under review

வெறிபாடிய காமக்கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 16:00, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெறிபாடிய காமக்கண்ணியார் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத் தொகை நூல்களில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவரின் பாடல்களில் முருகன் வழிபாடு, வெறியாட்டு என்ற சடங்கு பற்றிய குறிப்புகள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வெறிபாடிய காமக்கண்ணியார் சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர். வெறியாட்டு விழாவைப் பற்றிய பாடல்களைப் பாடியதால் இவருக்கு வெறிபாடிய காமக் கண்ணியார் என்ற பெயரை அறிஞர்கள் இட்டனர். காமக்கண் என்பது வெறியாடும் பெண்ணின் காமக்கண்.

இலக்கிய வாழ்க்கை

வெறிபாடிய காமக்கண்ணியார் பாடிய ஐந்து பாடல்கள் சங்கத்தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் உள்ளன. இவரின் பாடல்களில் முருகன் வழிபாடு, வெறியாட்டு என்ற சடங்கு பற்றிய குறிப்புகள் உள்ளன.

பாடிய பாடல்கள்
  • புறநானூறு 271, 302
  • அகநானூறு 22, 98
  • நற்றிணை 268

பாடல் வழி அறியவரும் செய்திகள்

வெறியாட்டு
  • காரணம்: தலைவி களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது திருமணம் நடப்பதற்குக் கால தாமதம் ஆனால் அல்லது தலைவனின் காதல் பிரிவால், காதல் பிணக்கால் நோயுற்று உண்ணாமல், உறங்காமல் உடல் மெலிந்து கை வளை நெகிழ்ந்து வாடுவது வழக்கம். அவள் அவ்வாறு வாடும்பொழுது அவள் தாய், தன் பெண்ணின் மீது தெய்வம் ஏறியதால்தான் அவள் அவ்வாறு வாடுகிறாள் என்று எண்ணி முருகன் கோயில் பூசாரியை அழைத்து முருகனுக்குப் பூசை நடத்துவாள். இந்தப் பூசை வெறியாட்டு என்று அழைக்கப்பட்டது. இதனை முருகாற்றுதல் என்றும் அழைப்பர்.
  • சடங்குகள்: பூசாரி ஒரு வேலை நட்டு அதை முருகனாகப் பாவித்து, குருதியைக் கலந்த தினையை அந்த வேல்மீது எறிந்து பூசை நடத்தி முருகனை அழைப்பான். தலைவியின் வாடிய நிலைக்கு முருகன்தான் காரணம் என்று கூறி, முருகனைத் தலைவியின் உடலிலிருந்து விரட்டுவதற்காகப் பூசாரி ஆவேசமாகக் கூத்தாடுவான். இந்தச் சடங்கில் களம் உருவாக்குதல், தோரண மாலைகளைத் தொங்கவிடல், ஊரே எதிரொலிக்கும்படி கைச்சிலம்பை ஆட்டிக்கொண்டு பாடுதல், ஆட்டை உயிர்ப்பலி கொடுத்தல், அதன் குருதி தோய்ந்த சிவப்புநிற தினை-அரிசியை தூவுதல் ஆகியவை நடைபெறும். இதன் மூலம் தலைவியின் துயரம் தீரும் என்பது நம்பிக்கை.
  • "மேளத்தாளம் முழங்க வெறியாடும் களம் அமைத்து, அகன்ற பெரிய பந்தல் போட்டு ஆட்ட பாட்டத்துடன் விழா நடத்துவர். வேலன் வெண்நிறப் கடம்பு மலரைச் சூட்டிக்கொண்டு மென்மையாக இனிய சீரிசையால் பாட்டுப் பாடிக்கொண்டு வருவான். கையை ஆட்டிக்கொண்டு 'முருகா' என்று பெரும்பெயரைச் சொல்லி வாழ்த்திக்கொண்டு வெறியாட்டு மேடை சிறக்கும்படி வருவான். பொம்மலாட்டத்தில் வல்லவன் நடத்திக்காட்டும் பொம்மை போல தலைவை முருகு ஆட்டிவைப்பான்" என்பதையும் பாடல்கள் வழி அறிய முடிகிறது
புறநானூறு 302
  • குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களைப் பற்றிய பாடல்
  • வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன.
  • ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்படும். இதில் பொன்னாலான பூக்களும் இருந்தன.
  • மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன.
புறநானூறு 271
  • நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவர்.
  • நொச்சி மாலையை அணிந்து மதிலைக் காக்கும் வீரன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் உள்ளது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றது.
அகநானூறு 98

