானசம்பந்தம், திருச்சிராப்பள்ளி முத்துக்கந்தசாமி தேசிகர், திருத்தணி என்.சுவாமிநாதன், பழனி சண்முகசுந்தர தேசிகர், சிங்கப்பூர் எஸ்.முத்துக்குமாரசாமி தேசிகர் போன்ற தமிழ்மறை இசை மாமணிகள் வேலாயுத ஓதுவாரின் மாணவர்கள். தனது தேவார இசைப் பயிற்சிப் பணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கினார்.
சென்னை தமிழிசை மன்றத்தின் பண் ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்றார்.
ஆன்மிக வாழ்க்கை
வேலாயுத ஓதுவாரை திருமுறைகளைப் பாடும், பயிற்றுவிக்கும் பணியோடு, இன்னிசைச் சொற்பொழிவுகளும் ஆற்ற தருமை ஆதீன 25-வது பீடாதிபதி பணித்தார். அதன்படி வேலாயுத ஓதுவார், தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
வேலாயுத ஓதுவார், தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களின் தல வரலாறுகளைச் சேகரித்து குறிப்புரைகளோடும், வரலாற்றோடும் எழுதினார். தமிழ் அர்ச்சனை பற்றி தேவாரத் திருப்பதிகத் தொடர்களிலிருந்து வேலாயுத ஓதுவார் தொகுத்து அளித்த நூல் ஆதீன வெளியீடாக வெளிவந்தது. 'ஞானசம்பந்தம்' போன்ற இதழ்களில் திருமுறைகள் பற்றியும், ஆன்மிகம் குறித்தும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சில ஆன்மிக நிகழ்வுகள் குறித்தும் எழுதினார்.
விருதுகள்
- கிருபானந்த வாரியார் அளித்த 'திருமுறை ஓதுவார் ஃபேக்டரி' பட்டம்
- 25-வது தருமையாதீன அதிபதி அளித்த 'திருமுறைக் கலாநிதி' பட்டம்
- காஞ்சிப் பெரியவர் அளித்த தமிழ் இசைமாமணி பட்டம்
மறைவு
ஆர். வேலாயுத ஓதுவார், மே 16, 1993 அன்று, சென்னையில் காலமானார்.
மதிப்பீடு
வேலாயுத ஓதுவார், 300-க்கும் மேற்பட்ட ஓதுவார் மூர்த்திகளை உருவாக்கியவர். தமிழிசை வளர்த்த மூத்த இசைக் கலைஞர்களுள் ஒருவராகவும், தேவாரத் திருமுறைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்த முன்னோடி இசை ஆசிரியராகவும் அறியப்படுகிறார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:08:27 IST