under review

64 சிவவடிவங்கள்: 24-ஜ்வராபக்ன மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜ்வராபக்ன மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஜ்வராபக்ன மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் இருபத்தி நான்காவது மூர்த்தம் ஜ்வராபக்ன மூர்த்தி. கண்ணனுடன் போர் புரிய சிவபெருமான் எடுத்த திருக்கோலமே ஜ்வராபக்ன மூர்த்தி. மூன்று தலைகள், நான்கு கரங்கள், ஒன்பது விழிகள், மூன்று கால்களுடன் காட்சி தருபவர். இடது கால் நடன கோலத்தில் தூக்கியும், மற்ற இரு கால்கள் நிலத்திலும் இருக்கும். இடக்கைகளில் ஒன்று வீசிய கையாகவும். மற்றொரு கையில் படைக்கலமும், வலக்கைகளில் உடுக்கையும் அபய முத்திரையும் இருக்க 3 தலைகளுக்கு மேல் தீச்சுடரும், கால்களுக்கு கீழே ஸ்ரீ சக்கரமும் அமைந்த கோலம் ஜ்வராபக்ன மூர்த்தி.

தொன்மம்

மகாபலி மன்னனின் மகன் வாணாசுரன் ஆயிரம் கைகள் கொண்டவன். அவனது மனைவி சுப்ரதீகை. அவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்குத் தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சி அளித்து, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவன், உலகம் முழுவதும் தான் அரசாட்சி செய்யவேண்டும் என்றும், நெருப்பினால் ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை அன்பும் வேண்டும் என்றும் கேட்டான். சிவபெருமானும் அவன் கோரிய வரங்களைக் கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் தன் வசம் கொண்டு வந்தான் வாணாசுரன்.

சில காலத்திற்குப் பின் மீண்டும் ஒருமுறை சிவபெருமானைத் தரிசிக்க விரும்பி கயிலை மலைக்குச் சென்றான். அங்கு ஆயிரம் கைகளினாலும் குடமுழா என்ற வாத்தியத்தை வாசித்தான். மீண்டும் சிவபெருமான் 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டதிற்கு, "இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வந்து வசிக்க வேண்டும்" என்று கேட்டான். சிவபெருமானும் மனம் ஒப்பி குடும்ப சமேதராய் அவனது மாளிகைக்குச் சென்று வாழ்ந்தார்.

இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு அழைத்துத் தோற்கடித்தான். அதனால் அவனுடன் அடுத்துப் போர் புரிய யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

ஆணவத்தால் வாணாசுரன், சிவபெருமானைத் தன்னுடன் போர்புரிய வரும்படி அழைத்தான். சிவனோ, 'எனக்குப் பதிலாக கண்ணன் வருவான்' என்றார். 'கண்ணன் எப்பொழுது வருவான்?' என்று வாணாசுரன் கேட்க, சிவனும், 'உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள். அந்தச் செய்தி கிடைக்கும் போது அவன் போருக்கு வருவான்' என்றார்.

நாளடைவில் அதன்படியே நடந்தது. வாணாசுரனின் மகள் உஷைக்கும், கண்ணனின் மகன் அநிருத்தனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர் புரிய வந்தான். முதல் வாசலில் உள்ள விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் உள்ள முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உள்ள உமாதேவியிடம் ஆசி வாங்கி உள்ளே சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமான் வீற்றிருந்தார்.

உடன் சிவபெருமான், கண்ணனைத் தன்னுடன் போர் புரிய அழைத்தார்.

கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் கண்ணனைத் தேற்றி, 'வாணாசுரனிடம் நடைபெறும் போரில் நீயே வெல்வாய்; அதற்கு முன் எண்ணிடம் போர் புரி" என்று சொன்னார். அதன்படி இருவருக்கும் போர் நடைபெற்றது. எத்தனைக் காலமென யாராலும் கணிக்க முடியாதபடி போர் நீண்டது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க, போர் நின்றது.

பின் கண்ணனுக்கும் வாணாசுரனுக்கும் போர் நடைபெற்றது. பாணாசுரனின் கரங்கஅள் அனைத்தும் துண்டாயின. சிவனைத் தொழுத கைகள் மட்டும் வெட்டாமல் விடப்பட்டன. ஆணவம் நீங்கி மனம் மாறிய வாணாசுரன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்ட, சிவபெருமானும் அவனை மன்னித்தார். மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் மறுபடியும் குடமுழா வாசிக்கப் பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது.

கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில், கண்ணன் தொடுத்த சீதள(குளிர்) ஜுரத்தை சிவபெருமான் விட்ட உஷ்ண ஜுரம் வென்றது. உஷ்ண சுரம் மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று கால்களுடன் இருந்தது. சிவபெருமானின் அக்கோலமே ஜ்வராபக்ன மூர்த்தி என அழைக்கப்பட்டது.

வழிபாடு

நாகப்பட்டினம் அருகேயுள்ள சாட்டியகுடியில் சிவபெருமான் ஜ்வராபக்ன மூர்த்தியாகக் கோவில் கொண்டிருக்கிறார். சாட்டியம் என்றால் சுரம் என்பது பொருள். சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வணங்கிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது. இங்கு இறைவன் ஜ்வர தேவராகவும், அம்பாள் வேதநாயகியாகவும் காட்சி தருகின்றனர். ஜ்வர தேவரை வணங்க வெப்ப நோயின் தீவிரம் குறைந்து, தீராத சுரம்(காய்ச்சல்) குணமடையும் என்பது நம்பிக்கை. பசுந்தயிர் அபிஷேகமும், புதன், திங்கள் கிழமைகளில் வெள்ளை அல்லி அர்ச்சனையும், சுக்குக் கஷாய நைவேத்தியமும் சுரத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 21:00:50 IST