"பனிமலையில் உயர்ந்த மலைமுகடுகளுக்கு இடையில் இருக்கும் கணவாய் மலைப்பிளவு பகுதியில், பிணக்கிக்கொள்ளவே முடியாத இனிமையைத் தந்த தலைவனின் இனிய உள்ளம் இப்போது இன்னாததாக மாறிவிட்டது. எனக்கு நேர்ந்துள்ள இந்தத் துன்பம் அவனது மார்பினைப் பெற்றால் அன்றித் தணியாது என்பதை அறியாத அன்னை முருகன் வெறியாட்டு நடத்த முனைகிறாள். என் தோளிலே செறிவாகக் கிடந்த வளையல் நெகிழ்ந்து நழுவுவதை தாய் பார்த்துவிட்டாள் அவள் இதைச் செய்கிறாள். ஆனால் இந்த முருகாட்டு பலனளிக்கப்போவதில்லை. ஆனால் என் தலைவன் இதை வேறு விதமாக எடுத்துக் கொண்டால் நான் உயிர்வாழமாட்டேன" என தலைவி தோழியிடம் சொன்னாள்

அகநானூறு 22

"அழகால் நெஞ்சை அள்ளும் மலை உச்சியிலிருந்து இறங்கும் அருவிகள் பல ஒன்று திரண்டு கொட்டும் கானக நாடனான அவனது மணம் கமழும் மார்பின்ப நினைவு என்னை வருத்திக்கொண்டிருக்கிறது. இது அறியாமல் ஊரார் பேச்சைக் கேட்டு வீட்டில் என்னை முருகாற்றுப் படுக்கும் விழா நடைபெறுகிறது. அப்போது யானையைத் தாக்கும் புலி போலப் பதுங்கி வந்த என் காதலன் என்னைத் தழுவ, முருகாற்றுப்படுக்கும் சாமியாடி வேலன் ஏமாந்ததை எண்ணி நான் சிரித்ன்." என தலைவி தோழியிடம் சொன்னாள்.

நற்றிணை 268

"உயர்ந்த முகடுகள் கொண்ட மலைப் பரப்பில் அச்சம் தரும் வகையில் நீர் பெருகும்படி பெருமழை பொழிந்துள்ளது. இல்லத்தில் ஓவியம் வரைந்தது போல், மலையில் தேன் ஊறும்படி அந்தக் கருமையான சூழலில் மென்மையாக வான் போலப் குன்றமே குறிஞ்சிப் பூ பூத்துக் கிடக்கிறது. குறிஞ்சி பூத்துக் கிடக்கும் நாடன் மேல் நான் காதல் கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தும் வீட்டு முற்றத்தில் மணலைப் பரப்பி, விழாக்கோலம் செய்து, கழங்கினை உருட்டிக் குறி சொல்லும் வேலனை எதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள்?" என தலைவி தோழியைக் கேட்டாள்.

பாடல் நடை

புறநானூனு 271

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,
வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!
(திணை: நொட்சி)

புறநானூறு 302

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும்,
தண்பெயல் உறையும், உறையாற் றாவே
(திணை: தும்பை)

அகநானூறு 22

அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
(திணை- குறிஞ்சி)

அகநானூறு 98

பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
(திணை - குறிஞ்சி)

நற்றிணை 268

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே.
(திணை- குறிஞ்சி)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Sep-2023, 04:01:35 IST