சிவவடிவங்கள்: 55-கௌரிலீலா சமன்வித மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கௌரிலீலா சமன்வித மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி ஐந்தாவது மூர்த்தம் கௌரிலீலா சமன்வித மூர்த்தி. சிவபெருமான், கௌரியாகிய பார்வதியுடன் காட்சி தரும் ரூபமே கௌரிலீலா சமன்வித மூர்த்தி.
தொன்மம்
சிவபெருமான், திருக்கயிலையில் சிங்காசனத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது பார்வதி தேவி அருகில் வந்து, "இறைவா எங்கும் நிறைந்துள்ள தேவருடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும்" என்றுக் கேட்டார் அதற்குச் சிவபெருமான், 'உருவம், அருவம், அருஉருவத்துடன் இருப்போம்' என்றார் பார்வதிக்கு அது புரியாததால் விரிவாக விளக்கினார். "யாமே உன்னிலும், அனைவரிடத்தும் உள்ளோம். நானில்லையெனில் அனைவரும் ஜடப்பொருளுக்கு ஒப்பாவர்" என்றார். அதனை விளக்க அனைத்து உயிர்களின் உள்ளத்தில் சென்று அறிவை மழுங்கடித்து ஜடப் பொருளாக்கினார், இதனால் மனம் வருந்திய பார்வதி சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார் அனைவருக்கும் நலமுடன் நல்லறிவைக் கொடுக்கச் சொன்னார்
ஆனாலும் தான் செய்த தவறுக்குப் பிராயசித்தமாகப் பார்வதி தேவி பூமியில் அவதரித்தார். தட்சனின் மகளாக யமுனை நதியோரத்தில் வளர்ந்தார். தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். பனிரெண்டு ஆண்டுகள் கடுமையான தவம் மேற்கொண்டார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு வந்து தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாகச் சொன்னார். பார்வதி தேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். உடன் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டியருளினார். இவ்விஷயம் தட்சனுக்குத் தெரிந்து சிவபெருமானுக்கும் தாட்சாயிணிக்கும் நல்லநாள், நல்முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்வித்தார்.
திருமணம் நடைபெற்றவுடன் சிவபெருமானும், தேவர் குழாமும் மறைந்தனர். தாட்சாயணி தனது தவச்சாலையில் காலம் கழித்தார். பின்னர் சிவபெருமான், இடபாருடராக வந்து தாட்சாயிணியைத் திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார். இதனால் தன்னை மதிக்காத சிவன் மேல் தட்சன் பெரும்கோபம் கொண்டவனாக மாறினான். இவ்வாறு திருமணம் செய்த தேவியரை விட்டு மறைந்து, பின் வந்து அழைத்த மூர்த்தமே, அதாவது கௌரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே கௌரிலீலா சமன்வித மூர்த்தி.
வழிபாடு
வலங்கைமான் அருகேயுள்ளது பூவனூரில் கௌரி லீலா சமன்வித மூர்த்தியை காணலாம். இங்கமைந்த இறைவன், புஷ்பவனநாதர், இறைவி ராஜராஜேஸ்வரி. இங்கிருக்கும் கிருஷ்ண தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும் என்பது ஐதீகம். மேலும் சாமுண்டீஸ்வரி சந்நிதியில் கொடுக்கப்படும் வேரைக் கட்டிக்கொள்ள விஷக்கடிகள் அனைத்தும் குணமாகும், மூலவருக்கு மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், பழவகை நைவேத்தியமும், நல்லெண்ணைய் தீபமும் வெள்ளிக்கிழமைகளில் அளித்து வழிபட நீண்ட ஆயுளும் கல்வியறிவும், உயர் பதவியும் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது..
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2024, 12:55:55 IST