64 சிவவடிவங்கள்: 30-சிம்ஹக்ன மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சிம்ஹக்ன மூர்த்தி (சரபேஸ்வரர், சரபேஸ்வர மூர்த்தி).
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பதாவது மூர்த்தம் சிம்ஹக்ன மூர்த்தி. இரண்யகசிபுவை அழித்த நரசிம்மரின் ஆக்ரோஷத்தை அழிக்கச் சிவபெருமான் எடுத்த திருக்கோலமே சிம்ஹக்ன மூர்த்தி. சரபேஸ்வர மூர்த்தி என்ற பெயரும் இவருக்கு உண்டு.
இவ்வடிவத்தின் திருமேனி பொன்னிறமுடைய பறவையைப் போன்றது. இதன் கைகள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும். இரண்டு கண்களும் சிவந்திருக்கும். இவருக்கு எட்டு கால்கள். விலங்கின் வாலைப் போன்ற வாலுடன், மனிதரைப் போன்ற உடலையும், சிம்மத்தின் தலையையும், மகுடத்தையும், இரு பக்கத் தந்தங்களையும் கொண்டிருப்பார். தன் இரு கால்களாலும் நரசிம்மரை தூக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் திரு உருவம் உள்ளது. இந்த வடிவத்தை ஆகாச பைரவர் என்று உத்தர காமியாகமம் கூறுகிறது.
சரபேஸ்வரருக்கு சூரியன், சந்திரன் ஆகியவை கண்களாய் உள்ளன. காளியும், துர்க்கையும் சரபேஸ்வரரின் இறக்கைகள். இவரின் இதயத்தில் பைரவரும் வயிற்றில் வடவாக்னியும் தலையில் கங்கையும் வீற்றிருக்க, தொண்டையில் நரசிம்மர் இருப்பார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இவரது பெருமைகளை விளக்கும் நூல்கள் பலவும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன.
தொன்மம்
இரண்ய கசிபு என்ற அசுரன் அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தால் மகிழ்ந்த சிவன் "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஐம்பூதங்களாலும், எந்த விதமான கருவிகளாலும், வானவர், மனிதர்கள், பறவைகள், விலங்குகளாலும், இரவிலும், பகலிலும், வானத்திலும், நிலத்திலும், வீட்டின் உள்ளேயும், வெளியேயும் என மேற்சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வேண்டும்" என்று வரம் கேட்டுப் பெற்றான்.
இரண்ய கசிபு தான் பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான். தேவகன்னிகளை விசிறி வீசவும், இந்திரன், நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும், தன்னைத் தவிர மற்றவர்களை யாரும் வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான்.
திருமாலை வெற்றி கொள்வதற்காக அவரை மூன்று லோகத்திலும் தேடினான். திருமால் அவனை அழிக்கும் காலம் வரும்வரையில் மாயையினால் தன்னை மறைத்து நின்றார்.
அவனுக்குப் பயந்து அனைவரும் அவன் சொற்படி 'இரண்யாய நமஹ' என்று சொல்லித் துதித்தார்கள். ஆனால், இரண்ய கசிபுவின் மகனான பிரகலாதன் மட்டும் 'ஓம் நமோ நாராயணாய நமஹ' என்று சொல்லி வழிபட்டான். இதனால் ஆத்திரமடைந்த இரண்ய கசிபு, தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனுக்குப் பலவித தொல்லைகளைச் செய்தான். கொலை முயற்சியும் மேற்கொண்டான். திருமால் அவற்றிடமிருந்து பிரகலாதனைக் காத்தார்.
பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனையே துதிப்பதால் சினம் கொண்ட இரண்ய கசிபு, "ஒருநாள் எங்கே இருக்கிறான் உன் நாராயணன், எனக்குக் காட்டு" என்று கேட்டான். "நாராயணன், தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்" என்றான், பிரகலாதன்.
"இதோ இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்?" என்றபடியே ஆத்திரத்துடன் தன் கதாயுதத்தால் இரண்ய கசிபு தூணைப் பிளக்க, பிளந்த தூணின் உள்ளிருந்து திருமால் நரசிம்ம அவதாரமெடுத்துத் தோன்றினார். அந்தப் பொழுது பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் சூரியன் மறையும் அந்தி நேரமாக இருந்தது. மனிதனும் இல்லாமல் மிருகமும் இல்லாமல் இரண்டும் கலந்த உருவமாக, நரசிம்மர் தோன்றி, தன் கை விரல் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு இரண்யனைக் கொன்றார்.
இரண்யனைக் கொன்ற பின்னும் கோபம் தணியாமல் திருமால் ஆக்ரோஷத்துடனேயே இருந்தார். பயத்தில் தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய, சிவன் இரண்டு தலை, இரண்டு சிறகுகள், கூர்மையான நகங்கள், எட்டுக் கால்கள், நீண்ட வாலுடன், பேரிரைச்சலுடன் சரப அவதாரம் எடுத்து நரசிம்மரை நோக்கி வந்தார். நரசிம்மரின் தலையையும், கைகளயும் துண்டித்து, தோலை உரித்துத் தன்னுடலில் போர்வையாகப் போர்த்திக் கொண்டார்.
இரண்யகசிபுவை அழித்த நரசிம்மரின் ஆக்ரோஷத்தை அழிக்க, சிவபெருமான் கொண்ட கோலமே சிம்ஹக்ன மூர்த்தி. நடுக்கம் தீர்த்த பெருமான், சிம்ஹக்ன மூர்த்தி, சிம்ஹாரி, நரசிம்ம சம்ஹாரர், சரபேஸ்வரர், சரபர் எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளன.
வழிபாடு
கும்பகோணம் அருகேயுள்ள 'திரிபுவனம்' என்ற தலத்திலுள்ள கம்பஹரேஸ்வரர் கோயிலில் சரபமூர்த்திக்கு என்று தனியாகச் சன்னதி உள்ளது. தடைகள் விலகவும், திருமணம் கைகூடவும் இங்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்லி வழிபடும் வழக்கம் உண்டு. நற்பலன்களுக்காக சரபர் முன்பு சரப யாகமும் செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டிலுள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில், முன் மண்டபத் தூண்களில் சரப மூர்த்தி காட்சி தருகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் சரப மூர்த்தியை மக்கள் வழிபடுகின்றனர். உடல்நலனுக்காக சரபருக்கு திராட்சை ரச அபிஷேகமும், தடைகள் அகலவும், அமைதியான வாழ்க்கைக்கும் பிரதோஷம், திங்கள்கிழமைகளில் செந்நிறத் தாமரை மலரால் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் செய்யப்படுகின்றன.
தாராசுரத்தில் இரண்டாம் இராஜராஜன் கட்டிய ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவிலில், ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சரபேஸ்வரரின் திருவடியில், கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். சென்னையில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலிலும், சென்னை வைத்தியநாதர் கோவிலிலும் சரபேஸ்வரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. சென்னை சேலையூர் ஸ்கந்தாச்ரமத்திலும் சரபேஸ்வரருக்குத் தனிச்சன்னதி உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 21:02:04 IST