under review

சி.ஆர். கண்ணன்

From Tamil Wiki
Revision as of 17:40, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
சி.ஆர். கண்ணன் (படம் நன்றி: தினமணி இதழ்)

சி.ஆர். கண்ணன் (அபர்ணா நாயுடு) (1930 - ஜூலை 9, 2009) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். திரைப்பட இயக்குநர். சாவி, தினமணி கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், குற்றப் புதினங்களையும், சிறுகதைகளையும் எழுதினார். நடிகர் கமல்ஹாசனை வைத்து 'பகடை பனிரெண்டு' என்ற படத்தை இயக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சி.ஆர். கண்ணன், 1930-ம் ஆண்டில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். இவர் பி.டி. சீனிவாச ஐயங்காரின் பேரன். பள்ளிக் கல்வி கற்றார். நடனம் கற்றார். மணமானவர். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள்.

இதழியல்

சி.ஆர். கண்ணன், எழுத்தாளர் 'சாவி' தொடங்கிய 'சாவி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சாவி தொடங்கிய 'மோனா' இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தினமணி நிறுவனம் வெளியிட்ட தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சாவியின் வலதுகரமாக இருந்து இதழைத் திறம்பட நடத்தினார். அனுராதா ரமணனின் பல சிறுகதைகளை கதிரில் வெளியிட்டு ஊக்குவித்தார். 'மந்திரக்கோல்' என்ற இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார்.

சி.ஆர். கண்ணன் (பழைய படம் நன்றி)
பிரீகேட் ரோட்

இலக்கிய வாழ்க்கை

சி.ஆர். கண்ணன் சாவி இதழில் பல சிறுகதைகளை எழுதினார். 'சாவி' இவருக்கு 'அபர்ணா நாயுடு' என்ற புனைபெயரைச் சூட்டினார். அப்பெயரில் எழுதிப் பிரபலமானார். மணியன் (இதழ்), இதயம் சிறுகதைக் களஞ்சியம், தினமணி கதிர், கல்கி, குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகளையும், தொடர்களையும் எழுதினார். கல்கியில் தொடர்ந்து திரை விமர்சனங்களை எழுதினார். 'சகுந்த்' என்கிற புனை பெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ந்து எழுதினர். சி.ஆர். கண்ணன் பொதுவாசிப்புக்குரிய குற்றப் புதினங்களையும், நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார்.

தனது பாட்டனார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சி.ஆர். கண்ணன் எழுதிய 'இந்தியாவின் கதை' குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது.

மொழிபெயர்ப்பு

சி.ஆர். கண்ணன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். அவரது மொழிபெயர்த்த சிறுகதைகளில் சில 'தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்' என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தது.

திரை வாழ்க்கை

சி.ஆர். கண்ணன் முறையாக நடனம் கற்றார். திரைப்படங்களில் நடனக் குழுவில் பணியாற்றினார். திரைக்கதை விவாதக் குழுவிலும் இடம்பெற்றார். சி.ஆர். கண்ணன் எழுதிய 'பகடை பனிரெண்டு' என்ற நாவல், அதே பெயரில், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் திரைப்படமாக வெளியானது.

மறைவு

சி.ஆர். கண்ணன், ஜூலை 9, 2009 அன்று தனது 79-ம் வயதில் சென்னையில் காலமானார்.

மதிப்பீடு

சி.ஆர். கண்ணன் 1970 -1980 காலகட்டங்களில் எழுத்துலகின் பல களங்களில் பணியாற்றினார். திரையுலகிலும் பங்காற்றினார். பொது வாசிப்புக்குரிய எழுத்து, மொழிபெயர்ப்பு, இதழியல், திரைப்படம் எனப் பங்காற்றியவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • தற்கால ஜெர்மானிய சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
  • ஜப்பானியக் கதைகள்
  • இந்தியாவின் கதை
  • புகழ் பெற்ற கதைகள் (ஜே. ஜான் துரைராஜ், மு. செல்வநாதன் உடன் இணைந்து எழுதியது)

உசாத்துணை


‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2025, 20:14:12 IST