under review

மாதர்நீதி அம்மானை

From Tamil Wiki
Revision as of 17:40, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாதர்நீதி அம்மானை (பதிப்பு: பொ.யு. 1895), பெண்களுக்கான நீதி போதனைகளை அம்மானை வடிவில் கூறும் சிற்றிலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர், இராமலிங்கம் பிள்ளை.

வெளியீடு

மாதர்நீதி அம்மானை நூல், மதுரை புதுமண்டபம் புத்தகஷாப் மு. ஆவுடையப்பபிள்ளை அவர்களால், சென்னை ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில், பொ.யு. 1895-ல் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் இராமலிங்கம் பிள்ளை.

ஆசிரியர் குறிப்பு

இராமலிங்கம் பிள்ளை, மதுரை வாழ் புலவர்களுள் ஒருவரான நீலமேகம்பிள்ளையின் மகன். மதுரை கெண்டமநாயக்கனூர் ஜமீன், வள்ளல்நதி செல்லமைய்யரென்று அழைக்கப்பட்ட, வெங்கிட்ட நாரசிம்ம ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பிரிட்டிஷ் இந்திய காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றினார். இவர் இயற்றிய பிற நூல்கள்: சங்கரநயினார் கோவில் கோமதியம்மன் தவமகிமை அம்மானை, ஸ்ரீமத் கம்பராமாயணத்தில் இராவணனுக்கு விபீஷணன் கூறிய புத்திமதி, கதிர்வேல் மாலை, ஸ்ரீ அநும தோத்திரம், சிவஞான சுவாமிகள் ஆனந்தக் களிப்பு, கற்கண்டு மிட்டாய்க் கண்ணி, காட்சிக் கண்ணி, சித்தர் கலிவெண்பா, தோத்திர மாலை.

நூல் அமைப்பு

அம்மானை என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த மாதர்நீதி அம்மானை நூலின் தொடக்கத்தில் கண்ணன் மீதான வணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து கலைமகள், விநாயகர், முருகன், சப்த மாதர்கள் மீதான வணக்கச் செய்யுள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நூல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

'மாதர்நீதி அம்மானை' என்பது பெண்களுக்கான நீதி மற்றும் ஒழுக்கங்களை விளக்கும் பாடல்களின் தொகுப்பு. கண்ணனின் மனைவியான சத்தியபாமா, பாண்டவர்களின் மனைவியான திரௌபதியிடம், பெண்கள், அவர்களுடைய கணவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று கேட்க, அதற்கு திரௌபதி விடை கூறுவது போன்ற முறையில் இயற்றப்பட்டுள்ளது.

கற்புடைய பெண்களின் இயல்பு, அவர்கள் கணவரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை, விதவைகள் சமூகத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், சமையல், இல்லப் பணிகள், நன்னடத்தை, அந்நிய ஆடவர்களிடம் ஒதுங்கியிருப்பது போன்ற செய்திகளுடன் சாவித்திரி வரலாறும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

பாடல்

பெண்கள் கணவரிடம் நடந்துகொள்ளும் விதம்

புருஷன் பொசித்தற்பின் புள்ளவர் பொசித்ததற்பின்
வருசையுடன் பொசித்தல் மங்கையர்க்கு மாண்பாகும்
நித்திரையைச் சற்றும் நினைக்கார்கள் கற்புடையார்
குத்திரத்தைச் சற்றும் குறிக்கார்கள் கற்புடையார்
பத்தா துயின்றதற்பின் பத்தினியும் பின்றுயிந்து
பத்தா வெழுவதன்முன் பத்தினியு முன்னெழுந்து
உரியபணி களெல்லா முகந்துசெய வேணும்
பிரியமுடன் புருஷன்பேணி மங்கை மார்களிடம்
கொடுத்த பொருளதனைக் குணமாகத்தான் வாங்கி
உருக்கமுடன் வைத்திருத்து உற்ற வரவுக்கிசைந்து

சிலவுதனைப் புரிந்து செல்வந்தனை யுயர்த்தி
இலகு புருடன்றன் னிச்சைப்படி யிணங்கி
வாழுகின்ற நாள்தனிலே வாசலிலே பிச்சையென்று
தாழ்ந்தோ ருயர்ந்தோர் தரித்திரர் கூன்குருடர்
முடவர் வியாதியுளார் முதுமறையோர் வாழ்ந்துகெட்டார்
திடமாக வந்துநின்றால் சீககிரத்தில் தானெழுந்து
ஆசாரம் தப்பாமல் அவரவர்க்குத் தக்கபடி
நேச விசுவாசமுடன் நேரிருந்து பிச்சையிட்டு
போகும்படி முகமின் புரிந்தனுப்பு வோமாகில்
ஆகங் குளிர்ந்தவர்கள் ஆசீர்வாதம் புரிவார்

விதவைகள் நடந்துகொள்ள வேண்டிய முறை

விதவை தலைமயிரை விரும்பவே கூடாது
சதமிலா வாபரணந் தரிக்கவே கூடாது
பாக்கிலைகள் தின்று பசப்பவே கூடாது
தீர்க்கமுடன் வெண்புடவை சேர்த்துடுத்த வேணுமம்மா
பாயல் பலதூளி படுக்கைக்கி யற்றாமல்
நேயமுட னிலத்தில் நித்திரிக்க வேணுமம்மா
ஒருபோது வன்ன முண்டிருப்ப தல்லாது
இருபோது சற்று மேர்க்கவே கூடாது

ஐம்பொரியை யடக்கி அட்டமி சதிர்த்தியிலும்
செம்மை யவறணையும் திருந்துவதுப் பட்டினியாம்
தியான ஜெபம்பூசை திருக்கோவிலிலே விளக்கு
நியாயமுட னிடுதல் நேசவிசு வாசமுடன்
கோவில் மெழுகல் குருபூசை தானியற்றல்
ஆவலுடன் பூவெடுத்தல் அருள் மாலைகள்
தொடுத்தல் இப்பணிகள் தப்பாம லியன்றமட்டு
நாடோரும் செய்யமுட னிவைகள் செய்துவர வேணுமம்மா

மதிப்பீடு

மாதர்நீதி அம்மானை, 19-ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் பெண்கள் சமூகத்தால் நடத்தப்பட்ட விதம், விதவைப் பெண்களின் நிலை, பெண்களைப் பற்றிய சமுதாய எதிர்பார்ப்பு, பெண்கள் மீதான சமூக ஒடுக்குமுறை போன்ற செய்திகளை அறிய உதவும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது.

பெண்களின் மீதான அடக்குமுறைச் சிந்தனைகளை 'போதனை' என்ற பெயரில் வெளிப்படுத்திய பல நூல்கள் 17, 18, 19-ம் நூற்றாண்டுகளில் தோன்றின. அவற்றுள் ஒன்றாக 'மாதர் நீதி அம்மானை' நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2025, 21:19:42 IST